என்றென்றும் ஏழுமலையான்! - 5: திருமலை நம்பியும் திருவேங்கடவனும்!


திருப்பதி ஏழுமலையானுக்கு மகான்கள் பலரும் பல வித சேவைகள் புரிந்துள்ளனர். தொடர்ந்து சேவை செய்தும் வருகின்றனர். ஆனால், இவர்கள் அனைவருக்கும் முதலாக, திருமலைக்கு வந்து சுவாமிக்கு தீர்த்த கைங்கர்யங்களை செய்த திருமலை நம்பிகள் குறித்து நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், சுமார் ஆயிரம் ஆண்டுகளாக இவரும் இவரது வம்சாவளியினருமே இன்று வரை ஏழுமலையானுக்கு தீர்த்த கைங்கர்யங்கள் செய்து வருகின்றனர்.

சைல பூர்ணர் எனும் திருமலை நம்பிகள்தான் திருமலை யின் முதல் ஆச்சார்ய பெருமானாவார். ஏழுமலையானுக்கு தீர்த்த கைங்கர்யங்கள் செய்ய தனது கடைசி மூச்சு உள்ளவரை திருத்தொண்டு செய்த மகான். இன்றளவிலும் இவரது வாரிசுகளும் ஏழுமலையானின் தீர்த்தக் கைங்கர்யங்களில் பங்கேற்று வருகின்றனர். திருமலை நம்பியின் சகோதரி காந்திமதி அம்மையார். காந்திமதி அம்மையார் - ஆசூரி கேசவ சோமயாஜி தம்பதியின் திருமகன்தான் ராமானுஜர். ஒருவகையில் பார்த்தால் திருமலை நம்பியானவர் இராமானுஜருக்கு தாய் மாமன். இன்னொரு வகையில் இராமானுஜரின் குருநாதர்.

கிருஷ்ணசுவாமி தாத்தாச்சாரியாரின் தந்தை டி.கே. கோபாலசுவாமி தாத்தாச்சாரியார்

கடைசி மூச்சு உள்ளவரை...

கி.பி 973-ல், பிறந்தவர் ஸ்ரீசைல பூர்ணர் எனும் திருமலை நம்பி. இவர்தான் ஏழுமலையானுக்கு முதன் முதலில் தீர்த்த சேவைகள் செய்ய தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் இவரது வம்சாவளியினரான கிருஷ்ண சுவாமி தாத்தாச்சாரியார் தான் தற்போது திருமலையில் ஏழுமலையானுக்கு தீர்த்த கைங்கர்யங்களைச் செய்து வருகிறார். தீர்த்த கைங்கர்யம் என்றால் என்ன... அதை எப்படிச் செய்கிறார்கள்..? என்ற கேள்விகளோடு அவரைச் சந்தித்தேன்.

“சார் நாங்கள் ஆச்சாரியார் திருமலை நம்பிகளின் 37-வது தலைமுறை வாரிசு. ஸ்ரீசைல பூர்ணர் என்கிற திருமலை நம்பியானவர் ஆளவந்தாரின் பேரன். தேவராஜனின் மகனான இவர் சிறு வயதிலேயே சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார்.

‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி ,வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்,தெழிகு ரல்அரு வித்திரு வேங்கடத்து,எழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே.’எனும் பாசுரத்தின் விளக்கத்தைக் கேட்ட திருமலை நம்பிகள், ‘எனது கடைசி மூச்சு உள்ளவரை திருவேங் கடவனுக்குத் தொண்டு செய்வேன்’ என முடிவு செய்தார்.

கிருஷ்ணசுவாமி தாத்தாச்சாரியார்

அதற்காகவே இளம் வயதில் சன்னியாசம் பெறவும் தீர்மானித்திருந்தார். ஆனால், அவரது ஆசானான அவரது தந்தை தேவராஜன், தனது மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார். ஆனாலும் குடும்ப வாழ்வில் மனம் லயிக்காமல் போனதால், திருமணத்துக்குப் பிறகு வடமாநில பெருமாள் திருத்தலங்களுக்குச் சென்று சிலகாலம் திருத்தொண்டாற்றினார். அதன் பிறகு திருமலைக்கு வந்து ஏழுமலையானைத் தரிசித்து இங்கேயே தங்கினார்.

