குழந்தைகளிடம் பொய் சொல்லாதீர்கள்!


குழந்தைகளின் நிஜமான வளர்ச்சி என்பது அறிவு வளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் மட்டுமல்ல... சமுதாயத்துக்குப் பயன்பெறும் வகையில் அவர்கள் வளர வேண்டுமானால் நல்ல குணங்களையும் பெற்றிருக்க வேண்டும். ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பார்கள். உங்கள் குழந்தைகளுக்குள் நல்ல குணங்கள் குடியேற வேண்டுமானால் சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு அந்தக் குணங்களை போதிக்க வேண்டும். ஒரு கற்சிலையை சிற்பி உருவாக்குவது போல குழந்தைகளைப் பார்த்துப் பார்த்துச் செதுக்க வேண்டும்.

நேர்மை நல்லது!

வாழ்க்கையில் நல்லவராக பெயரெடுக்கத் தேவையான முக்கியக் குணங்களில் ஒன்று நேர்மை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் சொல்லாமல் நேர்மையாய் இருக்க வேண்டும் என்ற விஷயத்தை உங்கள் குழந்தையின் மனதில் பதிய வையுங்கள். அதற்கு முதலில் பெற்றோர்கள் உண்மையானவர்களாக இருக்க வேண்டும். 

சின்னதாய்கூட குழந்தைகளிடம் பொய் சொல்வதைத் தவிர்க்க வேண்டும். அவர்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றவும் கூடாது. ஒரு சில அப்பாக்கள், அம்மாவுக்குத் தெரியாமல் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்துவிட்டு, ‘அம்மாவிடம் சொல்லிடாதே... தெரிந்தால் சண்டை பிடிப்பாள்’ என்பார்கள். இதுகூட ஒரு விதத்தில் பொய்களை ஊக்குவிக்கும் செயல்தான். எனவே, விளையாட்டுக்குக்கூட இப்படிச் செய்யாதீர்கள்.

x