சீனப் பெருஞ்சுவருக்கு அடுத்ததாக மிக நீண்ட பெருஞ்சுவரைக் கொண்டது ராஜஸ்தானின் கும்பல்கர் கோட்டை. இந்தியாவில் நான் பார்த்த மிகச்சிறந்த கோட்டையது. ஆரவல்லி மலையை வளைத்துக் கட்டப்பட்ட இக்கோட்டை பதினைந்து அடி அகலக் கோட்டைச் சுவரைக் கொண்டது. யானைகள் கொண்டு தாக்கினாலும் உடைக்க முடியாது என்றார்கள்.
ராணா கும்பா என்ற மன்னரால் கும்பல்கர் கோட்டை பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. செந்நிறமான இந்த மலைக்கோட்டை உதய்பூரிலிருந்து வடமேற்குத் திசையில் அமைந்துள்ளது.
தமிழகத்தில் மிகப் பெரிய கோட்டைகளாக அறியப்படுபவை செஞ்சியும் வேலூரும் திண்டுக்கல்லும் ஆகும். ராஜஸ்தான் கோட்டைகளுடன் ஒப்பிட்டால் இவை சிறிய கோட்டைகள். காலத்தின் சிதைவுகளைத் தாண்டி இன்றும் ராஜஸ்தான் கோட்டைகள் கம்பீரமாக உயர்ந்து நிற்கின்றன.
ராஜஸ்தான் மாநிலத்துக்குச் சென்றிருந்தபோது அதன் கிராமப்புறங்களைச் சுற்றிப் பார்த்தேன். தமிழகக் கிராமங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கியதாக இருந்தன. அடிப்படை வசதிகள் இல்லை. முறையான பேருந்து வசதிகள் கிடையாது. மக்கள் வேனில், ஜீப்பில்தான் போய்வருகிறார்கள்.
அரசு ஆரம்பப் பள்ளி ஒன்றுக்குச் சென்றிருந்தேன். எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளியது. பள்ளிக் கட்டிடம் நம் ஊரில் காணப்படும் நர்சரி பள்ளி அளவில் இருந்தது. வகுப்பறைகள் சுத்தமாக இல்லை. மாணவர்களுக்கு வெளியுலகம் தெரியவில்லை. ஆசிரியர்களில் ஆங்கிலம் தெரிந்தவர் ஒருவர்கூட இல்லை.
கிராமங்கள் சாதிப் பற்றில் மூழ்கியிருக்கின்றன. உயர்சாதியினர் தனி வீதியில் வசிக்கிறார்கள். கிராமச் சந்தைகள் காணப்படுகின்றன. உள்ளுர்க் காய்கறிகள், பழங்கள் விற்கப்படுகின்றன. மலினமான சோப்பு பவுடர், பற்பசை விற்கும் கடைகள் அதிகம் காணப்படுகின்றன. தமிழகக் கிராமப்புறங்களில் செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடைகள், ஜெராக்ஸ் கடைகளெல்லாம் வந்துவிட்டன. ஆனால், இன்னமும் ராஜஸ்தான் கிராமங்களுக்கு நவீன வசதிகள் வந்து சேரவில்லை.
புழுதி படிந்த மண் சாலைகள்; ஒட்டகம் மேய்க்கும் கிழவர்கள். ராஜஸ்தான், கல்லையும் கலையையும் நம்பியே வாழ்கிறது. ஒரு புறம் கிரானைட் கற்கள், விலை உயர்ந்த ஆபரணக் கற்கள். இன்னொரு புறம் கிராமியக் கலைகள், வேலைப்பாடு மிக்க உடைகள். கலைப்பொருட்கள். ஆடல்பாடல்கள். இவைதான் அந்த மாநிலத்தை வாழவைத்துக்கொண்டிருக்கின்றன. சுற்றுலாவே பிரதானம். எல்லா சுற்றுலா ஸ்தலங்களைப் போலவும் இங்கேயும் கைடுகளின் தொல்லை. ஏமாற்றுப் பேர்வழிகளின் மோசடிகள். பயணிகள் யார் போனாலும் ஜெம் ஸ்டோன் வாங்கித்தருகிறேன் என அழைத்துப்போய்ப் பணத்தைப் பறித்துக்கொண்டு ஏதாவது ஒரு கல்லை அவர்களுக்குக் கட்டிவிடுகிறார்கள். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் என்பதால் கலைப்பொருட்களின் விலையும் அதிகம். பெரும்பான்மை கலைப்பொருட்கள் மலினமானவை. வார்ப்பு எடுத்து உருவாக்கப்படுபவை. துணிகளும்கூட தரமற்றவையே.
