தெள்ளுக் கண்ணும்... தீட்டுன மூக்கும்
விட்டெறிந்த குறி தப்பவில்லை.
“ஆத்தாடீ… கொலைகாரி… கொன்னுட்டாளே!”
நெஞ்சைக் குறிவைத்து குமராயி விட்டெறிந்த நார்ப்பெட்டி, தாழ்வாரத்தில் அமர்ந்து கம்பரிசி புடைத்துக்கொண்டிருந்த தாயார் செல்லம்மாவை மல்லாக்க விழுத்தாட்டியது.
சொளகில் இருந்த கம்பரிசி, தாழ்வாரம் முழுக்க சிதறியது. இரை பொறுக்கிகொண்டிருந்த தாய்க் கோழியும் குஞ்சுகளும் குலைபதறக் கூச்சலிட்டுப் பறந்தன.
மல்லாந்து கிடந்த செல்லம்மா, “அடியேய்… நாசமாப் போறவளே! என்னைக் கொல்லத் திரிஞ்சியேடீ… பாவி! எம் மேலே ஒனக்கு என்னடி அம்புட்டுக் கோவம்?” திட்டிக்கொண்டே புரண்டு எழுந்தாள்.
கொல்லம்பட்டறை துருத்தி அடுப்பு நெருப்பாய் சீறிக்கொண்டு வந்த குமராயி, செல்லம்மாவின் முன்னே வந்து நின்றாள்.
“எங்கே அவன்?”
“எவன்டீ?”
“ஒம் மகன்காரன்.”
“அவனை நான் என்ன முந்தியிலேயா முடிஞ்சு வச்சுருக்கேன்? எளவட்டப்பய… எங்கிட்டாவது வெளியே போயிருப்பான். அதுக்கு ஏன்டீ எம் மேலே பெட்டியை எறிஞ்சே?”
“எளவட்டப்பய மாதிரியா இருக்கான் ஓம் மகன்? ஏனவாய்ப் பயலாவுலெ இருக்கான்!”
“அடியேய்… இந்தப் பெருநாழியிலே ஓந்தம்பி கருப்பையாவை மிஞ்சுன ஒரு எளவட்டத்தைக் காட்டுடீ பார்ப்போம்?”
“அதிலே ஒண்ணும் கொறச்சலில்லே. நம்ம இப்பிடி பெருநாழிக்குள்ளேயே பேசிக்கிட்டுத் திரிய வேண்டியதுதான். அந்த வெள்ளாங்குளத்துக் காரியக்காரி, எல்லாத்தையும் வாரிச் சுருட்டி வழிச்சுக்கிட்டு போயிட்டா.” தாழ்வாரத் திண்ணையில் உட்கார்ந்தாள் குமராயி.
“வெள்ளாங்குளத்துக்காரின்னா… ஓந் நாத்துனா அரியநாச்சிதானே? அவ என்னத்தை வாரி வழிச்சுட்டுப் போனா?” சிதறிக் கிடக்கும் கம்பரிசியை வழித்து அள்ளி சொளகில் போட்டுப் புடைக்க ஆரம்பித்தாள்.
“எம் புருசன் வீட்டு பொம்மழிச் சொத்தை எல்லாம்தான்.”
“அவ சொத்தை அவ கொண்டுபோறா. உனக்கென்ன வந்துச்சு?”
தாயாரின் குமட்டில் குத்தப் போனாள் குமராயி. “நீ ஒரு கூறுகெட்ட பொம்பளையாவுல்லே இருக்கே! ஒங்கப்பன் துரும்பாட்டி ஒரு வெவரங்கெட்ட ஆளு. அவரு புத்திதான் ஒனக்கு. ஓம் புத்திதான் ஓம் மகனுக்கும். ஒரு வெவரமும் கெடையாது… ஒரு காராட்டியமும் கெடையாது.”
செல்லம்மா, கைவாக்கில் இருந்த நார்ப்பெட்டியை எடுத்து குமராயியின் தலையில் ஓங்கி அறைந்தாள்.
“அடியேய்… என் வம்சத்தை இழுத்துப் பேசுனே ஒனக்கு மருவாதி கெடையாது. நீ மட்டும் எங்கே இருந்து வந்தவ?” வானத்தை காட்டி, “ஒசக்க இருந்தா குதிச்சே?” ரெண்டு கைகளாலும் தன் அடிவயிற்றில் ‘ச்சப்ப்’ என ஓங்கி அறைந்தாள். “இங்கே இருந்து வந்தவதானே?”
