கேரள வெள்ளத்துக்குக் காரணம் ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்று கேரள அரசு இசைவு தெரிவித்ததுதான் காரணம் என்று ஒரு தரப்பு கிளப்பிவிட, சமூக வலைதளங்களில் அது மிகப்பெரிய விவாதமாக வளர்ந்தது.
கூடவே, கவிஞர் மனுஷ்ய புத்திரன் கேரள வெள்ளம் குறித்து ‘ஊழியின் நடனம்’ என்ற தலைப்பில் கவிதை ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். அதில், பெண்களைக் கோயிலுக்குள் அனுமதித்ததுதான் வெள்ளத்துக்குக் காரணம் என்று கூறியவர்களை விமர்சிப்பது போன்ற வரிகள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து, மனுஷ்ய புத்திரன் பெண்களையும் கடவுளையும் அசிங்கப்படுத்திவிட்டார்; ஆபாசமாக எழுதிவிட்டார் என்று போர்க்கொடி தூக்கியுள்ளன சில அமைப்புகள். சமூக வலைதளங்களில் மனுஷ்யபுத்திரனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விவாதங்கள் சூடுபறக்கின்றன. பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.