விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த இவர், குழந்தை இலக்கியத்துக்காக அழ.வள்ளியப்பா விருது பெற்றவர். எழுதியுள்ள 16 நூல்களில் பெரும்பாலானவை குழந்தைகள் இலக்கியங்களே. அதில், ‘உலகம் எங்கள் குடும்பம்’ என்ற பயண நாவல் தமிழக அரசின் பரிசையும், ‘கனா கண்டேன் தோழி’ சிறுகதை கோவை ஞானியின் பெண்கள் சிறுகதைப் போட்டிப் பரிசையும் வென்றது. தனியார் பள்ளி ஒன்றின் புரவலராக உள்ள இவர், குழந்தைகள் மீது கொண்ட ஆர்வத்தால் அவர்களைத் தன் வீட்டிற்கே வரவைத்து கதைசொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். ‘பிரசாதப் பூக்கள்’ (கட்டுரைத் தொகுப்பு), ‘யாரோ இல்லை எவரும்’ (கவிதைத் தொகுப்பு), ‘மயிலிறகாய் மாறலாம்’ (ஆன்மிகக் கட்டுரைத் தொகுப்பு) என்று பெரியவர்களுக்காகவும் எழுதிக்கொண்டிருக்கிறார்.
இவருக்குப் பிடித்தவை 10 இங்கே...
ஆளுமை: அண்ணல் காந்தியடிகள். சத்தியக் கனல்மூட்டி வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்டு அதில் தோன்றிய சுதந்திர திவ்யத்தை அனைவரையும் தரிசிக்கவைத்த மகாத்மா அவர்.
கவிதை: திரு.வேங்கடநாதன் எழுதிய, ‘கீதா சாரத் தாலாட்டு’ என்னும் தத்துவத் தாலாட்டுக் கவிதையில் வருகிற, ‘கனவுபோற் பிரபஞ்சம் என்றீர்’ என்ற வரிகள். பாரதியார் பாடல்களில், ‘பரசிவ வெள்ள’த்தில் வருகிற ‘வானில் பறக்கும் புள்ளெலாம் நான்...’ என்ற வரிகளும் ரொம்பப் பிடிக்கும்.