நானொரு மேடைக் காதலன் - 5


இதயத்தின் வடிவத்தில் இருக்கும் தென்னிலங்கைத் தீவில் இனப்படுகொலை நடந்த நேரம்; ஈழத்துச் சொந்தங்களைப் பதைக்க பதைக்க சிங்களப் பேரினவாத அரசு கொன்று குவித்த காலம்; சேலை கட்டி செந்தூரப் பொட்டு வைத்து செந்தமிழில் தாலாட்டு இசைத்த எங்கள் குல மங்கைகள் சிங்களக் காடையர்களால் சீரழிக்கப்பட்ட வேளை; வடையைத் தட்டி வாணலியில் போடுவது போல் கோட்டைப் பவுன் உருக்கிச் செய்த குத்துவிளக்கைப் போன்ற குழந்தைச் செல்வங்களை கொதிக்கும் எண்ணெயில் வீசிய கொடூரம் அரங்கேறிய சூழல்; புத்தம் ரத்தம் கேட்ட அந்த நாட்களில் தமீழீழத் தாயகம் எங்கள் தாகம் என வாலிப எரிமலைகள் ஆறாச் சினம் கொண்டிருந்த வேளையில், அந்த அணி வகுப்பில் என்னையும் இணைத்துக்கொண்டேன்.

சுகங்களுக்கு அடிமையுறாமல், எங்கள் குமரி மாவட்டத்தின் நாலா திசைகளிலும் அங்கிங்கெனாதபடி நடந்த கண்டனக் கூட்டங்களில் அனலும் கனலும் தெறிக்கப் பேசினேன். அந்தக் காலகட்டத்தில் நாகர்கோவில் கோட்டாற்றில் கலைஞர் பேச வருகிறார். அந்த மேடையில் கலைஞருக்கு முன்னால் பேசினால் அவரது கவனத்தைக் கவர முடியும் என்று நம்பினேன். கழகத்தில் எந்தப் பொறுப்பும் இல்லாத என்னை மேடையில் ஏறக்கூட அனுமதிக்க மாட்டார்கள். கலைஞருடைய கார் மேடையை நோக்கி வரும்போது காருக்கு முன்னால் வேகமாக ஓடி மேடையில் தாவி ஏறி ஒலிபெருக்கிக்கு முன்னால் நின்று கலைஞரை வாழ்த்தி முழக்கமிட்டேன். நிர்வாகிகள் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கலைஞர், எஸ். எஸ். தென்னரசு, வைகோ மூவரும் மேடையில் அமர்ந்து விட்டார்கள். வாழ்த்து முழக்கமிட்ட நான் தொடர்ந்து பேச ஆரம்பித்தேன்.

“மாசிடோனிய மாமன்னன் அலெக்சாண்டருக்கு வெல்வதற்கு ஒரு நாடு இல்லையே என்ற கவலை. ஆனால், தமிழர்களுக்கு சொல்வதற்கு ஒரு நாடு இல்லையே என்ற கவலை. ஒரு தேசிய இனத்தின் விடுதலையை எந்த ஏகாதிபத்தியமும் முறியடித்ததாக சரித்திரத்தின் பக்கத்தில் சாட்சிகள் இல்லை. தங்க வங்கத்தின் விடுதலைக்கு எவ்வளவு நியாயம் அதைவிட ஆயிரம் நியாயம் தமிழ் ஈழத்துக்கு உண்டு. இது வெறும் தமிழர் பிரச்சினை மட்டுமல்ல. இந்தியாவின் தேசியப் பிரச்சினை. போர் நிறுத்த உடன்பாடு அமலில் இருக்கும்போதே ஈராயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் ஈவு இரக்கமில்லாமல் கொல்லப்பட்டார்கள். வானளாவிய மாளிகையில் வாழ்ந்த தமிழ் மக்கள் ஏதுமற்றவர்களாக ஆனார்கள் என்பதைவிட ஏதிலிகளாக ஆக்கப்பட்டார்கள். சொந்த நாட்டிலேயே அகதியாக ஆவது போன்ற சோகத்தைவிட துயரமான சோகம் ஒன்று இருக்க முடியாது. மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழ மக்கள் ஏதிலியாகப் புலம் பெயர்ந்து விட்டார்கள். அழிவின் விளிம்பில் நின்று கண்ணீரில் முகம் பார்க்கும் அந்த ஈழ மக்கள் இன்னும் நம்புவது இந்தியாவைத்தான்’’ என்று பேசிக்கொண்டிருக்கும்போதே கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய மாவட்டச் செயலாளர் என் சட்டையைப் பிடித்து இழுத்து “நிறுத்து... உன்னை யார் பேசச் சொன்னது?’’ என்று கோபம் பொங்கக் கேட்கிறார். நான் நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருக்கிறேன்.

