முடிவற்ற சாலை 17: டால்பின் துள்ளும் ஏரி


ஒடிசாவுக்குப் போயிருந்தபோது டால்பின்கள் துள்ளும் சிலிகா ஏரியைக் காண்பதற்காகச் சென்றிருந்தேன். இந்தியாவில் டால்பின்கள் உள்ள ஒரே ஏரி இது என்றார்கள். கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய நதிகளில் இப்போதும் டால்பின்கள் வசிக்கின்றன. டால்பினைத் தமிழில் ஓங்கில் என்று கூறுகிறார்கள். அழிந்துவரும் இனம் என்பதால் இதை தேசிய நீர்விலங்காக அறிவித்திருக்கிறார்கள்.

ஒடிசா மாநிலத்தின் பூரி நகரிலிருந்து நூறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது சிலிகா ஏரி. மூன்று மாவட்டங்களை இணைக்கக் கூடிய மிகப் பெரிய ஏரி. 1,100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சிலிகா ஏரி, உலகின் உவர் நீர் ஏரிகளில் இரண்டாவது பெரிய ஏரி. சிலிகா ஏரியை ஒட்டி 132 கிராமங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்கிறார்கள். மீன்பிடிப்புதான் இவர்களின் வாழ்க்கை.

தமிழகத்தைப் போல ஒடிசாவில் வாகன நெருக்கடி கிடையாது. அதிலும் கிராமப்புறச் சாலைகளில் வாகனங்களைக் காண்பதே அபூர்வம். இயற்கையோடு இணைந்த வாழ்க்கை இன்னமும் காப்பாற்றப்பட்டுவருகிறது. மரபும் நவீனமும் சரிவிகிதமாக வாழ்வில் கலந்திருக்கிறது. மரபுக் கலைகளைப் பாதுகாக்க அரசு பெரும் முயற்சி எடுத்துவருகிறது. 

சிலிகா ஏரி கண்கொள்ள முடியாமல் கடல் போல விரிந்து பரந்திருந்தது. இந்த ஏரிக்கு குளிர்காலத்தில் வெளிநாட்டுப் பறவைகள் அதிகம் வருகின்றன. ஆகவே, அதைக் காண பயணிகள் அதிகம் வருகிறார்கள். ஒடிசா மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சிலிகா ஏரியில் படகுச் சவாரிக்கு ஏற்பாடு செய்துள்ளது. பல தனியார்ப் படகுகளும் சிலிகா ஏரியில் உள்ள தீவுகளைச் சுற்றிக் காண்பிக்கின்றன.

சட்பதா என்னும் சிறு தீவுக்கு இயந்திரப் படகு ஒன்றில் செல்லும்போது ஏரியில் இருந்து டால்பின்கள் துள்ளிக் குதித்தன. சந்தோஷத்தில் அருகிலுள்ள படகிலிருந்து கூச்சலிட்டார்கள். சிலர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். டால்பின்களின் விளையாட்டுத்தனத்தை ரசித்துக்கொண்டிருந்தேன்.

சிலிகா ஏரியை ஒட்டிய மீனவ கிராமங்களின் வாழ்க்கை தனித்து வமானது. அவர்கள் இந்த ஏரியை தெய்வமாகக் கருதுகிறார்கள். 

ஏரியை வணங்குகிறார்கள். சிலிகா ஏரியில் படகில் செல்வது அலாதியான ஆனந்தம். காற்று முகத்தைக் கோதும். நீலவானம் வரை விரிந்த தண்ணீர்.

சிலிகாவைக் கண்டதும் மனதில் கனடாவில் கண்ட சிம்கோ ஏரிதான் வந்து போனது. இரண்டு ஏரிகளையும் சகோதரிகள் என்றே நினைத்துக்கொண்டேன். சிலிகா ஏரியின் கரையில் மீன்விற்பவர்களிடம் ஒரு தமிழ்க் குரலைக் கேட்டேன். வெளிமாநிலத்தில் தமிழ் பேசுகிறவர்களைக் கண்டால் ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது. 

அவர்களிடம் சென்று விசாரித்தபோது தாங்கள் மதுரைப் பக்கம் என்று சொல்லி, பிழைப்புக்காக முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக அங்கு வந்துவிட்டதாகக் கூறினார்கள்.

வரலாற்றில் குறிப்பிடப்படும் கலிங்கம்தான் இன்றைய ஒடிசா. நமக்கும் அவர்களுக்கும் நீண்ட கால உறவு இருந்துவருகிறது. பண்பாட்டிலும் கலைகளிலும் நெருக்கமான உறவு அதிகம்.

ரகுராஜ்பூர் என்ற கலைக்கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அந்த ஊரின் அத்தனை வீடுகளிலும் கலைஞர்களே வசிக்கிறார்கள். வீடுகளின் முகப்புச் சுவர்களில் அழகிய வண்ணங்களில் ஓவியம் தீட்டியிருக்கிறார்கள். வீட்டுக்கு வீடு ஓவியக் கூடங்கள். விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.

அந்த ஊர்தான் புகழ்பெற்ற ஒடிசி நடனக் கலைஞர் கேளுசரண் மொகபத்ராவின் ஊர். அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். வரவேற்று உபசரித்தார்கள். எங்கள் வருகையை ஒட்டி அங்குள்ள நடனக்கூடம் ஒன்றில் கொட்டிபுவா என்ற நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நிகழ்வில் நடனமாடியவர்கள் அனைவரும் பதின்வயது பையன்கள். ஆனால், பெண் வேஷமிட்டு நடனமாடுகிறார்கள். மிக அழகான நடனமது.