தாயார் செல்லம்மாவின் வலது கையைப் பிடித்துப் பாந்தமாய்த் தன் மடியில் வைத்துக்கொண்ட குமராயி, “அடே… அதை விடுத்தா. நான் சொல்றத கொஞ்சம் கேளு” என்றாள்.
விருட்டென கையை உருவிய செல்லம்மா, “பெட்டியை எறிஞ்சு என்னைக் கொல்லத் திரிஞ்சவ நீயி. நீ சொல்றத நான் கேக்கணுமாக்கும்?” சீறினாள். “மூச்சுக்கு முன்னூறு தரம் கோவப்படுறதும் நீதான்… குழையிறதும் நீதான். ஒரு குடியான குடும்பத்துப் பொம்பளைக்கு இந்தக் குணம் ஆகாதுடீ. கொலைப்பழியிலே கொண்டுபோயி விட்டுரும்.”
ஆத்தாக்காரி சொல்வதைக் காதிலேயே வாங்காத குமராயி, “வேகாத வெயில்லெ காரேறி பாளையங்கோட்டை போயிருக்கா இந்த அரியநாச்சி. தங்கச்சி மாயழகியை, தங் கொழுந்தன் சோலைப் பயலுக்குக் கட்டிவச்சா சொத்துப் பூராவும் அங்கே
தானே போகும்?” நிறுத்திக் கொஞ்சம் மூச்சு விட்டாள்.
“செம்மக் கைதியா செயில்லெ கெடக்குற ஏம் மாமன்கிட்டெ என்னத்தைச் சொல்லி அழுதாளோ… அவரும் ‘சரி’ன்னு தலை ஆட்டிட்டாராம்.”
“இதென்ன கூத்தா இருக்கு!” என்ற செல்லம்மா, “உன் புருசனுக்குதான் வெள்ளாங்குளம்னா பச்சநாவியாச்சே. அவரு என்ன சொன்னாரு?” மறுபடியும் கம்பரிசியைப் புடைக்க ஆரம்பித்தாள்.
“நான் விடுவனாக்கும்! நல்லா முறுக்கேத்தி விட்டுட்டேன்.” ‘க்ளுக்’ என ஒரு வஞ்சகச் சிரிப்பு சிரித்தாள். “என் வீட்டு ஆம்பளை எஞ்சொல்லைக் கடப்பாராக்கும்?” தலையை ஒரு சிலுப்பு சிலுப்பினாள். “உடனே காரேறிட்டாரு. மாயழகியை என் மச்சினன் கருப்பையாவுக்குக் கட்டிவைக்கப் போறேன்னு அவுக அய்யாவுக்குத் தாக்கல் சொல்ல ஜெயிலுக்கு போயிட்டாரு.”
“அது சரி. பொண்ணுப்புள்ள என்ன சொல்லுது?”
“யாரு?”
“மாயழகிதான்…”
“நீ என்னத்தா… நம்ம சாதியிலே இல்லாத ஒரு வழமையை சொல்றே! அவ என்ன சொல்றது? வீட்டுக்குப் பெரிய ஆம்பளை ஏம் புருசன். அவரு கைகாட்டுற மாப்பிள்ளை… தொத்தலோ தொருசோ, அவனுக்கு வாக்கப்பட்டுப் போறதுதானே நம்ம சாதி வழமை. மாட்டேன்னு மறுத்தா தங்கச்சீன்னு கூடப் பார்க்காமல் கழுத்தை அறுத்துப் போட்டுற மாட்டாரு?”
சொளகு அரிசி மேலேயே இருந்த கண்ணை குமராயி பக்கம் திருப்பிய செல்லம்மா, “ஓந் தம்பிக்காரனுக்கும் மாயழகிப் புள்ள மேலே ஒரு பக்கம் ஆசை இருக்கும்னு நெனைக்கிறேன்!” பெருமையாய் சொன்னாள்.
“ஆமலூ! நீதான் அவனை மெச்சிக்கிறனும். ஒரு எளவட்டப்பய… மனசுக்குள்ளயே ஆசையை வச்சுக்கிட்டு இருந்தா போதுமாக்கும்? இவன் என்ன அந்நியத்தானா? மாயழகி இவனுக்கும் செல்ல வேண்டிய மாமன் பொண்ணுதானே? அதுவும் அக்கா புருசன் கூடப் பிறந்த தங்கச்சி! நேரா ஏம் புருசன்கிட்டெ வந்து, ‘மச்சான்… மச்சான்… ஒங்க தங்கச்சியை நான் கெட்டிக்கிறேன்’னு ஒரு வார்த்தை சொல்லச் சொல்லு. மத்ததை நான் பார்த்துக்கிறேன்.”
