தமிழையும் கலையையும் வளர்த்த மதுரை, தமிழ் சினிமாவை வளர்த்தெடுத்ததில் சென்னை, சேலம் நகரங்களுக்குக் கொஞ்சமும் குறைந்தது அல்ல. மதுரையில் மையம் கொண்டிருந்த பாய்ஸ் கம்பெனியில் பயிற்சிபெற்ற நடிகர்கள்தான் 60-கள் வரையிலும் தமிழ் சினிமாவை ஆண்டார்கள். சினிமா தயாரிப்பு, திரையிசை ஆகியவற்றில் அழுத்தமான தடம் பதித்த மதுரைதான், தமிழ் சினிமாவின் முதல் ‘பிளாக் பஸ்டர்’ வெற்றிப் படத்தைக் கொடுத்தது. அந்தப் படத்தை இயக்கியவர்தான் ஒய்.வி.ராவ் என்று அழைக்கப்பட்ட எறகுடிப்பட்டி வரதராவ்.
கல்கத்தா சென்று பிரம்மாண்டமான பேசும் படங்களைத் தயாரித்து, வெளியிட்ட நிறுவனம் ‘மதுரை ராயல் டாக்கீஸ்’. அந்த நிறுவனத்துக்காக ராவ் இயக்கி, அதில் கிருஷ்ணராகவும் நடித்த அந்த மாபெரும் வெற்றிப் படம் ‘சிந்தாமணி’.1937-ல் வெளியான அப்படத்தில் நல்ல உள்ளம் கொண்ட தாசி, சிந்தாமணியாக நடித்தார் சிறந்த அழகிலும் இனிமைக் குரலிலும் அந்நாளில் புகழ்பெற்றிருந்த பாடகி அஸ்வத்தம்மா. எம்.கே.தியாகராஜ பாகவதர் கதாநாயகன். படம் வெளியாகி மதுரையிலும் சென்னையிலும் ஓராண்டு காலம் ஓடி வசூலைக் குவித்தது.
‘சிந்தாமணி’ படத்தை மதுரையில் திரையிட்டிருந்த ‘சிட்டி’ தியேட்டர் உரிமையாளர்கள், படத்துக்குக் கிடைத்த மிதமிஞ்சிய வசூல் தொகையைக் கொண்டு, அந்தப் படத்தின் பெயராலேயே ‘சிந்தாமணி’ என்ற பிரம்மாண்டமான திரையரங்கைக் கட்டினார்கள்.
சிந்தாமணியின் வெற்றிக்குப்பின் எம்.கே.தியாகராஜ பாகவதரை எம்.கே.டி என்று மூன்று எழுத்துகளால் அழைக்கத் தொடங்கினார்கள். ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதேடி’ என்ற பாடல் உட்பட பாபநாசம் சிவன் இசையமைப்பில் படத்தில் இடம்பெற்ற 25 பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகின. கிராமபோன் இசைத்தட்டு விற்பனையிலும் ‘சிந்தாமணி’ சாதனை படைத்தது.