கோடம்பாக்கத்தின் காட்ஃபாதர்!


அந்தக் காலத்தில் படத்தின் கதையையும் பாடல்களையும் புத்தகமாக அச்சிட்டு தியேட்டர் வாசலிலேயே விற்பார்கள். தமிழில் அப்படி முதன் முதலில் புத்தகம் விற்கப்பட்ட முதல் பேசும்படம் ‘காளிதாஸ்’. 1931, அக்டோபர் 31-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் தமிழ், தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட பல நாடகக் கலைஞர்கள் அவரவர் மொழியிலேயே பேசி நடித்திருந்தனர். இப்படிக் குழப்பத் தோடு பேசத் தொடங்கிய தமிழ் சினிமா, தனது முதல் பத்து ஆண்டுகளை நிறைவு செய்யும் முன்னரே பெரும் புரட்சிகர ஊடகமாக மாறியது. அப்படி மாற்றிக் காட்டிய வர்தான் ‘தமிழ் சினிமாவின் தந்தை’ என்று போற்றப்படும் கே. சுப்ரமணியம்.

இவரது இயக்கத்தில் 1939-ம் ஆண்டு வெளியான ‘தியாக பூமி’ படத்தில் ஒரு நீதிமன்றக் காட்சி.

“என் மனைவி என்னுடன் சேர்ந்து வாழவேண்டும். அதற்கு இந்த கோர்ட் உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைப்பார் கணவர்.

“என் கணவரோடு என்னால் சேர்ந்து வாழ முடியாது. வேண்டுமானால் அவருக்கு ஜீவனாம்சம் தருகிறேன். எனக்கு வேண்டியது விவாகரத்து. இவருக்கு மீண்டும் அடிமையாக வாழ்வதை விட என் தேசத்தின் விடுதலைக்காகப் பாடுபடுவதை பெருமையாகக் கருதுகிறேன்” என்று தீர்க்கமான குரலில் துணிவுடன் கூறுவார் மனைவி.

x