என்றென்றும் ஏழுமலையான்! - 2: ஏழுமலையானுக்கு அருகிலிருந்து சேவை செய்யும் பாக்கியம்!


சப்த மலைகளில் ஒன்றான சேஷாலம் திருமலையில் குடிகொண்டுள்ள திருப்பதி ஏழுமலையானுக்கு அருகிலிருந்து சேவை செய்யும் பாக்கியம் எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது.சிலருக்கு மட்டுமே அது சாத்தியமாகும். அந்தச் சிலரில் ஒருவர்தான் டெய்லர் மணி!

 கீழ் திருப்பதியிலேயே பிறந்து வளர்ந்த மணி அதிகம் படிக்காதவர். வயிற்றுப் பாட்டுக்காக தையற்கலையைக் கற்றுக்கொண்ட இவர்தான் கடந்த 18 ஆண்டுகளாக ஏழுமலையானின் ஏழு வாசல்களுக்கும் திரைச் சேலைகளைத் தைத்துத் தந்துகொண்டிருக்கிறார். பிரம்மோற்சவம், ஆனிவார ஆஸ்தானம், தெலுங்கு வருடப்பிறப்பு, வைகுண்ட ஏகாதசி இந்த நான்கு வைபவங்களும்தான் ஏழுமலையானுக்கு விமர்சையான திருவிழா நாட்கள். இந்தத் திருவிழாக்களுக்கு நாள் குறித்ததுமே ஏழுமலையானுக்குத் பயபக்தியுடன் திரைச் சேலை தைக்க ஆயத்தமாகிவிடுவார் மணி. 18 வருடங்களுக்கு முன்பு பக்தியின்பால் இவர் ஏழுமலையானுக்கு திரைச் சேலைகளைத் தைத்துக்கொண்டு வந்து கொடுக்க... அதை ஏற்றுக்கொண்ட தேவஸ்தான அதிகாரிகள், அது முதல் பெருமாளுக்கு திரைச் சேலை தைத்துக் கொடுக்கும் பொறுப்பை நிரந்தரமாக மணியிடமே தந்துவிட்டார்கள். அவரும் அர்ப்பணிப்புடன் இந்தச் சேவையைத் தொடர்கிறார். தொடக்கத்தில் மூலவர் சன்னிதிக்கு மட்டுமே திரை தைத்துக் கொடுத்த மணி, இப்போது ஏழுமலையானின் ஏழு வாசல்களுக்கும் தனது செலவிலேயே திரைகளைத் தைத்துக் கொடுத்து வருகிறார்.

மணி

மணி வடிவமைத்த உண்டியல்

திருப்பதி தீர்த்தக் கட்டுத் தெருவில் சின்னதாய் ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாமல் இருக்கிறது மணியின் தையல்கடை. உள்ளே, நின்றபடியே துணி வெட்டிக் கொண்டிருந்த மணி, ஏழுமலையான் சேவையைப் பற்றி பேசவந்திருக்கிறோம் என்றதுமே முகம் பிரகாச மாகிறார். பார்த்துக்கொண்டிருந்த வேலையை அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு நம்மிடம் பேசத் தொடங்குகிறார்.

 ``இதே திருப்பதியில் பிறந்த நான் எடுத்ததுமே தையல்கடை வைத்துவிடவில்லை. சாதாரண தையல் தொழிலாளியாக சம்பளத்துக்குத்தான் வேலை பார்த்தேன். வேலை பழகிட்டு ரொம்பவே கஷ்டப்பட்டுத்தான் சொந்தமா இந்தக் கடையை வெச்சேன். நான் இயல்பாகவே ஏழுமலையான் பக்தன். அந்த ஏழுமலையான் எனக்கு எத்தனைதான் கஷ்டங்களைத் தந்தாலும், ஒரு நாளும் பட்டினி போட்டதில்லை. இன்னைக்கு இந்தக் கடையை வெச்சுத்தான் நானும் என் குடும்பமும் ஒரு நல்ல நிலைக்கு வந்துருக்கோம். அதுக்குக் காரணமும் ஏழுமலையான்தான்!” என்ற மணி, ஏழுமலையான் இருக்கும் திசை பார்த்து வணங்கிவிட்டுத் தொடர்கிறார்...

