மகளின் செல்போனைப் பார்த்துக்கொண்டிருந்த பிரேமாவுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பொறுமையாக மீண்டும் பார்த்தார். தன் வகுப்புத் தோழன் ஒருவனுக்கு, ‘ஹாய் டா... வெயிட் பண்ணு, சாயந்திரம் அனுப்புறேன்...’ என முதலில் ஒரு மெசேஜை அனுப்பியிருந்தாள். அதற்கு அந்தப் பையன் சிரிப்பது போன்ற ஒரு எமோஜியை அனுப்பியிருந்தான். பிறகு இரண்டு வாரங்களுக்கு முன் அவளது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுத்த படங்கள் சிலவற்றை அவனுக்கு அனுப்பியிருந்தாள். இதைத்தான் அனுப்புவதாகச் சொல்லியிருந்தாள் போல. அவனும் அதற்கு நிறைய ஹார்ட்டினும் பலூன்களும் அனுப்பியிருந்தான். கூடவே முத்தம் கொடுக்கிற எமோஜியையும் அனுப்பியிருந்தான். அவற்றை ஏற்றுக்கொண்ட பாவனையில் இவள் நன்றி சொல்லி கைகூப்பும் எமோஜியை அனுப்பியிருந்தாள். தன் மகளா இப்படியெல்லாம் துறுதுறுப்புடன் பேசியிருக்கிறாள் என்பதை பிரேமாவால் நம்பவே முடியவில்லை. தன் மகள் இப்படியெல்லாம் அரட்டையடிப்பாளா என்பதை பிரேமாவால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.
மகளின் இன்னொரு உலகம்
கையில் போனை வைத்தபடியே யோசித்துக்கொண்டிருந்த பிரேமாவைத் திடீரென வந்த நோட்டி ஃபிகேஷன் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்தது. இன்ஸ்டாகிராம் அனுப்பிய நோட்டிஃபிகேஷன் அது. திறந்து பார்த்தால் தன் மகள் விதவிதமான கெட்டப்புகளில் செல்ஃபி எடுத்து அப்லோட் செய்திருந்தாள். அதைப் பலரும் லைக் செய்திருந்தார்கள். ஒவ்வொரு படத்திலும் விதவிதமான அபிநயங்கள் காட்டியபடி பார்க்கவே ஸ்மார்ட்டாக இருந்த மகளைப் பார்த்ததும் பிரேமா பிரமித்துவிட்டார். மகளின் புரொஃபைலுக்குச் சென்றார். அதில் இருந்த படமும் அட்டகாசமாக இருந்தது. இத்தனை நாட்களாகத் தன்னையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தவளா இவள் என்று தோன்றியது. ஸ்கூலுக்குக் கிளம்பும் அவசரத்தில் தலையைக்கூட சரியாகப் பின்னிக்கொள்ளத் தெரியாமல் தன்னைத் துணைக்கு அழைத்த மகள் சில மாதங்களாக விதவிதமாக தலையைச் சீவிக்கொள்வது பற்றிப் பெருமைப்பட்டதை இப்போது நினைத்துப் பார்த்தார் பிரேமா. ‘என்னைப் பற்றி’ என்ற அறிவிப்பின் கீழ் மகள் பகிர்ந்திருந்த தகவல்கள் பிரேமாவை அதிர்ச்சியின் எல்லைக்கே கொண்டுசென்றன. முத்தம் கொடுப்பதைப் போல உதடுகளைக் குவித்தபடி எடுத்திருந்த செல்ஃபியைச் சுற்றித் தனக்குப் பிடித்தமான பாடல், புத்தகம் எனப் பலவற்றைக் குறிப்பிட்டிருந்தாள். அவற்றுக்கிடையே ‘இன்ட்ரஸ்டட் இன் மென்’ எனக் குறிப்பிட்டு ஹார்ட்டின் சிம்பலையும் போட்டிருந்தாள். ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் மகளுக்கு ஆண்கள் மீது விருப்பமா என மாய்ந்துபோனார் பிரேமா. தன் கண்ணெதிரில் இருப்
பவள் மட்டும் தன் மகள் அல்ல, அதைத் தாண்டியும் அவளது உலகம் பல்வேறு விஷயங்களால் சூழப்பட்டிருக்கிறது என்பது பிரேமாவுக்குப் புரிந்தது.
தோழியாக நினைத்தது தவறா?
