படிப்பு மட்டுமல்ல… இது இவர்களுக்கான அங்கீகாரம்!


கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரி அது. கூட்டம் கூட்டமாய் வளாகத்துக்குள் உலவும் சக மாணவர்களோடு சகஜ
மாக வலம் வருகிறது மூவர் கூட்டணி. மரத்தடி ஒன்றில் வாய் நிறைய சிரிப்பும் அரட்டையுமாக இருக்கும் இவர்கள் மூவருமே மாற்று பாலினத்தினர். அப்படிச் சொல்லிக் கொள்வதை அவர்கள் பெருமையாகக் கருதுவதுதான் அவர்களை இந்தக் கட்டுரைக்கு அழைத்து வந்திருக்கிறது. 

இனி அவர்களோடு... எர்ணாகுளத்தைச் சேர்ந்த தீர்த்தா சார்விகா ஏற்கெனவே பி.டெக் முடித்த பட்டதாரி. இப்போது இங்கே பி.ஏ ஆங்கிலம் படிக்கிறார். தனது கதையைச் சொல்லும்போதே தீர்த்தாவுக்கு முகமெல்லாம் பூரிப்பு. “என்னோட அப்பா ஈஜி புஷ்பன் ஆட்டோ தொழிலாளி. அம்மா மைதிலி இல்லத்தரசி. எனக்கு பெத்தவங்க வைச்ச பேரு அனந்து. எல்லாப் பசங்களையும் போலத்தான் நானும் ஓடியாடிட்டு இருந்தேன். ஏழாம் வகுப்பு படிக்கும்போதுதான் எனக்குள்ள பெண் தன்மை எழுவதை உணர்ந்தேன். 

அது தெரிந்தும் எந்தச் சூழ்நிலையிலும் பெற்றோர் என்னை ஒதுக்கல. சொல்லப்போனா, என்னோட குடும்பமும், என் நண்பர்களும்தான் எனக்கு முதுகெலும்பா இருந்தாங்க; இன்னமும் இருக்காங்க. பொறியியல் கல்லூரியில் பி.டெக் படிக்கும்போதே பெண்ணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சையும் செஞ்சுகிட்டேன். ஆனாலும், பி.டெக். படிச்சு முடிச்சபோது சான்றிதழ்களிலும் ‘ஆண்’ என்றுதான் அடையாளமிட்டுத் தந்தார்கள். 

ஆனால், பெண் என்ற அடையாளத்துடன் படிக்கணும்ன்னு எனக்கு ஆசை. அதுக்கு வீட்டுலயும் சம்மதிச்சதால, இதோ இப்போ ‘தீர்த்தா சார்விகா’ என்ற பெயரில் பெருமிதத்தோடு படிக்கிறேன்” என்கிறார் தீர்த்தா. எம்.எஸ்.டபிள்யூ படித்து சமூக சேவையில் மிளிர வேண்டும் என்பது இவரது லட்சியம். மாடலிங் கலைஞராகவும் உள்ள இவர், கோழிக்கோட்டில் நடந்த திருநங்கைகளுக்கான ஃபேஷன் ஷோவிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

x