காலாண்டுத் தேர்வுகள் நெருங்குவதால் பெரும்பாலான வீடுகளில் குழந்தைகளைப் படிக்கவைக்க ஒரு பெரும் போரே நடக்கும். குறிப்பாக மற்ற நாட்களில் எல்லாம் குழந்தைகள் படிக்கிறார்களா என்பதைக்கூட சரியாகக் கவனிக்காத பெற்றோர்கள் இந்த தேர்வு நேரத்தில் தாங்களும் பதற்றமாகி குழந்தைகளையும் பதற்றமடையச் செய்யும் நிலையைக் காணலாம். இந்த நிலை உங்கள் வீட்டில் தொடராதிருக்க, குழந்தைகளை விருப்பத்துடன் படிக்கவைக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
ஆசிரியர்களிடம் பேசுங்கள்
உங்கள் குழந்தைகளின் பள்ளிக்கு மாதம் ஒருமுறையாவது சென்று அவர்களின் ஆசிரியர்களைச் சந்தியுங்கள். வெளியுலகில் உங்கள் குழந்தையைப் பற்றி அதிகம் தெரிந்தவர்கள் ஆசிரியர்கள்தான் என்பதால், அவர்களிடம் அடிக்கடி ஆலோசனை நடத்துவது நல்லது. குழந்தைகளின் படிப்புத் தொடர்பாக எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் உங்களை அணுக தேவையான நடவடிக்கைகளை எடுங்கள்.
ஒருசில பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் ஆங்கிலத்தில் பேசவேண்டி இருக்குமே என்ற தயக்கத்தில் அவர்களைச் சந்திப்பதைத் தவிர்ப்பர்கள். அது தவறு. உங்களின் தயக்கத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் விட குழந்தைகளின் எதிர்காலம் முக்கியமானது. ஆகவே, உங்கள் குழந்தைகளின் ஆசிரியர்களுக்குத் தமிழ் தெரியாவிட்டாலும், ஆங்கிலம் தெரிந்த யாரையாவது வைத்து அவர்களுடன் பேசுங்கள். வகுப்பில் உங்கள் குழந்தையின் செயல்பாடு எப்படி உள்ளது, அவர்களின் திறனை மேம்படுத்த நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.