ஆளுக்கொரு செல்போன் இருப்பது சகஜமாகிவிட்ட வீடுகளில் பிரேமாவின் குடும்பமும் அடக்கம். ஏராளமான வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்கள் கையடக்க விலைக்குக் கிடைப்பதால் அவற்றில் சிறந்த ஒன்றைத் தன் மகளுக்காகக் கணவனிடம் சொல்லி வாங்கிக்கொடுத்தார் பிரேமா. அவள் பாடம் தொடர்பான தகவல்களை அதில் தேட வேண்டும் என்பதற்காக அன்லிமிடெட் டேட்டாவையும் போட்டுத் தந்திருந்தார். மகளும் பள்ளி விட்டு வந்ததும் அம்மாவின் முன்னால் உட்கார்ந்து தனக்கு வேண்டிய தகவல்களை செல்போனில் பார்த்துப் படிப்பாள், எழுதுவாள். ஏதாவது சந்தேகம் வந்தால் தன் தோழிகளிடம் போன் செய்து கேட்பாள். சில நேரம் இவளுக்கும் போன் வரும். பிரேமா அதையெல்லாம் அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை. காரணம் தோளுக்கு மேல் வளர்ந்த மகளைத் தோழியாக நடத்த வேண்டும் என்பது பிரேமாவின் கொள்கை. அதனால்தான் அவள் ஏதாவது செய்தால்கூட ஒவ்வொன்றையும் தோண்டித் துருவி விசாரிக்க மாட்டார். ஆனால், அவள் சமூக ஊடகங்களில் இவ்வளவு தூரம் சென்றிருப்பாள் என்பதை பிரேமா கனவிலும் நினைத்திருக்கவில்லை. என்ன செய்வது என யோசித்தார்.
பெற்றோர் எடுத்த முடிவு
அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை. தன் மொபைலை சர்வீஸுக்குக் கொடுத்திருப்பதால் மகளின் செல்போனைக் கொண்டுவந்ததால்தானே இது தெரிந்தது. இல்லையென்றால் நிலைமை என்னவாகியிருக்கும்? மகள் அடுத்தடுத்த கட்டத்துக்கு வேகமாகச் சென்றிருப்பாளோ, நிலைமை கைமீறிப்
போயிருக்குமோ என யோசிக்கும்போதே பிரேமாவுக்கு மனம் பதைபதைத்தது. அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார். இதைக் கணவருக்குத் தெரியப்படுத்தலாமா, நாமே அவளிடம் கேட்டுவிடலாமா, என்னவெனக் கேட்பது என்று மனதுக்குள் குழப்பம். தனியாக யோசிப்பதைவிட கணவரிடம் பகிர்ந்துகொண்டால் வேறு ஏதாவது புதிய வழி கிடைக்கும் என நினைத்தார். கணவருக்கு போன் செய்து சுருக்கமாகத் தகவல் சொன்னார். அடுத்த ஒரு மணி நேரத்தில் அவரும் வீடு திரும்ப, இருவரும் மகளைப் பற்றி விவாதித்தனர். மகள் பள்ளி முடிந்து வந்ததும் அவளிடம் நேரடியாகவே இதைப் பற்றிப் பேசுவது என முடிவெடுத்தனர். அதற்கு அவள் எப்படி எதிர்வினையாற்றுகிறாள் என்பதைப் பொறுத்து அடுத்தடுத்துப் பேசலாம் என்று பிரேமா சொன்னதை அவருடைய கணவரும் ஆமோதித்தார். மகள் வரும்வரை இருவரும் காத்திருந்தனர். எக்காரணம் கொண்டும் கோபப்பட்டோ அதட்டல் தொனியிலோ மகளிடம் பேசக் கூடாது என்பதே இருவரின் முடிவுமாக இருந்தது.
அம்மாவை நம்பலாமா?
வீட்டுக்குள் நுழைந்ததுமே அனுஷாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. வழக்கமாகத் தான் வீட்டுக்கு வந்து படிக்கத் தொடங்கும் நேரத்தில்தானே அப்பாவும் அம்மாவும் ஆபீஸ் முடிந்து வருவார்கள் என நினைத்து அதைக் கேட்கவும் செய்தாள். “இன்னைக்கு வேலை கொஞ்சம் சீக்கிரம் முடிஞ்சுடுச்சு. உன்கூட இருக்கலாம்னுதான் வந்துட்டோம்” என்று இருவரும் சொல்ல, அனுஷாவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.