வேட்டுவ பாலகனாய் வந்த வேங்கடவன்

திருமலையில் கோயிலுக்கு வடக்கே சுமார் 5 மைல் தொலைவில் உள்ளது பாபவிநாசம் அருவி. அங்கிருந்து தினமும் சுவாமிக்கு அபிஷேகம் உள்ளிட்ட கைங்கர்யங் களுக்காக குடங்களில் தீர்த்தம் எடுத்துவருவது திரு மலை நம்பிக்கு வழக்கம். ஒருமுறை அவரை சோதிக்க எண்ணிய ஏழுமலையான், வேட்டுவ பாலகனாக வந்து, ‘தாத்தா, தனக்கு மிகவும் தாகமாக உள்ளது. தண்ணீர் தாரும்’ என நம்பியிடம் கேட்டான். ‘இந்தத் தீர்த்தத்தை உனக்குக் தந்தால், சுவாமிக்கு செய்யும் தீர்த்தக் கைங்கர்யம் தடைபடும்’ என மறுத்தார். இதைக் கேட்ட பாலகன், தனது அம்பை தீர்த்தப் (மண்) பானையில் எய்து துளையிட்டு அதில் வடிந்த நீரைப் பருகலானான்.

திருமலையில் ஏழுமலையான் கோயிலின் தெற்கு மாட வீதியில் உள்ள திருமலை நம்பியின் திருக்கோயில்

இதைக் கண்டு கோபம் கொண்ட நம்பிகள், ‘பாலகனே, என்ன காரியம் செய்தாய். சுவாமிக்கு கொண்டு செல்லும் பானையை உடைத்து விட்டாயே. தண்ணீர் எல்லாம் வீணாகி விட்டதே. மீண்டும் நான் பல மைல் தூரம் சென்று தண்ணீர் கொண்டு வர நேரம் ஆகிவிடுமே. அதனால் நான் தினமும் செய்யும் தீர்த்தக் கைங்கர்யத்துக்கு இழுக்கு ஏற்பட்டு விடுமே’ எனக் கவலை கொண்டார். இதைக் கேட்ட பாலகன், ‘கவலைப்படாதே தாத்தா... உனக்காக இங்கேயே புதிதாக ஒரு அருவியை நான் உருவாக்கித் தருகிறேன். நீ தினமும் இங்கிருந்தே அந்தச் சுவாமிக்கு தீர்த்தம் கொண்டு போகலாம்’ என்று சொல்லிவிட்டு தனது அம்பை எடுத்து அருகிருந்த மலையை நோக்கி எய்தான். அடுத்த நொடியே அந்த மலையிலிருந்து அருவிபோல் தண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. நம்பிகள் இந்த ஆச்சரியத்தைப் பார்த்துவிட்டுத் திரும்புவதற்குள் அந்த பாலகன் மாயமாய் மறைந்து போனான். அன்றைக்கு அந்த பாலகன் உருவாக்கிய அருவிதான் இன்றுவரை ஆகாச கங்கையாக தண்ணீரைக் கொட்டிக் கொண்டிருக்கிறது.

தன்னெதிரே வேட்டுவச் சிறுவனாய் வந்து விளையாட்டுக் காட்டியது திருவேங்கடவனே என்பதை அறிந்து மெய்சிலிர்த்த நம்பிகள், ஆகாச கங்கையை பார்த்து வணங்கினார். அன்று முதல் இன்று வரை அந்த ஆகாச கங்கை தீர்த்தம் மூலமாகத்தான் திருவேங்கடவனுக்கு அபிஷேகம் முதலான அனைத்து தீர்த்தக் கைங்கர்யங்களும் நடக்கின்றன” என்று தமது மூதாதையர் காலத்தைச் சொல்லி முடித்தார் கிருஷ்ணசுவாமி தாத்தாச்சாரியார்.

