‘தலை’க்கோட்டையில் திமுக... ‘இலை’க்கோட்டையில் தினகரன்..!- திருவிழாவுக்குத் தயாராகும் 'திரு திரு’ தொகுதிகள்!


குள.சண்முகசுந்தரம்

மத்திய அரசு ஆடுபுலி ஆட்டம் ஆடாவிட்டால் எந்த நேரத்திலும் திருவாரூருக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்படலாம். இதில், திருவாரூர் திமுக ‘தலை’க்கோட்டை; திருப்பரங்குன்றம் இரட்டை ‘இலை’க்கோட்டை என்பதால் திமுக-வுக்கும் அதிமுக-வுக்குமே இந்த இடைத்தேர்தல் கவுரவப் பிரச்சினை! இடையில் புகுந்து வூடு கட்டும் தினகரனுக்கோ இது ராஜ்ஜியத்தைப் பிடிப்பதற்கான அடுத்த களப் போராட்டம்!

ஆர்.கே.நகரில் யாருமே எதிர்பார்க்காத ‘ரூட்’டில் பயணித்து ஆளும் கட்சியைப் பின்னுக்குத் தள்ளி, எதிர்க்கட்சியின் காப்புத் தொகையைக் காலி செய்து தொகுதியைக் கைப்பற்றினார் டி.டி.வி. தினகரன். அப்போது அவருக்குக் கட்சிகூட இல்லை. சுயேச்சையாக நின்றே அத்தனை பேரையும் சுழற்றி அடித்தார். இப்போது கட்சி ஆரம்பித்து களத்தில் நிற்பதால் இரண்டு தொகுதிகளிலுமே ஆளும் கட்சிக்கும் ஆண்ட கட்சிக்கும் தினகரனின் அமமுக மிகப்பெரிய சவாலாகவே முன்னேறுகிறது.

முதலில் திருப்பரங்குன்றம் நிலவரத்தைப் பார்ப்போம். 1977 தொடங்கி, ஒரு இடைத் தேர்தல் உள்பட மொத்தம் நடந்த 11 தேர்தல்களில் இரண்டு முறை மட்டுமே திமுக இங்கு வெற்றிபெற்றிருக்கிறது. எஞ்சிய தேர்தல்கள் அனைத்திலுமே அதிமுக-வும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே தொகுதியைக் கைப்பற்றியுள்ளன. எம்.ஜி.ஆர். மீது கொண்ட பாசத்தால் குன்றத்து மக்கள், சரிவர எழுதப் படிக்கத் தெரியாதவர்களைக்கூட எம்.எல்.ஏ-க்கள் ஆக்கி அழகுபார்த்தார்கள். அதனால்தான் இதை ‘இலைக் கோட்டை’ என்கிறார்கள். அப்படிப்பட்ட தொகுதியைக் கோட்டைவிடக் கூடாது என்பதற்காகப் பல்வேறு உத்திகளைக் களமிறக்குகிறது அதிமுக.

x