“எனது வாடிக்கையாளர்களில் தேவஸ்தான அதிகாரிகளும் ஊழியர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். இருபது வருசத்துக்கு முந்தி எனது கடைக்குத் துணி தைக்கக் கொடுக்க வந்த தேவஸ்தான அதிகாரி ஒருவர், ‘திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் உண்டியலுக்குத் துணி தைத்துக் கொடுக்கணும்... உங்களால தைச்சுத்தர முடியுமா?’ன்னு கேட்டாரு. அப்பெல்லாம் அங்க வெறும் ஒரு ஸ்டீல் டப்பாவைத்தான் உண்டியலா வெச்சிருப்பாங்க. காணிக்கைகள் சிந்தாமல் இருக்க அதன் மீது ஒரு துணி மூடப்பட்டிருக்கும். பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளால் உண்டியல் நிறைந்தாலும் துணியில் விழுந்து கீழே சிதறிவிடும். இப்படிச் செய்வதால், டப்பாவில் விழும் காணிக்கைகள் மட்டுமே கணக்கில் வரவுவைக்கப்படுவதாக ஒரு சர்ச்சை கிளம்பியது.

என்னிடம் வந்த அந்த அதிகாரி இதையும் சொன்னார். இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். கடைசியில், ஒரு பித்தளை கொப்பரைக்கு உருளை வடிவில் ஒரு துணி உறையைத் தைத்து அதன் வாய்ப்பகுதியில் வளையத்தைப் பொருத்திக் கொடுத்தேன். அதுதான் இப்போது இருக்கும் உண்டியல். இந்த உண்டியலில், கொப்பரையில் காணிக்கை நிரம்பினாலும் துணி உறைக்குள்ளேயே கொட்டிக் கிடக்கும்; வெளியில் சிந்தாது. நான் இந்த உண்டியலை வடிவமைத்துத் தந்ததிலிருந்து தொடர்ந்து எனக்கு உண்டியலுக்குத் துணி தைத்துக் கொடுக்கும் வேலையைத் தந்தார்கள்.

பெருமாளே கேட்ட மாதிரி இருந்துச்சு!

பக்கத்திலேயே இருந்தாலும் உள்ளூர் மக்கள் யாரும் அடிக்கடி திருமலைக்குப் போகமாட்டார்கள். சாமி நமக்குப் பக்கத்துலதானே இருக்கு... எப்ப வேணும்னாலும் பாத்துக்கலாம்கிற நெனப்பு. நானும் அப்படித்தான் எப்பவாவதுதான் தரிசனத்துக்காக மலைக்குப் போவேன். 2000-மாவது வருசத்துல அப்படி நான் ஒருநாள் ஏழுமலையானைத் தரிசிக்கப் போயிருந்தேன். அப்ப, அங்கிருந்த தேவஸ்தான அதிகாரி ஒருவர், ‘சுவாமி சன்னிதிக்குப் போட்டுருக்கிற திரைச்சீலைகள் பழசாப் போச்சு... நீங்க டெய்லர்தானே உங்களால திரைச்சீலை தைச்சுக் குடுக்க முடியுமா?’ன்னு கேட்டாரு.

அது எனக்கு அதிகாரி கேட்ட மாதிரி தெரியல... அந்தப் பெருமாளே இறங்கி வந்து கேட்டமாதிரி இருந்துச்சு. அதனால, மறுப்பு ஏதும் சொல்லாம அந்தப் பொறுப்பை ஏத்துக்கிட்டேன். பெருமாள் மீதிருக்கும் பக்தியில ஒப்புக்கிட்டு வந்துட்டாலும் திரைச் சீலையை எப்படித் தயாரிக்கிறதுன்னு எனக்குள்ள ஒரே குழப்பம். வைரம், வைடூரியம், தங்க நகைகள் என ஜொலிக்கும் மூலவருக்கு திரை தைக்கிறதுன்னா சாதாரண காரியமா? இரவு முழுசும் தூக்கம் வரல. கடைசியில், என் மனதில் என்ன தோன்றியதோ, அதன்படியே திரைச் சீலையைத் தைச்சு முடிச்சேன்.