அம்மாவையும் அப்பாவையும் லேசாக அணைத்துத் தன் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினாள். மகள் தன் வழக்கமான வேலைகளை முடித்துவிட்டு வரும்வரை இருவரும் பொறுமையுடன் காத்திருந்தனர். படிக்க உட்கார்ந்ததுமே, “அம்மா என் செல்போன் எங்கே?” என்றாள். அந்தத் தருணத்துக்காகவே காத்திருந்ததைப் போல பிரேமா பேச்சைத் தொடங்கினார். “அனு குட்டி, நீ இன்ஸ்டாகிராம்ல இருக்கியா? போட்டோ எல்லாம் ரொம்ப பிரமாதம்” என்றார் சிரித்தபடி. அம்மாவிடமிருந்து அனுஷா இதை எதிர்பார்க்கவில்லை. “அப்புறம் உனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க போல. இப்பல்லாம் அவங்களைப் பத்தி எங்ககிட்ட சொல்றதே இல்லை” என்று சொல்ல, அனுஷாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. “உன்னை இன்னும் நாங்க குட்டிப் பொண்ணாதான் நினைச்சிருக்கோம். ஆனா நீ, நிறைய புக்ஸ் படிக்கிறே, பாப் ஆல்பம்லாம் கேட்கிற போல” என அப்பாவும் தன் பங்குக்கு இணைந்துகொண்டார். இத்தனை நாட்களாக தனிமையின் துணையோடு மட்டுமே மாலை நேரத்தைக் கழித்துவந்த அனுஷாவுக்கு அப்பா, அம்மாவின் இந்தப் பேச்சு இனம்புரியாத உணர்வைத் தந்தது. கொஞ்சம் பாதுகாப்பாகவும் உணர்ந்தாள். இவர்களை நம்பி எல்லாமே சொல்லலாமா வேண்டாமா என யோசித்தாள். “உன் பர்த்டேவுக்கு எடுத்த போட்டோவை ஆதித்யாவுக்கு அனுப்பியிருக்கியா? எல்லா போட்டோவிலும் நீ அழகா இருக்க” என்று பிரேமா சொன்னார்.
தனிமை என்னும் சுழல்
தன் செல்போனை அக்குவேறு ஆணி வேறாக அம்மா அலசியிருக்கிறார் என்பது அனுஷாவுக்குப் புரிந்துவிட்டது. அதை அப்பாவிடமும் சொல்லிவிட்டார், அதனால்தான் இருவரும் இன்று சீக்கிரம் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள் என்பதையும் அவள் கண்டுகொண்டாள். ஆனால், நாம் எதிர்பார்த்த மாதிரி இவர்கள் ஏன் தன்னை விசாரிக்கவில்லை எனக் குழம்பினாள் அனுஷா. “எனக்கு ஒண்ணு மட்டும் புரியல அனுஷா. ‘இன்ட்ரஸ்டட் இன் மென்’ அப்படின்னு புரொஃபைல் பிக்சர்ல போட்டிருக்கியே. அப்படின்னா என்னம்மா அர்த்தம்?” என்று பிரேமா கேட்டார். “அம்மா, அதை நான் டைப் பண்ணலை. இந்த மாதிரி நிறைய ரெடிமேட் செட்டிங்க்ஸ் இருக்கும். அதுல ஒண்ணை நாம செலக்ட் பண்ணிக்கலாம்” என்றாள் அனுஷா. மகள் உண்மைதான் சொல்கிறாள் என்பது அவளது தொனியிலிருந்தே புரிந்துகொண்டார் பிரேமா. “சரிடா கண்ணு. இப்ப நீ டீன் ஏஜ்ல இருக்கறதால ஏதாவது புதுசா பண்ணணும், எல்லாரோட கவனமும் நம்ம மேலதான் இருக்கணும் அப்படியெல்லாம் நினைக்கத் தோணும். அது தப்பில்ல. ஆனா, எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு. உன்னோட படிக்கிற பையன்களோட பேசறதுலயும் பழகறதுலயும் தப்பே இல்லை. ஆனா, போட்டோ அனுப்பறது, பெரியவங்க மாதிரி பேசிக்கறது இதெல்லாம் நல்லதில்லை. எல்லார்கிட்டேயும் சொல்ற மாதிரியான விஷயங்களை மட்டும்தான் இந்த வயசுல பேசணும். இது அட்வைஸ்லாம் இல்லை. என் ஃப்ரெண்டுக்கு நான் என்ன சஜெஷன் சொல்வேனோ அப்படித்தான் உனக்கும் சொல்றேன்” என அம்மா சொல்லச் சொல்ல, இமைகொட்டாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள் அனுஷா. “எல்லாமே சரிதான்மா. ஆனா, இவ்ளோ நாளா இப்படி எதையுமே நீங்க என்கிட்ட பேசினதே இல்லையே. ஒரே வீட்டுக்குள்ள நாம இருந்தாலும் நான் தனியாதானேம்மா இருந்தேன்” என்று மகள் சொல்ல, தங்கள் தவறு புரிந்தது அந்தப் பெற்றோருக்கு. வீட்டில் இருக்கிற நேரத்தில் மகளிடம் பேசாதது எவ்வளவு தவறு என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.
அனுஷா அதற்குப் பிறகும் வாட்ஸ் - அப்பில் தன் நண்பர்களுடன் பேசினாள். ஆனால், அம்மாவின் வார்த்தைகள் அவள் மனதுக்குள் அலாரம் போல ஒலித்துக்கொண்டே இருந்ததால் கவனத்தோடு நடந்துகொண்டாள். அனுஷாவின் பெற்றோரைப் போல நாம் நடந்துகொள்கிறோமா?
(நிஜம் அறிவோம்…)
-பிருந்தா சீனிவாசன்