ஹாட் லீக்ஸ்: புகழஞ்சலியும் புலம்பலும்...


சர்ச்சை சூழ உதம்சிங் படம்!

ஜாலியன் வாலா பாக் படுகொலைகள் நடத்தப்பட்டபோது பஞ்சாபின் லெஃப்டினென்ட் கவர்னராக இருந்தவர் மைக்கேல்ஓ’டையர் (இவர் ஜெனரல் டயர்அல்ல).  இவரை இங்கிலாந்துக்குச் சென்று சுட்டுத் தள்ளியதாக 1940-ல்,தூக்கிலிடப்பட்டவர் உதம்சிங். இவரது வாழ்க்கை வரலாறு 1977-ல், ‘ஜாலியன்வாலா பாக்’ என்றும், 1999ல், ஷஹீத் 
உதம்சிங்’ எனவும் இரண்டு திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. ஆனால், இந்தப் படங்கள் உதம்சிங்கின் உண்மைக் கதையைச் சொல்லவில்லை என இப்போது கிளம்பியிருக்கும், பாலிவுட் இயக்குநர் சூஜித் சர்கார், உதம்சிங் குறித்து புதிதாக ஒரு படத்தை இயக்குகிறார். இர்பான் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் இந்தப்படம் சர்ச்சைகளைக் கிளப்பக்கூடும் என்கிறது பாலிவுட் படவுலகம்.

தொகுதிக்கு 50 ‘சி’ அலாட்மென்ட்!

இப்போது மறுத்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வுடன்தான் கூட்டணி என்பதில் தெளிவாக இருக்கிறதாம் அதிமுக. கூட்டணிக்கு மறுத்தால் இங்கே ஆட்சி தப்பாது. அதற்குப் பதிலாக, பாஜக-வுடன் கூட்டணி வைத்துத் தோற்றாலும் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ஆட்சியை சிக்கலின்றி ஓட்டிவிடலாம் என்பதுதான் அதிமுக-வின் திட்டம். அதேசமயம், நாடாளுமன்றத் தேர்தலில் எப்பாடு பட்டாவது கணிசமான இடங்களை பிடிக்க வேண்டும் என்பதும் அதிமுக-வின் உள் அஜெண்டாவாக இருக்கிறது. இதற்காக ஜெயலலிதா பாணியைக் கடைப்பிடிக்கவும் தயாராகிவருகிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 5 கோடி ரூபாய் பணம் ஒதுக்கினாராம் ஜெயலலிதா. அதையே இப்போது ஒரு நாடாளுமன்றத் தொகு திக்கு 50 கோடி ரூபாய் வீதம் ஒதுக்கித் தேர்தலைச் சந்திக்கத் தயாராகிறதாம் அதிமுக. பணப் பரிவர்த்தனைகள் சிக்கலின்றி நடக்க வேண்டுமானால் அதற்கும் மத்திய அரசின் ஆதரவு வேண்டும். பாஜக-வுடன் கூட்டணி போடுவதற்கு இதுவும் ஒரு காரணமாம்!

x