ஆடு, கோழி, எதுவும் இல்ல... குடிச்சுட்டு ஆடும் கொடுமையும் இல்ல... அசைவத்தை அறவே துரத்திய அதிசய கிராமம்!


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம் என்றாலே மொய் விருந்தும் பிரம்மாண்ட மான கடா வெட்டு அசைவ விருந்துகளும் தான் நினைவுக்கு வரும். அதுவும் இந்த ஆடி மாத மொய் விருந்துகளில் மட்டுமே சுமார் இரண்டாயிரம் ஆடுகள் ‘மணக்க மணக்க’ விருந்தாகியிருக்கின்றன. இப்படியான பகுதியில்தான் இதற்கு நேர் எதிரான ஒரு கிராமம் இருக்கிறது. அப்படி என்ன சுவாரஸ்யம் அந்தக் கிராமத்தில்..?

ஒரு சம்பவம் மூலம் அந்தச் சுவாரஸ்யத்தை அறியலாம்.. செம்பட்டிவிடுதி ஊராட்சியில் மேல விடுதிக்கு அருகே இருக்கிறது வாடிமலைப்பட்டி சிற்றூர். சுமார் 300 பேர் வசிக்கிறார்கள். அங்குள்ள ஒரு வீட்டில் பெண் பார்க்கும் படலம் நடந்துகொண்டிருந்தது. மாப்பிள்ளை இலுப்பூரைச் சேர்ந்தவர். இருவீட்டாருக்கும் சம்மதம். திருமணத்தை மாப்பிள்ளை வீட்டில் வைத்துக்கொள்வது என்று முடிவாகிறது. பெண்வீட்டார், “கல்யாண சாப்பாடெல்லாம் நறுவுசா செஞ்சுருங்க” என்று சொல்ல… “அதுக்கென்ன கெடாக்கறி கொழம்பும், கெண்டைமீனு வறுவலும், கோழி குருமாவும், எலும்பு சூப்பும் போட்டு ஜமாய்ச்சுடுவோம்” என்று மாப்பிள்ளை வீட்டார் பெருமை பொங்க சொன்னார்கள். இதைக் கேட்டு அதிர்ச்சியான பெண்வீட்டார், அத்தோடு அந்தத் திருமணப் பேச்சையே முறித்துக்கொண்டார்கள். காரணம், வாடிமலைப்பட்டி கிராமத்து மக்களுக்கு அசைவம் என்றாலே நறுவுசா ஆகாது! வள்ளலாரின் சமய சன்மார்க்கத்தை நெறிதவறாமல் பின்பற்றும் கிராமம் வாடிமலைப்பட்டி. இங்குள்ள வீடுகளில் அசைவம் சமைத்து சுமார் 57 ஆண்டுகள் ஆகின்றன. யாரும் ஆடு, கோழிகூட வளர்ப்பதில்லை. அதுமட்டுமல்ல... ஊரில் யாரும் மது குடிப்பதில்லை. இப்படிப் பல ஆச்சரியங்களோடு இன்னமும் தனித்து வாழ்கிறது மரங்கள் சூழ்ந்த, விவசாயம் செழிக்கும் அழகான அந்தக் கிராமம்.

புதுக்கோட்டை – பட்டுக்கோட்டை சாலையில் மேலவிடுதியில் இருந்து வடக்கில் இரண்டு கி.மீ. தூரம் பயணித்தால் இந்த ஊர் வருகிறது. ஊருக்குள் நுழைந்ததும் எதிர்பட்டார் சின்னத்தம்பி. வயது 86 ஆகிறது என்பதை நம்ப முடியவில்லை. “மத்த ஊரைப்போல எங்கூருலயும் அசைவம் சாப்பிட்டுக்கிட்டுத்தேன் இருந்தாக. 1962-ம் வருஷம்னு நினைக்கிறேன். பக்கத்துல இருக்கிற மாத்தூரிலிருந்து ராசாங்கம்கிறவரு எங்கூருக்கு வந்தாரு. அவரு சன்மார்க்கி. புள்ளையா கோயில்ல எங்களயெல்லாம் கூட்டிவச்சு சன்மார்க்கத்தைப் பத்தி பிரசங்கம் பண்ணாரு. அந்தக் கொள்கை புடிச்சுப்போய் முத்துசாமி என்கிறவரு தலைமையில ஆண்கள் எல்லாம் சேர்ந்து இனிமே ஊரு ஒட்டுக்க சன்மார்க்கத்துலயே போறதுன்னு கையெழுத்துப்போட்டு முடிவெடுத்தோம். அதுலேர்ந்து இங்குட்டு புலால் சாப்பிடும் பழக்கமே அத்துப்போச்சு. கள்ளு, சாராயமும் குடிக்கிறதுல்ல” என்று முன்கதைச் சுருக்கத்தைச் சொன்னார் சின்னத்தம்பி. 

ஆண்கள் சாப்பிடாததால் பெண்களும் இறைச்சி சமைப்பதுமில்லை, சாப்பிடுவதுமில்லை. இப்படியே ஒட்டுமொத்த ஊரும் சைவத்துக்கு மாறிவிட்டது. உயிர் வதையை எதிர்க்கும் ஊரில் ஆடும் கோழியும் எதற்கு? அவற்றையும் இவர்கள் வளர்ப்பதில்லை.

x