இதை உற்றும் ஊன்றியும் கவனித்த கலைஞர், “அவன் பேசட்டும்” என்றார். கரும்பு தின்னக் கூலியா வேண்டும். திசையதிர முழங்கினேன். வைத்த கண் வாங்காமல் கலைஞர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். “விடுதலை பெறுவதற்கு எதையெல்லாம் காணிக்கை கொடுக்க வேண்டுமோ அதையெல்லாம் தமிழர்கள் கொடுத்து விட்டார்கள். விதை விழுந்தால் விருட்சம்; கல் புதைந்தால் கட்டிடம்; இரத்தம் சிந்தினால் விடுதலை. இனி என்ன வேண்டும் ஈழ விடுதலைக்கு? எங்கள் தலை வேண்டுமா, தலைவர் கலைஞர் அவர்களே உங்கள் காலடிக்குக் கீழே காணாமல் போன எங்கள் காலத்தைத் தேடுகிற நாங்கள் அதற்கும் தயார் (கூட்டத்தில் ஒரே ஆரவாரம்). எங்கள் உயிர் அணுக்களில் தமிழை வைத்த கலைஞர் அவர்களே... எச்சரிக்க வேண்டியவர்களுக்கு எங்களை நம்பி எச்சரிக்கை செய்யுங்கள். அழும் வரைக்கும் அழுது பார்ப்போம். எங்கள் நெஞ்சின் அழுகைக்கும் எல்லை உண்டு. தாக்கப் பெற்று விழும் வரைக்கும் விழுந்துகொண்டே இருப்போம். நாங்கள் விழுவதற்கும் எல்லை உண்டு. அபயம் கேட்டுத் தொழும் வரைக்கும் தொழுதுகொண்டே இருப்போம். நாங்கள் தொழுவதற்கும் எல்லையுண்டு. நாங்கள் பொங்கி எழும் வரைக்கும் விட்டுவிட வேண்டாம். ஒருநாள் இளந்தமிழர் வெடிகுண்டை எடுக்க நேரும்’’ என்று ஆரவாரத்துக்கு முன்னால் முழங்கிவிட்டு “விடை பெறுகிறேன்” எனச் சொல்லி விடை பெற்று கீழே இறங்கி தரையில் வந்து உட்கார்ந்து விட்டேன்.

காட்டாறு போல் கோட்டாற்றில் திரண்ட கூட்டத்தின் கவனத்தைக் கவர்ந்தேன் என்பதைவிட கலைஞரின் கவனத்தைக் கவர்ந்தேன் என்பதில் எனக்கு அலாதியான ஆனந்தம். மாவட்ட நிர்வாகிகளுக்கோ என் மீது அளவில்லாத ஆத்திரம். இந்திய விடுதலைப் போர் நடந்த காலத்தில் இயங்கிய ஒத்துழையாமை இயக்கத்தோடு டெஸோ இயக்கத்தை ஒப்பிட்டு எஸ். எஸ். தென்னரசு பேசினார். கொந்தளிக்கும் கடலா, குமுறும் எரிமலையா, பூகம்பத் தாக்குதலா, புயலின் வீச்சா எனச் சிந்தனையும் உடலும் சிலிர்க்கக் கண்கள் சிவக்க அண்ணன் வைகோ பேசினார். நிறைவாகக் கலைஞர் பேசும்போது “தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக நாங்கள் மட்டும் பேசினால் தேச விரோத முத்திரை குத்திவிடுவார்கள் என்று எண்ணித்தான் அண்டை மாநில முதல்வர் அன்பு நண்பர் தெலுங்கு தேசத் தலைவர் என். டி . ராமராவ், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஏ. பி. வாஜ்பாய், காங்கிரஸ் எஸ் பிரிவைச் சார்ந்த உன்னி கிருஷ்ணன், பகுகுணா, டாக்டர் சுப்பிரமணியன்சுவாமி, தேசிய மாநாட்டு கட்சிப் பிரதி நிர்வாகிகள், அகாலிதளக் கட்சிப் பிரதிநிதிகள் ஆகியவர்களை அழைத்து அவர்களுடன் சேர்ந்து நாங்கள் குரல் கொடுக்கிறோம்.

