தமிழகத்தின் வளர்ச்சியிலும் தமிழக மக்களின் நலனிலும் திராவிட ஆட்சிகளின் பங்களிப்பு அளப்பரியது. அதேசமயம், திராவிட ஆட்சிகளின் போது தமிழகம் சந்தித்த பின்னடைவுகளைப் பற்றிய விமர்சனங்களும் உண்டு.
கருணாநிதி - எம்.ஜி.ஆர். என்று இரு கூராகக் கட்சிகள் பிளந்த பிறகு, வட இந்தியாவில் காண்பது போன்ற மாற்றுக் கட்சியினரை மதிக்கும் அரசியல் நாகரிகம் மெல்ல மெல்ல இங்கே மறையத் தொடங்கியது. பெரியாரும் அண்ணாவும் ராஜாஜியும் பாராட்டிய கட்சி பேதமற்ற நல்லுறவுகள் மெல்ல மெல்ல கேள்விக்குறியாகி, ஒரு கட்டத்தில் அருவருக்கத்தக்க உச்சத்தை எட்டியது இந்தப் பகைமை. அது நேரடியாக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியது.
இந்தப் பகை உணர்வுக்கு முதலில் விதை போட்டது யார்... வெறுப்பு நீர் ஊற்றி வளர்த்தது யார் என்ற ஆராய்ச்சிகள் இப்போது தேவையில்லை. கடந்த சில மாதங்களாக மனதுக்கு இதமளிக்கும் வகையில், ஆளும் அதிமுக தரப்பிலிருந்தும் எதிர்க்கட்சியான திமுக தரப்பிலிருந்தும் ஒருவருக்கொருவர் காட்டிக்கொண்ட மரியாதையும், அது சார்ந்த அரசியல் நாகரிகமிக்க செயல்பாடுகளும் மக்கள் மனதில் புது நம்பிக்கையை ஏற்படுத்தின.
முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் உடல்நலம் குன்றிய பிறகு நடந்த பரஸ்பர நலம் விசாரிப்புகள் தொடங்கி, இந்தத் தலைவர்களின் மறைவையொட்டி இரு கட்சிகளும் வெளிப்படுத்திய அனுதாபமிக்க உணர்வுகளையும் பார்த்தபோது, ‘இனி எல்லாம் நலமே’ என்ற மகிழ்ச்சி மக்களுக்கு எழுந்தது.