முடிவற்ற சாலை 15: சலவைக்கல்லில் ஒரு கனவு


ஒவ்வொரு பயணமும் ஒரு தனித்த அனுபவமே. ஊர்களை, வியப்பூட்டும் இடங்களைக் காண்பதை விடவும் மனிதர்களே என்னை அதிகம் வசீகரிக்கிறார்கள்.

மனிதர்கள் ஒன்றுகூடும் இடங்களுக்கு ஏதோ ஒரு மாயசக்தியிருக்கிறது. அந்தச் சக்திதான் மனிதர்களை ஈர்த்து ஒன்றுசேர்க்கிறது. ஆகவே, எங்கு மக்கள் திரளாக வந்து போகிறார்களோ அந்த இடத்தைப் போய்ப் பார்ப்பது வழக்கம். அது காய்கறிச் சந்தையாக இருக்கலாம் அல்லது சதுக்கமாக இருக்கலாம். ஆயிரமாயிரம் மக்கள் கூடும் இடத்தில் நானும் ஒருவனாகக் கரைந்து நிற்பது பிடித்தமானது.

அது போலவே நட்சத்திர உணவு விடுதிகளை விடவும் சாலையோர உணவகங்களே எனக்கு விருப்பமானவை. எந்த நாட்டுக்குப் போனாலும் அங்குள்ள சாலையோர உணவகங்களில் கிடைக்கும் உணவுவகைகளை ருசித்துப் பார்ப்பேன். பல நாடுகளில் உணவு விற்பனைக்கென்றே தனியான வீதிகள் இருக்கின்றன. அங்கே எல்லா நாட்டு உணவு வகைகளும் கிடைக்கும். அந்த வீதிக்குள் நுழைந்தால் உணவு தயாரிக்கப்படும் வாசமே நாவில் எச்சில் ஊற வைக்கும். அதிலும் பாலைவனத்தில் கிடைக்கும் உணவு வகைகள் அபூர்வமானவை. அரபுப் பாலைவனத்தில் சாப்பிட்ட ரொட்டியும் பழங்களும் மிகவும் ருசியாக இருந்தன.

துபாய் பயணம் மேற்கொண்டபோது ஷாப்பிங் மால்களுக்குப் போகக் கூடாது; அடுக்கு மாடிக் கட்டிடங்களை அண்ணாந்து பார்த்து நின்றுகொண்டிருக்கக் கூடாது; வணிக வீதிகளுக்குள் போகக்கூடாது என்றெல்லாம் முடிவு எடுத்துக்கொண்டுதான் சென்றேன்.

ஐக்கிய அரபுக் குடியரசானது துபாய், ஷார்ஜா, அபுதாபி, ராஸ் அல்கய்மா, ஃபுஜைரா, உம்முல்-குவைன், அஜ்மன் ஆகிய ஏழு அமீரகங்களைக் கொண்டதாகும். ஒவ்வொன்றும் தன்னாட்சி அமைப்பைப் பெற்றுள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும்இங்கு தங்கள் ஸ்தாபனங்களை நிறுவியுள்ளன. ஜெபல் அலியைத் தலைமை இடமாகக் கொண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைந்துள்ளன.

அதிக அளவில் வெளிநாட்டினரைக் கொண்டது எமிரேட். இது உள்நாட்டு மக்கள் தொகையை விட அதிகம். இந்தியர்கள் அதிகம்; அதிலும் குறிப்பாகக் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் மிக அதிகம்.

துபாயில் கட்டப்பட்டுள்ள மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா என்ற 160 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தின் 148-வது மாடியில் பார்வையாளர் தளம் உள்ளது. அங்கே போய்ப் பார்க்கலாம் என நண்பர்கள் அழைத்தார்கள். புர்ஜ் கலிபாவைத் தொலைவிலிருந்து பார்த்தால் போதும், உயரமான கட்டிடங்கள் என்னை வசீகரிப்பதில்லை என மறுத்துவிட்டேன். முடிவில் காரிலேயே புர்ஜ் கலிபாவைச் சுற்றிவந்தோம்.

ஷார்ஜாவிலுள்ள ‘அராபியன் வைல்ட்லைஃப் சென்ட’ரைக் காண்பதற்காகச் சென்றிருந்தேன். அரிய வகைப் பாம்புகளில் துவங்கி சிறுத்தை வரை அத்தனை விலங்குகளையும் குளிர்சாதனம் செய்யப்பட்ட உள்அரங்கில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

பிரம்மாண்டமான கண்ணாடி அரங்குகள். அதனுள் விதவிதமான பாம்புகள். அதில் சில பாலைவனத்தில் மட்டுமே காணக்கூடியவை. மிகுந்த விஷம் 
கொண்டவை.