கொட்டிபுவா நடனக் குழு உலகெங்கும் பயணம் செய்து நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்கள். இந்த நடனப் பயிற்சி பெறுவதற்காக குருவிடம் ஐந்து வயதில் ஒப்படைக்கப்படுகிறார்கள். பன்னிரண்டு வயது வரை தீவிரமான பயிற்சி அளித்து பின்பே அவர்கள் நடன அரங்கேற்றம் செய்யப்படுகிறார்கள். நடனமாடும் மேடையில் அவர்களைப் பையன்கள் என்று அடையாளமே காண முடியாது.

இந்த கொட்டிபுவா நடனம் ரகுராஜ்பூரில்தான் துவங்கியிருக்கிறது. ஆண்டுதோறும் பூரி ஜெகனாதர் கோயில் விழாவில் கண்டிப்பாக கொட்டிபுவா நடனம் இடம் இருக்கும். கிருஷ்ணரின் லீலைகளை விளக்கிய கதையே இந்த நடனத்தின் மையப்பொருள்.

குருவின் வீடே நடனப் பள்ளி. அங்கே மாணவர் எவரும் தலைமயிரைக் கத்தரித்துக்கொள்ளக் கூடாது. நெற்றியில் குங்குமம் வைத்துத் தலையில் பூச்சூடியே அவர்கள் நடனம் பழகுகிறார்கள். மேடை நடனத்தின்போது அணிகலன்களை அணிந்துகொள்கிறார்கள். பதினைந்து வயதுக்குட்பட்ட பையன்களே இதில் நடனமாடுகிறார்கள்.

உடலை வில்லாக வளைத்து நடனமாடுகிறார்கள். பிரமிட் போல ஒருவர் மீது மற்றவர் ஏறி நின்று வியக்கவைக்கிறார்கள். இந்த கொட்டிபுவாவிலிருந்தே ஒடிசி நடனம் உருவானது என்கிறார்கள் ரகுராஜ்பூர் மக்கள்.

ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றும் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். சிறந்த வரலாற்று ஆய்வாளர். ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்னும் ஆய்வு நூலை எழுதியவர். மேலும் ஒடிசா மாநில வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சித் துறைச் செயலாளராகப் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். 
அதிகாரி கோ.மதிவதனன், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இதுபோன்ற 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒடிசாவில் சிறப்பான பதவிகளில் இருக்கிறார்கள்.

புவனேஸ்வரத்திலுள்ள தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் சிறப்பாக தமிழ் விழாவை நடத்துகிறது. ஒடிசா அரசு எழுத்தையும் இலக்கியத்தையும் போற்றுவதுடன் ஆண்டுதோறும் கவி சம்மேளனம் ஒன்றையும் நடத்துகிறது. அதில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிக் கவிஞர்கள் கலந்துகொள்கிறார்கள்.

ஒடிசா மாநிலம் பெருமளவு தமிழகத்தைப் போன்றது. அரிசி உணவு சாப்பிடுவதை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். மிகவும் சுவையான சைவ உணவு கிடைக்கிறது. இந்தியாவில் முதன்முறையாக நெல் விளைந்த இடம் ஒடிசாவின் கோராபுட் மாவட்டம் என்கிறார்கள்.

நெல் ஆராய்ச்சி மையம் ஒடிசாவின் கட்டக்கில் உள்ளது. கோராபுட்டில் பல்வகையான நெல் ரகங்கள் பயிரிடப்படுகின்றன. அந்த நெல்ரகங்களின் மாதிரிக் காப்பகம் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதை நேரில் கண்டேன். சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் செந்நெல்லை அங்கேதான் கண்டேன்.

கோராபுட் அதிகம் பழங்குடி மக்கள் வசிக்கிற பகுதி. அங்குள்ள மலைக் கிராமங்களைப் பார்த்து வந்தேன். மலையில் ஒரு நாள் முழுவதும் வேலை செய்தால் அவர்களுக்கு கிடைக்கும் கூலி வெறும் பத்து ரூபாய் மட்டுமே.

காடுதான் மலைவாழ்மக்களின் ஆதாரம். அதை விட்டு அவர்களைத் துரத்தி வெளியேற்றத் தொடர் முயற்சிகள் நடந்துவருகின்றன. இதற்கான முக்கிய காரணம் கனிம வளங்கள். அதை அடைவதற்காகப் பெரிய நிறுவனங்கள் பழங்குடி மக்களை விரட்டியடிக்கிறார்கள். இந்த அவலத்தை கோராபுட்டில் நேரில் கண்டேன்.

ஒடிசாவின் பெருந்துயரம் புயல். ஆண்டுதோறும் புயல்மழையில் சிக்கிப் பெரும்சேதம் ஏற்படுகிறது. இதனால் புயல் உதவி மையங்கள், வசிப்பிடங்கள் கடற்கரையோர கிராமங்களில் நிரந்தரமாக அமைக்கப் பட்டிருக்கின்றன.

கோராபுட் மலையிலிருந்து காரில் கீழே இறங்கி வருகையில் யாரோ தொலைவில் பாடுவது கேட்டது. மலையேறிக்கொண்டிருக்கும் இரண்டு ஆதிவாசிகள் ஏகாந்தமாகப் பாடிக்கொண்டு நடந்தார்கள். அந்தப் பாடல் மொழி புரியாவிடினும் இனிமையாக இருந்தது. காற்றில் கரைந்த பாடலைக் கேட்டபடியே மலையை விட்டு நிலம் நோக்கி இறங்கினேன்.

(பயணிக்கலாம்...)

x