அரியநாச்சி 2: வெள்ளையத் தேவன்


“ஆத்தாடீ… நெறிச்சுத் தள்றான்ங்களே… பேதியிலே போயிருவான்ங்க..!”

முன்னும் பின்னும் நெறிக்கும் கூட்டத்துக்குள் சிக்கிய பூவாயி கிழவி, வாய் விட்டுக் கத்தினாள். “அட நாசமாப் போறவனே… காலை மிதிச்சு நகட்டிட்டியேடா..!” இரண்டு உள்ளங்கைகளையும் அகல விரித்து, தனக்கு முன்னே நின்ற இளவட்டத்தின் முதுகில் ஓங்கி அறைந்தாள்.

அடிபட்ட இளவட்டம், விருட்’டென திரும்பினான். “ஏய்… கிழவி… இம்புட்டு வயசாகியும் உனக்கு, அந்த ஆப்பநாட்டு ஆங்காரம் குறையலையே..!”

“ஏப்பே… நீ என் பேரன் மாதிரிப்பே..! கோவிச் சுக்கிறாதய்யா…” இளவட்டத்தின் தாடையை நீவி நயந்தாள் கிழவி.

பார்வையாளர் பகுதி இடுப்பு உயரச் சுவருக்கு மேலே கம்பி வலை. முன்னே இரண்டு அடி இடைவெளி. எதிர் பக்கமும் இடுப்பு உயரச் சுவர். சுவருக்கு மேலே கம்பி வலை. ரெண்டு சுவருக்கும் ஊடே, ரெண்டு ஜெயில்போலீஸு. கையிலெ லத்திக் கம்பு.

முந்திப் போய் இடம் பிடித்து நிற்கிற இளவட்டங்கள் எல்லாம், கம்பி வலையில் விரல் கோத்து நின்றார்கள். உள்ளே இருக்கிற சொந்த பந்தங்களை பார்க்கப் போகிற சந்தோசத்தில் சில இளவட்டங்கள், உதடு குவித்து விசில் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

“ஏய்… விசில் அடிக்காதே…” லத்திப் போலீஸுகள் கம்பி வலையில் தட்டி அதட்டினாலும் விசில் நிற்கலே. பிந்தி நிற்கிற சனம், கிடைத்த இடைவெளியில் முண்டுது.

நிறைசூழி அரியநாச்சி, கூட்டத்தில் இடிபட பயந்து, நுழைவாயில் தூண் அணைவில், அடி வயிறைத் தாங்கிப் பிடித்தபடி தனியே நின்றாள்.

ஆட்களுக்குள் நெறிபடும் பூவாயி கிழவி, “அரியநாச்சி… நீ அங்கனயே நில்லு” திரும்பி திரும்பி அரியநாச்சியைப் பார்த்துக்கொண்டாள்.

உள் பக்க சிறைக்கதவு திறந்ததும் உள்ளே இருந்து ஒவ்வொரு கைதியாய் வந்தார்கள். பார்வையாளர் பகுதியில் ஒரே சத்தம்… அழுகை… கூப்பாடு.

“எய்யா..!”

“ஊர்லெ ஒன்னும் சண்டை சத்தம் இல்லையே..?”

“என்னய்யா இப்பிடி கெரங்கி போய்ட்டீக..!”

“ஊர்ப் பக்கம் மழை தண்ணி பேஞ்சுச்சா..?”

“அடுத்த வாய்தாவிலே பெயில் கெடச்சிரும்னு வக்கீல் சொன்னாருப்பா…”

யார் பேச்சும் யார் காதிலேயும் விழுகலெ. பீடி பண்டல்களும் தின்பண்டங்களும் போலீஸுகள் மூலம் கை மாறுது.

பூவாயி கிழவி, பெருவிரல் நுனியில் நின்று, கைதிகளுக்குள் வெள்ளையத் தேவனை தேடுகிறாள்.

அரியநாச்சியின் கண்கள், “எங்க அய்யாவை காணோமே..!” அங்கிருந்தே அலைபாய்கின்றன.

“சைலன்ஸ்… சைலன்ஸ்…” போலீஸுகள், லத்திக் கம்பால், கம்பி வலையில் கோடு போடும் சப்தம் ஒரு தினுசாய் கேட்கிறது.

கடைசி கைதியாய் உள் வாசல் வழியே நுழையும் வெள்ளையத் தேவனை கண்டதும் பூவாயி கிழவி, “அண்ணேன்… வெள்ளை யண்ணேன்..!” கத்தினாள்.

“எய்யா..!” அடி வயிறு வலி எடுக்க கூவுகிறாள் அரியநாச்சி.

எல்லாக் கைதிகளையும் மிஞ்சிய உயரத்தோடு வந்து நிற்கும் வெள்ளையத் தேவனுக்கு அரியநாச்சி சத்தமும் கேக்கலெ. பூவாயி சத்தமும் கேக்கலெ.