இலங்கையில் தமிழ் ஈழம் மலரவும் அங்கே வாழும் தமிழர்களுக்கு நிலையான உரிமையும் நிரந்தரப் பாதுகாப்பும் கிடைத்திடுவதும்தான் எங்கள் நோக்கம்; எங்கள் கவலை. எங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு நிந்திக்கிறவர்கள் சிந்திப்பதற்காகச் சொல்லுகிறேன். எங்களை எல்லாம் கட்டுப்படுத்தி விடலாம். ஆனால், நான் மேடைக்கு வரும்போது இங்கே சம்பத் என்ற தம்பி பேசிக்கொண்டிருந்தானே... அவனை எல்லாம் கட்டுப்படுத்துகிற இடத்தில் நான் இல்லை’’ என்று ஆரவாரத்துக்கும் கைத்தட்டலுக்கும் இடையில் கலைஞர் சொன்னபோது சொர்க்கம் கிடைத்ததைப் போல் சொக்கிப் போனேன். வஷிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றதைப் போல் என்ற பழமொழிக்கு நானும் இலக்கானேன். ஆறாவது விரலாக என்னை அலட்சியப்படுத்தியவர்கள் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்கள்.

கலைஞர் உரையாற்றிச் சென்ற அடுத்த நாள் கலைஞரின் முதல் குழந்தையாம் முரசொலியில், தினகரனில் கலைஞரின் பேச்சு வெளிவந்திருந்ததுதான் எனக்குக் கிடைத்த அங்கீகாரம். முரசொலி ஏடு திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு வேதம் போன்றது. எதைப் படித்தாலும் படிக்காவிட்டாலும் தலைவர் கலைஞரின் பேச்சைப் படிக்கத் தவற மாட்டார்கள் கழக உடன் பிறப்புகள். கழகத் தோழர்களின் நெஞ்சகத்தில் எனக்கோர் இடம் கிடைத்தது. பேச்சுலகில் கால் பதிக்க தடம் கிடைத்தது. யார் இந்த சம்பத் என்ற கேள்வியை திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கேட்கத் தொடங்கினார்கள்.
அதிகாரத்தைக் குறி வைத்து அரசியலுக்கு வரவில்லை. எந்தப் பதவியையும் எதிர்பார்த்துப் பேசவில்லை. காலத்தீயில் கருகிப் போகாத பெரியார், அண்ணா, இலட்சியங்களைப் பேசுவதால் கிடைக்கிற பெருமிதத்திலும் உலகத்தின் எட்டுத் திசைகளிலும் பதினாறு கோலத்திலும் சிந்திச் சிதறிக் கிடக்கிற தொன்மை மிகுந்த தமிழ் தேசிய இனத்துக்கு ஒரு நாடு கிடைக்கிற போராட்டத்தில் என் நாக்கிற்கும் வாக்கிற்கும் ஒரு வாய்ப்புக் கிட்டுமானால் கிடைத்ததற்கரிய அந்த வாய்ப்புக்குக் காத்திருப்பதிலும் நிறைவு கிடைக்கிறது. நிம்மதியும் கிடைக்கிறது. கடந்து செல்கிற வாழ்வில் அடுத்தவர் கவனத்தை ஈர்ப்பதில் கோலமாகத் தெரியாவிட்டாலும் ஒரு புள்ளியாகவேனும் தெரிகிறேனே. அதை எனக்குத் தீர்மானித்துத் தருவது மேடைதானே!

(இன்னும் பேசுவேன்...)

x