பெருமாளோட திருநாமம், சங்கு, சக்கரம் போன்றவை இருக்கும்படி வெல்வெட் துணியில் டிசைன் செய்தேன். தைக்கும்போது பயபக்தியுடனும் ஒருவித படபடப் புடனும்தான் தைத்தேன். ஏழுமலையான் சன்னிதியில் திரை போட்டிருந்தாலும் திரைச் சீலையில் இருக்கும் பெருமாள், பக்தர்களுக்கு ஏழுமலையானாகவே தெரிய வேண்டும் என்கிற நோக்கம் மட்டுமே எனக்குள் இருந்தது. அதுபோலவே ஏழு வாசல்களுக்கும் ஏழு விதமான திரைகளைத் தைத்தேன்.

இதுதான் நித்ய வேண்டுதல்!

இந்தப் புனிதமான திரைச் சீலைகளை, சாதாரணமாகக் கொண்டுபோய்க்கொடுக்க எனது மனம் ஒப்புக்கொள்ளவில்லை. என் மனைவி, மகள், மகன் எனக் குடும்பத்துடன் விரதம் இருந்து, திரைச் சீலைகளை எங்களது தலைகளில் சுமந்து மலையேறிச் சென்று, தேவஸ்தான அதிகாரிகளிடம் கொடுத்தோம். திரைச் சீலைகளைப் பார்த்து மிகவும் நெகிழ்ந்து மகிழ்ந்து போனார்கள் அதிகாரிகள். ‘நாங்கள் நினைத்ததை விட மிக அருமையாக வந்திருக்கிறது’ என்று எனக்குக் கைகொடுத்தார்கள். அப்பவே, ‘இதற்கான செலவை வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றார்கள். நான் மறுத்துவிட்டேன். ‘ஏழுமலையான் எனக்குக் கொடுத்த இந்த அரிய வாய்ப்பை என் வாழ்நாள் பாக்கியமாகக் கருதுகிறேன். இனி, என் வாழ்நாள் முழுவதும் நானே சுவாமிக்கு இலவசமாக திரைச் சீலைகளைத் தைத்துத் தருகிறேன்.

தயவு செய்து மறுக்காமல் அதற்கு அனுமதியுங்கள்’ என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன். தேவஸ்தான அதிகாரிகளும் மறுப்பேதும் சொல்லாமல் சம்மதித்தனர். அதுமுதல், வருசத்துக்கு நான்கு முறை ஏழேழு திரைச் சீலைகளைத் தைத்துக் கொண்டு வந்து பெருமாளுக்குக் கொடுக்கிறேன். உயிருள்ள மட்டும் இந்தச் சிறு சேவையைச் செய்ய ஏழுமலையான் அனுமதிக்க வேண்டும் என்பதே எனக்குள் இருக்கும் நித்ய வேண்டுதல்.” நெகிழ்ந்துபோய்ச் சொல்லிவிட்டு மீண்டும் ஏழுமலையானை நோக்கி வணங்குகிறார் மணி!

மணிக்கு சிறப்பு அனுமதி!

ஏழுமலையானுக்கு மட்டுமின்றி ஆடிக்கிருத்திகையின் போது திருத்தணி முருகன் கோயிலுக்கும், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில், ஸ்ரீசைலம், காணிப்பாக்கம், பத்ராசலம் ஆகிய கோயில்களுக்கு பிரம்மோற்சவ நாட்களிலும் திரைச்சீலைகளைத் தைத்துக் கொடுத்து வருகிறார் மணி. திருப்பதி ஏழுமலையான் கோயிலின் முகப்புக் கோபுரம் வழியாக கோயிலுக்குள் தரிசனத்துக்குச் செல்ல முக்கிய மடாதிபதிகள், பீடாதிபதிகள், குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதல்வர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட சிலரை மட்டுமே தேவஸ்தானம் அனுமதிக்கிறது. ஏழுமலையானுக்குத் திரைச்சீலைகளை தைத்துச் செல்லும்போது மணியையும் அதே வழியில் கோயிலுக்குள் அனுமதிக்க சிறப்பு அனுமதி வழங்கியிருக்கிறதாம் திருப்பதி தேவஸ்தானம்!

(முகங்கள் வரும்...)

-என்.மகேஷ்குமார்

x