கருநாகம் ஒன்றைப் பல வருஷங்களுக்குப் பிறகு அங்கே கண்டேன். அதன் கண்கள் கண்ணாடியை மீறித் துளைத்தன. நச்சுப்பாம்புகளில் இதுவே உலகில் மிக நீளமானது. இந்தப் பாம்புகள் 12 முதல் 13 அடி நீளம் வரை வளருகின்றன. கருநாகத்தின் நஞ்சானது மிகவும் கொடியது. இது தனது ஒரே கடியில் மனிதனைக் கொல்லக்கூடியது. கருநாகப் பாம்பினால் நீண்ட தூரத்துக்கு விஷத்தைப் பீய்ச்ச முடியும்.

அந்த வளாகத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த ‘இஸ்லாமிக் பொட்டானிக்கல் கார்ட’னைப் பார்வையிட்டேன். திருக்குரானிலுள்ள அத்தனை தாவரங்களை
யும் வகைப்படுத்திக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். கூடவே, அதே தாவரங்களின் தோட்டத்தையும் அமைத்திருக்கிறார்கள். பாலைவனத்தினுள் வாழை மரத்தைக் கண்டது வியப்பூட்டியது.

அரபுப் பாலைவனத்தினுள் பயணம் மேற் கொண்டேன். பாலைவனம் எப்போதுமே வசீகரமானது. மணல்முகடுகளைக் காண்பது பரவசமூட்டியது. மேலும் கீழுமாக கார் தாவித் தாவிச் சென்றபோது முடிவற்ற பாலைவெளியைக் காண முடிந்தது. அந்திவானத்தின் வெளிச்சம் தங்கம் உருகியோடுவது போலிருந்தது. பாலைவன மணலில் அநாயசமாகக் காரை ஓட்டி சாகசம் செய்த அந்த ஓட்டுநரைப் பாராட்டவேண்டும்.

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள ‘ஷேக் ஜாயத் கிராண்ட் மசூதி’யை அவசியம் பார்க்க வேண்டும் என நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு மசூதியைப் பிடிக்கும்.
இந்தியாவின் புகழ்பெற்ற மசூதிகளைக் கண்டிருக்கிறேன். ஆகவே, அவசியம் கிராண்ட் மசூதியைப் போய்ப் பார்த்துவிடலாமென்று கிளம்பிச் சென்றேன். 

அபுதாபி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமாகவும் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது. காரில் அபுதாபியினுள் நுழைந்தேன். தொலைவிலிருந்து பார்க்கும்போது கிராண்ட் மசூதி அலங்கார ஒளிவிளக்குகளால் கனவு போல ஒளிர்ந்துகொண்டிருந்தது.

இம்மசூதியை இஸ்லாமிய செவ்வியல் பாணியில் நவீன பொருட்களைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள். 11 ஆண்டுகள் இதன் கட்டிடப் பணி நடைபெற்றிருக்கிறது. முப்பது ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த மசூதிதான் அராபிய உலகின் மிகப் பெரிய மசூதி. பெரும்பகுதி வெண்சலவைக்கல். முத்துக்குப் பெயர்போன நாடு அமீரகம். உலகின் மிகப் பெரிய முத்து ஒன்று வானில் மிதந்துகொண்டிருப்பது போல மசூதியின் குவிமாடம் ஒளிர்ந்துகொண்டிருந்தது.