அறுபது வயது கடந்த நரைத்த தலை. சுருள் முடி. விரல் கனத்தில் புருவம். மழிக்காத முகத்தில் தானே சுருண்டு கிடக்கும் வெள்ளை மீசை. குலம் கெடுத்த கோபத்தால் தோற்றுத் தொங்கும் பார்வை.

“எண்ணேன்… வெள்ளையண்ணேன்..!”

“பூவாயீ..! என்னத்தா... நல்லா இருக்கி யாத்தா..?”

“நான் கெடக்கென் பூமிக்கு பாரமா..! நீங்க நல்லா இருக்கீகளாண்ணேன்..?” பொத்துக் கொண்டு வரும் அழுகையினூடே, “அந்தா… அரியநாச்சிப் பிள்ள வந்திருக்குண்ணேன்…” தூண் பக்கம் கை காட்டினாள்.

“எய்யா..! உங்களை இந்தக் கோலத்திலேயா நாங்க பாக்கணும்..!” ரெண்டு கையாலும் முகத் தை மூடிக் கொண்டு, வயிறு வலிக்க அழுதாள்.

“ஆப்பநாட்டுக்கே ஞாயம் சொன்ன நீதி மான்… எங்கண்ணனுக்கு இந்த லவியா போட ணும்..!” பெருங்குரலெடுத்து அழுதாள் பூவாயி.

“அரியநாச்சி... எம்மா..! நல்லா இருக்கி யாத்தா..?” வெள்ளையத் தேவனின் தொண்டை அடைத்தது. “வயித்துப்பிள்ளக்காரப் பிள்ள… நீ எதுக்குத்தா இம்புட்டுத் தூரம் வந்தே..!” வெள்ளையத் தேவன் பேசுறது, அரியநாச்சி காதிலே கேக்கலெ. ‘ஹூ… ஹூ…’ன்னு ஒரே சத்தம்.

“சைலன்ஸ்… சைலன்ஸ்… மெதுவா பேசுங்க…” ஊடே நிற்கும் போலீஸுகளை யாரும் மதிக்கிற மாதிரி தெரியலெ.

“அரியநாச்சி… சொல்லுத்தா… தங்கச்சி மாயழகிப் புள்ள எப்பிடித்தா இருக்கு..?” வெள்ளையத் தேவனின் கண்கள் கலங்கின.

“எய்யா… நம்ம மாயழகிக்கு...”

“சொல்லுத்தா… நம்ம மாயழகிக்கு..?”

“சைலன்ஸ்… சைலன்ஸ்… பேசிட்டுக் கெளம்புங்க…”

“சொல்லுத்தா… நீ பேசுறது ஒன்னும் கேக்குதில்லையே..!” என்ற வெள்ளையத் தேவன், சிறைக் காவலரிடம், “வார்டரே… வார்டரே… அந்தா… என் மகள்… பிள்ளத்தாச்சிப் புள்ள… வெகு தூரத்திலே இருந்து வந்திருக்கு. கொஞ்சம் வழி ஒதுக்கி குடுங்களேன்… ரெண்டு வார்த்தை பேசிட்டுப் போகட்டும்..!” கெஞ்சினார்.

“தேவரே… உங்க மகளைப் பார்த்தா எங்களுக்கும் பாவமாதான் இருக்கு. ஆனா… நாங்க சொல்லி ஒதுங்குற கூட்டமா இது?” என்ற காவலர், கூட்டத்தைப் பார்த்து, “ம்… நேரம் முடியப் போகுது. பேசிட்டுக் கெளம்புங்க…” எனக் கூவினார்.

“எய்யா… நம்ம மாயழகிக்குக் கல்யாண...”

“என்னத்தா சொல்றே..? மாயழகிக்குக் கல்யாணமா..? யாரு மாப்ள..?”

“ம்… நேரம் முடியப் போகுது. கெளம்புங்க… கெளம்புங்க…” லத்திக் கம்பால் கம்பி வலையில் கோடு கிழித்தபடி காவலர் சொன்னதும் கூப்பாடும் சத்தமும் இன்னும் கூடுது.

“எண்ணேன்… நம்ம மாயழகியை… அரியநாச்சி கொழுந்தன் சோலைக்கு…” பூவாயி ஒரு பக்கம் இரைந்தாள்.

“ஒன்னும் கேக்குதில்லை பூவாயி…”

அரியநாச்சி, வாயை வாயை மெல்லுகிறாள்.

ஏதும் புரியாத வெள்ளையத் தேவன், தலையைத் தலையை ஆட்டுகிறார்.

“ம்… டைம் முடிஞ்சுச்சு. கெளம்புங்க…” காவலர் விசில் ஊதுகிறார். விசில் சத்தம் கேட்டதும் இரைச்சல் கூடுது.