தாத்தா என்றழைத்ததால் தாத்தாச்சாரியார் வேங்கடவன் வேட்டுவச் சிறுவனாக வந்து, திருமலை நம்பிகளை “தாத்தா” என அழைத்த காரணத்தினால், அன்று முதல், நம்பிகளின் தலைமுறையினர் தங்களது பெயருக்குப் பின்னால் ‘தாத்தாச்சாரியார்’ என்ற பட்டத்தை போட்டுக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டார்கள்.

பாபவிநாசம் தீர்த்தம்

காலங்காலமாக தங்களது வம்சாவளியினர் செய்து வரும் தீர்த்தக் கைங்கர்யம் குறித்து கிருஷ்ணசாமி தாத்தாச்சாரியாரும் அவரது மனைவி லட்சுமியும் இன்னும் சில தகவல்களையும் என்னிடம் பகிர்ந்து கொண்டனர். “தான் மட்டுமின்றி, தனது வாரிசுகளும் எக்காலமும் ஏழுமலையானுக்குத் திருத்தொண்டு செய்ய வேண்டுமென திருமலை நம்பிகள் விரும்பினார். அதன்படியே சுமார் 1000 ஆண்டுகளாக எங்களது வம்சாவளியினர் ஏழுமலையானுக்கு தீர்த்தக் கைங்கர்யங்களைச் செய்து வருகிறோம். அதாவது, தீர்த்தக் கைங்கர்யம், புஷ்ப கைங்கர்யம், மந்திர, புஷ்ப கைங்கர்யம், திருமஞ்சன கைங்கர்யம், வேதபாராயணம் போன்றவற்றில் நாங்கள் பங்கேற்று வருகிறோம்.

ஆகாச கங்கை தீர்த்தம்

தினமும் அதிகாலை 2 மணிக்குத் திருமலையில் உள்ள ஆகாச கங்கைக்குச் சென்று, அபிஷேகம், திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகளுக்காக 3 வெள்ளிக் குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்து ஏழுமலையானின் கர்பக்கிரஹத்தில் ஒப்படைப்போம். இதுவே எங்களின் பிரதான கைங்கர்யமாகும். திருமலை நம்பிகள் காலத்தில் இந்தப் பகுதியெல்லாம் அடர்ந்த காடாக இருந்தது. அப்போது, திருமலையில் பூக்கும் மலர்களைப் பறித்து அவற்றைத் தொடுத்து அலங்காரப் பிரியனுக்கு வழங்குவதையும் அவர் வழக்கமாக வைத்திருந்தார். அதற்குப் பிறகுதான் அனந்தாழ்வார், தோட்டம் அமைத்து புஷ்ப சேவை செய்ய ஆரம்பித்தார்.

தீர்த்தம் எடுத்து வருவதோடு மட்டுமல்லாது, தினமும் காலையும் மாலையும் ஏழுமலையானுக்கு நடக்கும் தோமாலை சேவையிலும் நாங்கள் இருப்போம். அப்போது வேத மந்திரங்களைச் சொல்லியபடி, துளசி இலைகளை எடுத்து அர்ச்சனைக்குக் கொடுப்போம். வெள்ளிக்கிழமைகளில் மூலவருக்கு நடைபெறும் திருமஞ்சனத்திலும் நாங்கள் பங்கேற்போம். அப்போது, ஒரு தங்கச் சங்கில் சுவாமிக்கு தீர்த்தம் எடுத்துக் கொடுப்போம்” என்று முடித்தார்கள் அந்தத் தம்பதியர்.

தண்ணீர் அமுது உற்சவம்

திருமலை நம்பிகளின் சேவைகளை உலகறியச் செய்ய வேண்டும் என்பதற்காக அவரது சிஷ்யரான இராமானுஜர் ஏற்படுத்திய உற்சவமே தண்ணீர் அமுது உற்சவம். ஏழுமலையானுக்கு நடைபெறும் அத்யயன உற்சவத்திற்கு மறுநாள் இந்தத் தண்ணீர் அமுது உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். அன்றைய தினம், உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தில் எழுந்தருள்வார். அப்போது, திருமலை நம்பிகளின் வம்சாவளியினர், வெள்ளிக் குடத்தில் பிடித்த ஆகாச கங்கை தீர்த்தத்தை யானை மீது வைத்துக்கொண்டு வருவார்கள். அப்போது, 4 மாட வீதிகளிலும் பெரிய ஜீயர் தலைமையில், வேத பண்டிதர்கள் திருமங்கையாழ்வாரின் பாசுரங்களைப் பாடியபடி பின் தொடர்வார்கள். அதன் பின்னர், மூலவருக்கு அந்தத் தண்ணீரை சமர்ப்பணம் செய்வார்கள். இதுதான் தண்ணீர் அமுது உற்சவம்.

