கருணாநிதியை அடக்கம் செய்த இடத்தில் இன்னும் ஈரம்கூட சரியாகக் காயவில்லை. அதற்குள்ளாக, அவரது திருவாரூர் தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற பட்டிமன்றம் தொடங்கிவிட்டது. கருணாநிதிக்காக திருவாரூரில் தங்கியிருந்து வாக்குச் சேகரித்த அவரது மகள் செல்வி அல்லது உதயநிதி ஸ்டாலின் தான் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் என்கிறார்கள். ஆனால், “குடும்ப உறுப்பினர்கள் யாரையும் நிறுத்தமாட்டார் தளபதி. எந்தக் கெட்ட பெயரும் இல்லாத உள்ளூர்வாசிக்குத்தான் ஸீட்” என்கிறது ஸ்டாலின் வட்டாரம். இதனிடையே, “இங்கே களமிறங்க மாவட்டத்தின் ‘கலை’யான ஒரு புள்ளி கனவு காண்கிறார். அதற்கு யாரும் குறுக்கே வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், ‘செல்வி போட்டி, உதயநிதி போட்டி...’ என அவர் தரப்பி லிருந்தே அள்ளிவிட்டு மற்றவர்களை திசை திருப்புகிறார்கள்” என்றும் சிலர் சொல்கிறார்கள்!
ஸ்டாலினை கூல்படுத்திய ரஜினி
காவேரி மருத்துவமனையிலும் ராஜாஜி ஹாலிலும் அழகிரியிடம் ரஜினி காட்டிய நெருக்கத்தை ஸ்டாலின் ரசிக்கவில்லையாம். இதை யாரோ ரஜினிக்கு பக்குவமாய் எடுத்துச் சொல்லி புரியவைத்திருக்கிறார்கள். இதன் பிறகுதான், திரைத் துறையினர் நடத்திய கருணாநிதி நினைவேந்தல் நிகழ்வில், “கலைஞருக்கு மெரினாவில் இடமளிக்கும் விவகாரத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் குதித்திருப்பேன்” என்றும் முதல்வரை “நீ என்ன பெரிய ஜாம்பவானா ..?” என்றும் ஆவேசமாய் பேசி, ஸ்டாலினை கூல்படுத்தினாராம் ரஜினி!
மணல் மாஃபியாக்களின் அன்பளிப்பு!