அம்புட்டு உயரமான வெள்ளையத் தேவன், எக்குப் போட்டு நின்று, “உன் தங்கச்சி மாயழகி, தாய் இல்லாம வளர்ந்த புள்ள. தகப்பன் நான்… ஜெயில்லெ கெடக்கேன். 
நீயும் உன் தம்பி பாண்டியும்தான் அந்தப் பிள்ளைக்கு எல்லாம். எந்தக் காரியம்னாலும் உன் தம்பி பாண்டிப் பயலை கலந்து பேசி முடிவு பண்ணுத்தா…” காற்றுவாக்கில் பேசிய வெள்ளையத் தேவனின் கண்களில் நீர் இறங்குகிறது.

கூட்டம் மெல்ல கலைகிறது. நகரும் கைதிகளில் கடைசி கைதியாக, நிறைசூழி மகள் அரியநாச்சியை திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டே வெள்ளையத் தேவனும் ஜெயிலுக்குள் செல்கிறார்.

வெள்ளையத் தேவன் வீடு, பெருநாழி ஊருக்குள்ளே நுழைஞ்சதும் முதல் வீடு. வடக்கே பார்த்த கல்லு வீடு.

சின்ன வயசுலெ புருசனைப் பறி கொடுத்துட்டு, பிள்ளைகுட்டிகளை வளர்த்து விட பரிதவிக்கிற கைம்பொண்டாட்டியின் வறண்ட முகம் போல் சோகம் அப்பிக் கிடந்தது.
முற்றத்தைக் கூட்டிப் பெருக்கி கொண்டிருந்தாள் வள்ளி அத்தை. நாற்பது, நாற்பத்தஞ்சு வயசிருக்கும். வெள்ளையத் தேவனின் தங்கச்சி. வள்ளி அத்தை, வாழ்வரசியும் இல்லை… கைம்பொண்டாட்டியும் இல்லை. வெள்ளாங்குளம் ராமசாமி தேவனுக்கு நிச்சயம் பண்ணி, வாழ்க்கைப்படும் முன்பே விதவை ஆனவள்.

வள்ளிக்கு தாய்மாமன் மகன் ராமசாமி. அவனுக்குன்னே… கன்னி காத்தவள் வள்ளி. வைகாசி மாதம் ரெண்டு பேருக்கும் கல்யாணம் பேசி நிச்சயதார்த்தம் முடியுது. 

ஆவணி கடைசியிலே தாலிகட்டுத் தேதி குறிச்சாச்சு. கல்யாணத்துக்கு முந்தின புதன்கிழமை நடந்த தரைக்குடி உமையம்மன் கோயில் எருதுகட்டில் மாடு பிடிக்கப் போனவன் குத்துப்பட்டுச் செத்துப் போனான். சொந்தம் சுருத்து, சாதி சனம் எவ்வளவோ சொல்லி பார்த்துச்சு. ம்ஹூம். ‘இன்னொருத்தன் தாலிக்கு என் கழுத்தை நீட்ட மாட்டேன்’னு ஒரே குலுக்கா குலுக்கிட்டாள். இருபத்தஞ்சு வருசம். கன்னி கழியாமலே காலம் போயிருச்சு.

அண்ணன் வெள்ளையத் தேவன் பெஞ்சாதியும் மாயழகிப் பிள்ளையைப் பெத்துப் போட்ட மூணாவது நாள், முட்டு வீட்டுக்குள்ளேயே ஜன்னி கண்டு செத்துப் போச்சு. அரியநாச்சி, ஆறு வயசுப் பிள்ளை. பாண்டிக்கு நாலு வயசு. அண்ணன் வெள்ளையத் தேவன், ஒரு கொலையைப் பண்ணிட்டு, ஜென்மத்திலே உள்ளே போயிட்டாரு. மூனு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்குனது வள்ளி அத்தைதான்.

பாண்டி பெஞ்சாதி குமராயி, ஒரு கால் மடக்கி, ஒரு கால் நீட்டி தாழ்வாரத்து அம்மியை அணைத்து அமர்ந்து, தேங்காய்ச் சில்லை அம்மிக் கல்லால் ‘ணங்… ணங்’ என வீடு அதிர தட்டினாள்.

முற்றம் பெருக்கிக்கொண்டிருந்த வள்ளி அத்தை, கடைக் கண் ஓரம் பார்த்து, “அம்மி ஒடஞ்சு போகப் போகுதுடீ…! யாரை நெனச்சு இந்தக் குத்து குத்துறெ?” என்றாள்.

“இம்புட்டுப் பெரிய வயித்தைத் துருத்திக் கிட்டு, காரேறி… பாளையங்கோட்டை ஜெயிலுக்கு போகணுமாக்கும்..?” அம்மித் தேங்காய்ச் சில்லை மறுபடியும் ஓங்கித் தட்டினாள் குமராயி.

“யாரடீ சொல்றே…?”

“ஒங்க ணொண்ணன் மக அரியநாச்சியைத் தான்…”

கையில் விளக்குமாறோடு குமராயியை நோக்கி வந்தாள் வள்ளி அத்தை.

(சாந்தி... சாந்தி...)

-வேல ராமமூர்த்தி

ஓவியம்: ஷண்முகவேல்

x