திருச்சியின் மைந்தன்!


தமிழ்த் திரையில் அதிகமுறை படமாக்கப்பட்ட கதைகளில் ஒன்று ‘ராஜா ஹரிச்சந்திரா’. ‘சம்பூர்ண ஹரிச்சந்திரா’ என்ற தலைப்பில் அந்தக் கதையை தமிழில் இயக்கியது மட்டுமல்ல... முதல் முழுமையான தமிழ் பேசும் படமாகவும் அதைத் தந்தவர், திருச்சியின் மைந்தரான ராஜா சந்திரசேகர்.

1904-ல், பிறந்த ராஜா சந்திரசேகர், டெக்ஸ்டைல்ஸ் இன்ஜினீயரிங் படித்துவிட்டு சினிமா மீதிருந்த ஆர்வத்தால் பம்பாய் சென்றார். அங்கே சாகர் ஸ்டுடியோ நிறுவனத்தின் பல மவுனப்படங்களில் செட் அசிஸ்டென்டாக வேலை செய்தார். புராண, வரலாற்று கதாபாத்திரங்களுக்கான ஆடைகளை வடிவமைப்பதும் தயாரிப்பதுமான வேலையில் சிறந்து விளங்கினார். அப்போது பம்பாய் மவுனப்பட உலகில் கனவுக்கன்னியாக விளங்கிய பாத்திமா பேகம், தாமே கதை எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்த சில படங்களில் அவருக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றினார் ராஜா சந்திரசேகர். அப்போது தந்திரக் காட்சிகளை சிறப்பாகப் படமாக்க பாத்திமா பேகத்துக்குக் கைகொடுத்தார்.

பதாமியை இணை இயக்குநராக வைத்துக்கொண்டு ராஜா சந்திரசேகர் இயக்கிய ‘சம்பூர்ண ஹரிச்சந்திரா’ முழுமையான தமிழ் பேசியதால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

இந்தச் சமயத்தில், கன்னட நாடக உலகின் புகழ் உச்சியில் இருந்தார் குப்பி வீரண்ணா. ‘மித்ர’ என்ற மராட்டிய நாடகத்தின் தழுவலான ‘சதாரமே’ என்ற நாடகத்தை கன்னடத்தில் எழுதி நடத்திய அவர், அதைத் தானே திரைப்படமாகத் தயாரித்து நடிக்க விரும்பினார். அதற்காக மைசூர்க்காரரான சர்வோத்தம் பதாமியை அணுகினார். அப்போது பதாமி, தனது நண்பரான ராஜா சந்திரசேகரை வீரண்ணாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். குப்பி வீரண்ணா தயாரித்து நடிக்க, ‘சதாரம்’ கதாபாத்திரத்தில் மேடைப் பாடகி அஸ்வத்தம்மாவை நடிக்க வைத்து சினிமாவுக்கு அவரை அறிமுகப்படுத்தினார் ராஜா சந்திரசேகர். பின்னாளில் அவர் உச்சநட்சத்திரமாகப் புகழ்பெற்றார்.

x