குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை வையுங்கள்!


ஆரோக்கியமான வாழ்க்கை - இந்த வார்த்தையைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. வாழும் காலம் முழுமைக்கும் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது மனிதர்களின் முக்கியக் கனவாகும். தாங்களே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் இன்னும் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. தங்கள் ஆசைப்படி குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க பெற்றோர் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

தூக்கம் முக்கியம்

குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு தூக்கம் மிகவும் முக்கியம். அடுத்த நாளுக்கு தேவையான ஆற்றலை இந்தத் தூக்கம்தான் குழந்தைகளுக்கு அளிக்கிறது. எனவே, உங்கள் குழந்தைகள் தினமும் 8 முதல் 10 மணிநேரம் வரை தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பள்ளிக்கு செல்லாத சிறு குழந்தைகள் தினமும் கொஞ்சம் அதிகமாக 13 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சில குழந்தைகள் இரவில் தூக்கம் வரவில்லை என்று கூறி இரவில் நெடுநேரம் விழித்திருக்கும். இதுபோன்ற குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் தூக்கம் வர, அவர்களை தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்கு அனுப்புங்கள்.

குழந்தைகள் தூங்கச் செல்வதற்கு முன் வீட்டில் உள்ள டிவி, கம்ப்யூட்டர் போன்றவற்றை அணைத்து வையுங்கள். முடிந்தவரை குழந்தைகள் தூங்கச் செல்லும் நேரத்திலேயே பெற்றோரும் படுக்கை அறைக்குச் சென்றுவிட வேண்டும். மாறாகக் குழந்தைகளைப் படுக்க அனுப்பிவிட்டு பெற்றோர்கள் டிவி பார்த்துக்கொண்டிருந்தால், அந்தச் சத்தமே குழந்தைகளின் தூக்கத்தைக் கெடுக்கும். எனவே, முடிந்தவரை குழந்தைகள் தூங்கச் செல்லும்போதே பெற்றோரும் தூங்கச் செல்ல வேண்டும்.

x