கும்பல்கருக்கு வாடகை காரில் போய் இறங்கியபோது காலை 11 மணி. வெயில் உச்சத்தில் இருந்தது. கண்கொள்ள முடியாதபடி உயர்ந்து நின்ற கோட்டையில் எப்படி ஏறுவது என்ற மலைப்பு ஏற்பட்டது. தண்ணீர் பாட்டிலுடன் ஏறத் துவங்கினேன். கோட்டையின் தெற்கு வாயில் வழியாக நாம் உள் நுழைந்து நடந்தேன்.
கோட்டைகளைக் காண்பதற்குக் காலை அல்லது மாலை நேரம் ஏற்றது. குறிப்பாக, சூரியன் உதயமாகிற காட்சியைக் கோட்டையின் மீது இருந்து காண்பது பரவசமூட்டக் கூடியது. இதுபோலவே அஸ்தமனம். ஆனால், கும்பல்கரில் ஏறியபோது வெயில் ஏறியிருந்தது. யானைகள் செல்வதற்காக அமைக்கப்பட்ட பாதையது. அகலமாக இருந்தது. செங்குத்தாகச் செல்லும் பாதையில் ஏறுவது சிரமம். தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஏறினேன்.
மேலே ஏற ஏறக் காற்று முகத்தில் பட்டது. வெயிலின் அலைகளை மீறிக் காற்று ஏகாந்தமாக வீசிக்கொண்டிருந்தது. குரங்குகள் பயணிகளைத் துரத்திக்கொண்டிருந்தன. கோட்டையின் உச்சிக்குப் போனபோது தொலைவிலுள்ள சுற்றுச்சுவரும் கோயில்களும் கண்ணில் பட ஆரம்பித்தன.
கோட்டையின் உயரத்தில் நின்றதும் மனது ஒரு கழுகைப் போல இறக்கை விரித்துப் பறக்க ஆரம்பித்துவிட்டது. பறவைகளால்தான் கோட்டைகளை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியும். மனிதக் கண்களால் அந்த அகன்ற கோட்டையின் பிரம்மாண்டத்தை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை.
கும்பல்கர் கோட்டை மேவாரின் புகழ்பெற்ற மன்னர் ராணா பிரதாப் பிறந்த இடம். அந்த இடம் தனியே பாதுகாக்கபட்டுவருகிறது. ராணா கும்பா என்ற மன்னரின் ஆட்சியின்போது மேவார் அரசு குவாலியர் வரை விரிந்திருந்தது. ஆகவே, தனது பாதுகாப்பைக் கருதி மன்னர் 32 கோட்டைகளைக் கட்டினார். அதில் ஒன்றுதான் கும்பல்கர்.
ஏழு வாசல்கள் கொண்ட பெரிய கோட்டையது. ஆரவல்லி மலைத்தொடரின் நடுவே அமைந்துள்ளது. சுற்றிலும் 13 சிகரங்களைக் காண முடிகிறது, நீண்டு செல்லும் சுற்றுச்சுவர் பலமானது. இந்தச் சுவரின் அகலம் பெரியது. அதில் எட்டுக் குதிரைகள் ஒரே நேரம் செல்ல முடியும் என்றார்கள்.
ஒரு காலத்தில் அங்கே ஆயிரம் சமணக் கோயில்கள் இருந்ததாகச் சொல்கிறார்கள். அவை அழிக்கப்பட்டபிறகு மாமன்னர் ராணா கும்பா 108 சமணக் கோயில்களைக் கட்டினார். அத்துடன் சிவன், விஷ்ணு, காளி ஆகிய மூவருக்கும் கோயில் அமைத்தார். இவற்றுள் ஏழு ஆலயங்கள் மட்டுமே தற்போது உள்ளன.
