இதுவும் எங்களுக்கு ஒரு பிள்ளை மாதிரிதான்!- இம்பாலாவும் இருவர் உள்ளமும்


சில நேரம் பழைய விஷயங்கள்கூட திரும்ப வரும், புதிதுபோல நம்மை ஆச்சரியப்படுத்தும்; அதிசயமாய் அதைப் பார்ப்போம். முத்துக்கிருஷ்ணன் - ஜெயலட்சுமி தம்பதியரின் இம்பாலா காரை நெல்லை, தூத்துக்குடி மக்கள் அப்படித்தான் அதிசயமாய் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். முகூர்த்த நாட்களில் இந்தக் காருக்கு கிராக்கியோ கிரக்கிதான்!

திருநெல்வேலி பாலபாக்யா நகரைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவருக்குச் சொந்தமானதுதான் இந்த இம்பாலா. மாப்பிள்ளை அழைப்புக்காக மட்டுமே இந்தக்காரை பிரத்யேகமாக வைத்திருக்கும் முத்துக்கிருஷ்ணனும் அவரது மனைவி ஜெயலெட்சுமியும் காரை பிள்ளை கணக்காய் போற்றுகிறார்கள். காரைப் பற்றிப் பேசும்போதே இவர்கள் முகத்தில் அத்தனை பூரிப்பு. “எங்கப்பா ரெங்கராஜ் வசதியாக வாழ்ந்த மனுசன். அப்பவே லாரி, கார்னு சொந்தமாக வச்சுருந்தாங்க. எனக்கும் சின்னவயசுல இருந்தே மோட்டார் ஃபீல்டுல ஆர்வம் அதிகம். அதனால, படிச்சு முடிச்சதும் நான் ஆசைப்பட்ட டிரைவர் வேலைக்கே வந்துட்டேன்.

‘ராஜ்குமார் டிராவல்ஸ்’ன்னு சொந்தமாக ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல வேன் ஓட்டிட்டு இருந்தேன். பெருசா லாபம் இல்லாததால் அதை விட்டாச்சு. எங்களுக்கு ராஜ்குமார்ன்னு ஒரே பையன். மெக்கானிக்கல் இன்ஜினீயரா இருக்கான். அவன்தான் நான் ரொம்ப விருப்பப்படுறேன்னு பெங்களூருல தேடி அலைஞ்சு இந்த இம்பாலா காரை வாங்கித் தந்தான்” என்று பெருமையோடு சொன்ன முத்துக்கிருஷ்ணன், தொடர்ந்து பேசுகையில்... “இந்தக் கார் நடிகர் நாகேஷ் கம்பெனி பெயரில் வாங்கியது. 4 கைமாறி எங்கட்ட வந்துருக்கு. வந்த புதுசுல, ‘இந்தக் காரு இதுக்கு முந்தி யாருட்ட இருந்துச்சு?’ன்னு கரகட்டாக்காரன் படத்துல வர்ற மாதிரி பலரும் கேட்டாங்க. 

எங்களுக்கு முன்னாடி இது நடிகை தேவிகாவிடம் இருந்ததாக எங்களுக்கு காரை வித்தவர் சொன்னார். இப்ப இந்தக் காருதான் எங்களுக்கான அடையாளம். மாப்பிள்ளை அழைப்பு வைக்கிறவங்க இதைப் போட்டிப் போட்டுகிட்டு கேட்குறாங்க” என்றார்.

x