நுழைவாயிலில் நின்று வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன். சலவைக்கல்லால் உருவாக்கப்பட்ட பெருங்கனவாகக் கலைநுட்பத்தின் உச்சத்தைத் தொட்டிருந்தது மசூதி. நவீன காலத்திலும் மரபின் தொடர்ச்சியாகக் கட்டிடக் கலையை வளர்த்தெடுக்க முடியும் என்பதற்கான சாட்சியாக நின்றுகொண்டிருந்தது அம் மசூதி.
கவிழ்த்திவைக்கப்பட்ட வெண்ணிறக் கிண்ணம் போன்ற பிரம்மாண்டமான குவிமாடங்கள். இருபுறமும் மிதமான நீலவெளிச்சம், நான்கு பக்கமும் வான்நோக்கி உயர்ந்திருக்கும் மினார்கள். செம்பினால் செய்யப்பட்டுப் பொன்பூச்சு பூசப்பட்ட வேலைப்பாடுகளுடன் தூண்கள், சுவர்களில் பூவேலைப்பாடுகள். நடைபாதையெங்கும் மஞ்சளும் சிவப்பும் கலந்த ஒளிர்விளக்குகள்.
ஒரே நேரத்தில் நாற்பதாயிரம் பேர் பிரார்த்தனை செய்யும் பிரம்மாண்டமான பிரார்த்தனைக் கூடம். பூக்களும் கொடிகளுமான செதுக்குகள். உலகின் மிகப் பெரிய ஈரானியக் கம்பளம் மைய மண்டபத்தினுள் விரிக்கப்பட்டிருந்தது. ஈரானைச் சேர்ந்த அலி காலிக் இந்தக் கம்பளத்தை உருவாக்கியிருக்கிறார். 1,200 பெண்கள் அங்கேயே தங்கி இதனை நெய்திருக்கிறார்கள். கம்பளத்தின் எடை 35 டன். அதன் இன்றைய மதிப்பு 8.5 மில்லியன் டாலர்.

மசூதியின் முன்புள்ள செயற்கைக் குளத்தில் அதன் பிம்பம் பிரதிபலிப்பதைக் காண்பது அத்தனை அழகாக இருந்தது. சற்றுத் தள்ளி இதற்கெனத் தனியாக ஒரு இடத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள். அங்கிருந்து மசூதியின் முழுத் தோற்றத்தையும் காண இயலும்.

இந்த மசூதியை யூசுப் அப்தெலி என்ற சிரிய கட்டிடக் கலை நிபுணர் வடிவமைத்திருக்கிறார். நிறைய இந்தியர்கள் இந்தக் கட்டுமானப் பணியில் பணியாற்றியிருக்கிறார்கள். முப்பது ஏக்கர் பரப்பளவு கொண்டது இந்த வளாகம். நிலா வளர்வதற்கு ஏற்ப இந்த மசூதியின் ஒளியும் மாறிக்கொண்டேயிருக்கக் கூடியது. வெண்ணிறத்திலிருந்து அடர்நீலத்தை நோக்கியதாக இந்த மாற்றமிருக்கும் என்றார்கள். முழுநிலவு நாளில் இதைக் காண்பது பேரனுபவம்.

மெக்காவை நோக்கியுள்ள மையமண்டபத்தில் அல்லாஹ்வின் 99 திருப்பெயர்கள் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. மார்பிள் பேனல்கள், கண்ணாடித் துண்டுகள் கொண்ட அலங்கார வளைவுகள், சித்திர எழுத்துகளும் மலர் அலங்காரங்களும் கொண்ட சுவர்கள் என ஒவ்வொரு அங்குலமும் அலங்காரமாக உருவாக்கப்பட்டுள்ளது. தங்கத்தை உருக்கி வார்த்திருக்கிறார்கள். இது உலகிலுள்ள பெரிய மசூதிகளில் ஆறாவதாகும். மிகுந்த தூய்மையுடன் பராமரிக்கிறார்கள்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் நிறுவனர்களில் ஒருவரும், அதன் முன்னாள் அதிபருமான ஷேக் ஜாயத் பின் சுல்தான் அல் நஹ்யானின் பெயரே இந்த மசூதிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இவ்விடத்திலேயே ஷேக் ஜாயத்தின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசூதியைத் தொலைவிலிருந்து படம் எடுப்பதற்காகத் தனியே ஒரு அரங்கு அமைத்திருக்கிறார்கள். அங்குள்ள குளத்து நீரில் மசூதியின் தோற்றம் பிரதிபலிக்கிறது. அந்த இடத்துக்கு காரில் சென்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். தாஜ்மகாலைப் போலக் கலையின் உன்னதங்களை நம் காலத்திலும் உருவாக்க முடியும் என்பதன் சாட்சியம் போலவே இந்த மசூதி இருக்கிறது.

எல்லா சமயங்களிலும் கடவுளுக்காக மனிதர்கள் உருவாக்கிய வழிபாட்டு ஸ்தலங்கள் மகத்தானவை. கலையின் வழியாகவே மனிதன் கடவுளுடன் உறவு கொள்கிறான்; கடவுளைக் கொண்டாடுகிறான். கலையே மனிதனின் மகத்தான வெளிப்பாடு. அதை ரசிக்கவும் கொண்டாடவும் பயணமே தூண்டுதலாகிறது.

(பயணிக்கலாம்...)

x