தண்ணீர் அமுது உற்சவம்: -கிருஷ்ணசுவாமி தாத்தாச்சாரியார்

‘அடிப்புளி’ அலிபிரியானது!

தனது சிஷ்யனுக்கு ‘இளையாழ்வான்’ எனும் பொருள்பட இராமானுஜர் எனப் பெயர் சூட்டியவர் திருமலை நம்பிகளே. தாய்மாமன் - மருமகன் என்கிற உறவுமுறையைத் தாண்டி குரு - சிஷ்யர் என்கிற தார்ப்பரியமே இவர்களுக்குள் மேலோங்கி நின்றது. இராமானுஜரின் குருவான திருமலை நம்பிகள், குரு ஸ்தானத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர். அதுபோலவே, சிஷ்யருக்கே உரிய பணிவோடு திருமலை நம்பிகளிடம் பக்தி காட்டியவர் இராமானுஜர்.

அலிபிரி

‘சென்றுசேர் திருவேங்கட மாமலை ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே’என்றும் நம்மாழ்வாரால் பாடப்பட்ட பாசுரத்தின் மூலம் திருமலையின் மகிமை உணர்ந்த இராமானுஜர், ஏழுமலையான் குடிகொண்டுள்ள அந்தப் புனிதமான மலையில் கால் பதிப்பதில்லை என சபதம் மேற் கொண்டார். திருமலையை அவர் ஒரு ஆழ்வாராகவே பாவித்தார். ஆதலால், அவர் அடிவாரத்தில் இருந்தே மலையை வணங்கினார். திருமலை நம்பிகள் திருமலையில் தனது கைங்கர்யங்களை முடித்துக்கொண்டு, தினமும் கீழே இறங்கி வந்து, மலையடிவாரத்தில் தங்கி, தனது பிரிய சிஷ்யரான இராமானுஜருக்கு உபதேசம் செய்வார். இந்த குரு - சிஷ்ய பக்தியைப் பார்க்க பெருமாளே மலையிலிருந்து இறங்கி வந்து, மலையடிவாரத்தில் ஒரு புளிய மரத்தடியில் மறைந்து நின்றதாகவும் ஒரு புராணச் செய்தி உண்டு. அப்படி அவர் மறைந்து நின்ற இடம் ‘அடிப்புளி’ என அழைக்கப்பட்டு காலப்போக்கில் அதுவே ‘அலிபிரி’ ஆனது.

கடல் தாண்டினால் கைங்கர்யம் செய்ய முடியாது!

ஏழுமலையானுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்துவரும் திருமலை நம்பிகளின் வம்சாவளியினர் தொடர்ந்து அந்தச் சேவையைச் செய்ய வேண்டுமானால் அவர்கள் கடல் தாண்டி வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது என்பது சாஸ்திரம். “எங்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூவரும் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வசிக்கிறார்கள். அவர்கள் யாரும் ஏழுமலையானுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்ய முடியாது. அதேசமயம், ஏழுமலையானுக்கு தீர்த்தக் கைங்கர்யங்களைச் செய்து வரும் நான் அவர்களைக் கடல்தாண்டிப் போய் பார்த்துவிட்டு வரமுடியாது. பிள்ளைகளை பேரன் பேத்திகளை நாங்கள் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் அவர்கள்தான் இங்குவந்து எங்களைப் பார்த்துவிட்டுப் போவார்கள்” என்கிறார் கிருஷ்ணசுவாமி தாத்தாச்சாரியார்.

(முகங்கள் வரும்...)

-என்.மகேஷ்குமார்
 

x