சூரியனை நோக்கி... பார்க்கரின் பரவசப் பயணம்


‘வானம் வசப்படும்’, ‘சூரியன் தொட்டுவிடும் தூரம்தான்’ என்றெல்லாம் இலக்கியவாதிகளும் மேடைப் பேச்சாளர்களும் சொல்லிவிட்டுப்போய்விடுவார்கள். ஆனால், அதற்காக அறிவியலாளர்கள் அல்லவா பாடுபட வேண்டியிருக்கிறது!

அவர்கள் சொல்வது போல் சூரியனையும் தொட்டுப்பார்த்துவிடலாம் என்று துணிச்சலில் ‘நாஸா’ கடந்த வாரம் ‘பார்க்கர் சூரியத் துழாவி’ (Parker Solar Probe) என்றொரு விண்கலத்தை ஏவியிருக்கிறது. ‘கிட்டத்தட்ட’ சூரியனைத் தொட்டுப் பார்ப்பதுதான் இந்தத் துழாவியின் லட்சியம். ‘நல்ல லட்சியம்தான்! ஆனால், தொட்டுப் பார்ப்பதில் நமக்கென்ன பயன்?’ என்று நீங்கள் கேட்கலாம். இந்திய மதிப்பில் சுமார் 10,485 கோடி ரூபாய் அளவில் செலவுசெய்து இந்த விண்கலம் அனுப்பப்பட்டிருப்பது வெறுமனே சூரியனுடன் ‘செல்ஃபி’ எடுத்துக்கொள்ள அல்ல. நாம் இருக்கும் இந்தச் சூரியக் குடும்பத்தின் குடும்பத் தலைவரான சூரியனைப் பற்றியும், அவரது கோபதாபங்களைப் பற்றியும் நன்றாகத் தெரிந்துகொண்டால்தானே பிரச்சினை ஏதுமின்றி இங்கு நாம் குடும்பம் நடத்த முடியும். அதற்காகத்தான் இந்த ‘ஏவல்’.

சூரியக் காற்றலை

சூரியன் சில சமயம் கோபத்தைக் கக்குவதுண்டு, சூரியக் காற்றலை (Solar wind) என்ற பெயரில். 1859-ல், அப்படி சூரியக் காற்றலை கக்கப்பட்டபோது பூமியில் உள்ள தந்தித் தகவல் தொடர்பு பெரிதும் பாதிக்கப்பட்டது. அதிநவீனத் தகவல் தொடர்பு வலைக்குள் பூமி இருக்கும் தற்காலத்தில் அப்படியொரு சூரியக் காற்றலை நம் திசையில் வீசுமானால், உலகம் முழுதும் வரலாறு காணாத தகவல்தொடர்பு சேதாரம் ஏற்படும். பிறகு, அதைச் சரிசெய்ய பல ஆண்டுகள் ஆகும். சூரியக் காற்றலைக்கே இப்படியென்றால் இன்னும் உக்கிரமாகச் சூரியன் தனது கோபத்தை வெளிக்காட்டினால் பூமியின் கதி அதோ கதிதான்!

x