“ஆமடீ கொமராயீ… விட்டுறக் கூடாது. மாயழகிப்புள்ள இருக்குற அழகுக்குப் பொருத்தமான மாப்பிள்ளை இந்த ஆப்பநாட்டுலெ எவன் இருக்கான்? சாட்டைக் கம்பு மாதிரி சதுரமும் தெள்ளுக் கண்ணும்… தீட்டுன மூக்கும்… ஆத்தாடீ இவ ஒரு அழகியாவுலெ பெறந்திருக்காள்!” வாய்ப்பாறினாள் செல்லம்மா. “எப்பிடியாவது ஓந் தம்பிக்காரனுக்கு மாயழகியை முடிச்சுப் போடணும்டீ.”
“அப்புறம் நான் எதுக்கு அந்த வீட்டுலெ குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன்?” என்றபடி எழுந்தவள், “இதைச் சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன். கருப்பையா வரவும் சொல்லு,” என்றவள், தாயாரின் தலையில் ஒரு இடி இடித்து, “என்ன… சொல்லுவியாத்தா?” என்றாள்.
மகள் குமராயியை வெறித்துப் பார்த்த செல்லம்மா, “அடியேய்… அதுக்கு ஏன்டீ ஏந் தலையிலே இந்த இடி இடிக்கிறே?” தன் தலையைத் தடவினாள்.
“ஓமலூ… இப்பிடீன்னு தலையிலே தட்டவும் துரும்
பாட்டி மகளுக்கு கோவம் பொத்துக்கிட்டு வருதோ?” மறுபடியும் சீண்டிவிட்டு முற்றம் தாண்டி நடந்து போனாள்.
கம்பி வலைக்கு அப்பால் நிற்கும் வெள்ளையத் தேவனின் கண்களில் தாரைதாரையாய் நீர் ஓடுகிறது.
“எய்யா… பாண்டி! மாயழகிப்புள்ள என்னப்பா செய்யுது? கலங்காம இருக்குதா?”
அழுகையும் கண்ணீருமாகச் சிறைச்சாலைக் கம்பிகளுக்குள் தகப்பன் வெள்ளையத் தேவனைப் பார்க்க பார்க்க, பாண்டியின் உயிர் இற்று விழுகுது.
கம்பி வலையில் முட்டிக்கொண்டு, ‘மூசு… மூசு’ன்னு அழுகிறான்.
“அய்யா… என் அய்யா!” கண் கொண்டு பார்க்க முடியலே. ரெண்டு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டு கேவிக் கேவி அழுகிறான்.
“எய்யா… பாண்டி! ஏன்யா அழுகிறே? அழுகாதப்பா…” சொல்லிக்கொண்டே வெள்ளையத் தேவன் அழுகிறார். “தாயில்லாப் பிள்ளைகளைத் தவிக்க விட்டுட்டு நான் ஜெயிலுக்கு வந்துட்டேன். நண்டுஞ் சுண்டுமா நம்ம பிள்ளைகளை நாதியத்து விட்டுட்டு வந்தோமே! ஏம் பிள்ளைக மூணும் என்ன செய்யுதுகளோ… ஏது செய்யுதுகளோன்னு, ராவும் பகலும் உங்க நெனப்புதான்ப்பா!” கண்ணீர் நிறையச் சிவந்த கண் கொண்டு மகனைப் பார்த்தார்.
இருவருக்கும் ஊடே நின்ற ஜெயில் வார்டர், “தேவரே…! என்ன நீங்க போயி சின்னப் பிள்ளை மாதிரி அழுதுக்கிட்டு”னு சொல்லும்போதே தொண்டையை அடைத்தது. “வர்ற பிள்ளைகளுக்கு நீங்கதான் ஆறுதல் சொல்லணும்.”
“கோபம், குலத்தைக் கெடுத்திருச்சு வார்டரே!” கண்களைத் துடைத்தார்.
“பாண்டி… மாயழகிப்புள்ள என்னய்யா செய்யுது?” கண் கலங்கியது.
“இருக்குது.”
“என் ஈரக் குலையை ஆறு வயசுலே விட்டுட்டு வந்தேன். அது கவலைதான் எனக்குப் பெருங்கவலை!” கண்களை மூடினார்.
“எய்யா… அக்கா இங்கே வந்துச்சா?”