இவ்வளவு பெரிய கோட்டையை எப்படி உருவாக்கினார்கள்? மலையின் ஊடாக வளைந்து வளைந்து செல்லும் கோட்டைச் சுவரின் கட்டுமானத்தைக் காணும்போது ராஜஸ்தானியக் கட்டிடக் கலைஞரின் திறமையை நினைத்து வியப்பாக இருந்தது. 700 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்தக் கோட்டைச் சுவர் அதே உறுதியோடு அப்படியே இருக்கிறது. எத்தனை உறுதியாகக் கட்டியிருக்கிறார்கள் என்று ஆச்சரியம் கொண்டேன்.
கோட்டையின் உள்ளே இடிந்த நிலையிலுள்ள மாளிகை ஒன்றைக் கண்டேன். பதே சிங் மன்னரால் கவிகை மாடங்களுடன் கட்டப்பட்ட அரண்மனை, சிதைந்த நிலையில் காணப்படுகிறது. அதன் மேல்மாடத்துக்குப் போய் நின்றபோது சுற்றிலும் விரிந்துள்ள ஆரவல்லி மலைத்தொடரின் அழகை ரசிக்க முடிந்தது.
எந்தப் பக்கமிருந்து எதிரி வந்தாலும் இக்கோட்டையின் உச்சியிலிருந்து தெரிந்துவிடும். ஆகவே, எதிரிகளால் இதைத் தாக்கவே முடியாது. கோட்டையின் சுவர் 36 கிலோமீட்டர் தூரம் நீண்டு செல்கிறது. சீனப் பெருஞ்சுவருக்கு அடுத்து உலகின் 2-வது பெருஞ்சுவராக இது விளங்குகிறது.
எதிரிகளின் வருகை குறித்து அறிந்தால் கோட்டை உச்சியிலிருந்து கண்ணாடியைக் கொண்டு ஒளியை உருவாக்கி சமிக்ஞை தருவார்களாம். உடனடியாக வாயில்கள் மூடப்பட்டுவிடும் என்றார்கள். இரவில் பந்தங்களை ஆட்டி எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.
கும்பல்கர் கோட்டை எதிரிகளால் வெல்ல முடியாதது. மொகலாயப் பேரரசர் அக்பர், அம்பரின் மன்னன் ராஜா மான் சிங், மார்வாரின் அரசர் ராஜா உதய் சிங் போன்ற அனைவரும் ஒன்றிணைந்து இந்தக் கோட்டையை எதிர்த்துப் போரிட்டபோது உள்ளே இருப்பவர்களை மடக்குவதற்காகக் குடிநீர் வரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. போதுமான குடிநீர் இல்லாத காரணத்தால் உள்ளிருந்த வீரர்கள் சரணடைய நேரிட்டது. அதுதான் கும்பல்கர் அடைந்த ஒரே தோல்வி.
கோட்டையிலிருந்து இறங்கி கீழே வந்து சுற்றிலும் உள்ள கோயில்களைக் கண்டேன். பயணிகளில் பெரும்பான்மையினர் புராதனக் கோயிலைக் காண வருவதேயில்லை. அதுவும் சமணக் கோயில்களில் ஆட்கள் யாருமேயில்லை.
கோட்டைகள் என்பவை கற்களால் ஆன கவசங்கள். ஒரு காலத்தில் மதுரை நகரும் இது போன்ற கோட்டைகளால் உருவாக்கப்பட்ட நகரம். பின்பு அவை அழிக்கப்பட்டுவிட்டன என்கிறார்கள்.
கும்பல்கர் கோட்டையில் மாலையில் ஒளிஒலி காட்சி நிகழ்த்தப்படுகிறது என்றார்கள். மாலை வரை காத்திருக்க முடியாது என்பதால் அதைக் காண இயலவில்லை. ராகுல சாங்கிருத்யாயன் எழுதிய ‘ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள்’ ஒரு முக்கியமான நூல். அது ராஜஸ்தானத்தின் அந்தப்புரங்களில் வசித்த பெண்களின் துயரங்களை விவரிக்கும் புதினமாகும்.
உதய்பூர் திரும்புவதற்காக காரில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு இடத்தில் தொலைவில் கும்பல்கர் கோட்டையின் சுவர் கண்ணில் பட்டது. காலத்தைத் தாண்டி அது மேவார் மன்னர்களின் வீரக் கதையைச் சொல்லிக்கொண்டிருப்பது போலவே பட்டது.
(பயணிக்கலாம்...)