“ஆமப்பா. அரியநாச்சி வந்துச்சு. நெறஞ்ச வயித்தோட ஏம்மா இம்புட்டு செரமப்பட்டு வந்
தேன்னு நான் கூட சத்தம் போட்டேன்.”
“என்ன சொல்லுச்சு?”
“அன்னைக்கு இங்கே இருந்த கூட்டத்திலெ ஒருத்தர் பேசுனது ஒருத்தருக்குக் கேக்கலெ. அது சரிப்பா… நம்ம மாயழகிப்புள்ளைக்குக் கல்யாணம் காச்சி ஏதும் பேசியிருக்கீகளா?”
“அக்கா சொல்லுச்சாக்கும்?” கவிழ்ந்தவாறு கண் உயர்த்திப் பார்த்தான்.
“அதுதான் சொல்றேன்லே… அரையும் குறையுமா காதுலே விழுந்துச்சுன்னு. கல்யாணம் பேசுனது நெசந்தானா?”
“யாருக்குத் தெரியும்?”
“என்னடா இப்பிடி சொல்றே? உனக்குத் தெரியாமலா?”
“எனக்குத் தெரியாமல்தான் அவுக புருசனும் பொண்டாட்டியும் சேர்ந்து பேசி வந்திருக்காக!”
“மாப்பிள்ளை யாராம்?”
“வேற யாரு? அவுக புருசன் கூடப் பெறந்த கொழுந்தன் ஒருத்தன் இருக்கான்லே… மொசப் பிடிக்கிற பய… சோலை. அவனுக்குதான்.”
“சோலைக்கா…” இழுத்தார் வெள்ளையத் தேவன்.
“இருந்தாலும் இந்த வெள்ளாங்குளத்துக்கு வாக்கப் பட்டுப் போன கழுதைக்கு இம்புட்டுத் திமிரு ஆகாது.”
“ஒங்கக்கா அரியநாச்சியை அப்பிடி எல்லாம் பேசாதப்பா. ஒம் மேலேயும் மாயழகி மேலேயும் உசிரையே வச்சிருக்கு.”
“தம்பி, தங்கச்சி மேலே உசிரை வச்சிருக்கோ இல்லையோ… எங்காத்தா பேர்லெ இருக்கிற பொம்மழிச் சொத்து மேலேதான் கண்ணு.”
“உனக்கு ஏன்டா இப்பிடியெல்லாம் நெனப்பு ஓடுது? தங்கச்சியைக் கொழுந்தனுக்குக் கட்டி வச்சா ஒண்ணுக்கு ஒண்ணு ஒத்தாசையா இருக்கும்னு ஆசைப்பட்டிருக்கும்.”
“அந்த ஆசை எனக்கு இருக்காதா?”
“உனக்கு என்ன ஆசை?”
“ஏம் பொண்டாட்டி கூடப் பெறந்த மச்சினன் ஒருத்தன் இருக்கான்லே?”
“அப்பிடிச் சொல்றியா? அதுவும் சரிதான்.”
“எல்லாத்துக்கும் ‘சரி’தானா? அக்கா வந்து கேட்டதுக்கும் ‘சரி’, எனக்கும் ‘சரி’ன்னா என்ன அர்த்தம்?”
“அட இவன் யார்றா! நான் கெடக்கேன் ஜெயில்லெ ஜென்மக் கைதியா! நீதானே வீட்டுக்குப் பெரிய ஆம்பளை? நீ பார்த்து செய்யி. அதுக்கு முன்னாடி ஒங்க அக்காகிட்டே ஒரு வார்த்தை கலந்துக்கோ.”
“நான் ஏன் கலக்கணும்? என்னைக் கலந்துக்கிட்டா இங்கே வந்துச்சு?”
ஜெயில் வார்டர் இடைமறித்தார். “தேவரே! பேசுனது போதும். உள்ளே போங்க. என் வேலைக்கு உலை வச்சிறாதீங்க.”
“எய்யா பாண்டீ… ஒங்கக்கா அன்னமயிலையும் ஓந்
தங்கச்சி மாயழகியையும் ரெண்டு கண்ணா பாவிக்கணும்யா.
நீதான்யா அதுக ரெண்டுக்கும் தாயும் தகப்பனா இருக்கணும். சண்டை சத்தம், கோபம் தாபம் வேணாம்யா.”
ஜெயில் வார்டர் விசில் ஊதினார். “ஆமாம் தம்பி. கோபம் குலத்தை அழிச்சிரும். விட்டுக்கொடுத்துப் போறவன் கெட்டுப்போக மாட்டான்.”
(சாந்தி... சாந்தி...)