முடிவற்ற சாலை 14: பிக்காஸோவுக்கு முன்னால்…


எந்த தேசத்துக்குச் சென்றாலும் அங்குள்ள ஓவியக் கூடங்களைப் பார்ப்பதற்கெனத் தனியாக நேரம் ஒதுக்குவது எனது வழக்கம். சில நேரம் அரிய ஓவியங்களைக் காண்பதற்கென்றே சில நகரங்களுக்குப் போயிருக்கிறேன். மியூசியம், ஆர்ட் கேலரி, தனிநபர் கண்காட்சிகள் என்று பல்வேறு விதங்களில் ஓவியங்களைப் பார்வையிட்டிருக்கிறேன்.

நவீன ஓவியங்கள் குறித்து மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். அதில் உலகப்புகழ் பெற்ற ஓவியங்களைப் பற்றியும் அதன் தனிச்சிறப்புகள் குறித்தும் எழுதியிருக்கிறேன்.

பெரும்பான்மையினருக்கு நவீன ஓவியங்களை ரசிப்பதற்குப் பரிச்சயமில்லை. அவற்றை ஏதோ குழந்தைகள் கிறுக்கி வைத்திருப்பது போல நினைக்கிறார்கள்.

தத்ரூபமாக ஒருவரையோ, ஒரு இடத்தையோ வரைவதைத்தான் ஓவியம் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது ஓவியத்தில் ஒரு வகை. அதுவும் புகைப்படக் கலை வந்த பிறகு இந்த வகை ஓவியங்களுக்கான வரவேற்பு குறைந்துவிட்டது.

அரூபமான முறையில் வண்ணங்களைக் கொண்டு ஓவியம் வரைவது இன்றைய பாணி. அதிலும் கனவு நிலைப்பட்ட காட்சிகளையும், உருவமற்று வண்ணங்களைத் தனித்துக் காட்சிப்படுத்துவதும், பல்வேறு காட்சி வடிவங்களை ஒன்றுசேர்ப்பதும், இருண்மையான மனநிலை, சமூகக் கோபம் போன்றவற்றைப் பிரதிபலிப்பது எனப் பலவிதமான ஓவிய வகைகள் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் உள்ள அரிய ஓவியங்களைப் புரிந்து கொள்ள ஜோப் தாமஸ் எழுதிய ‘தமிழக ஓவியங்கள்: ஒரு வரலாறு’ என்ற புத்தகம் மிகச் சிறப்பானது.

எல்லா நவீன ஓவியர்களிடமும் கேட்பது போல பிக்காஸோவிடமும் ஒரு பார்வையாளர் உங்கள் ஓவியங்கள் புரிவதில்லையே அது ஏன் என்று கேட்டிருக்கிறார்.

அதற்குப் பிக்காஸோ “உங்கள் வீட்டின் அருகில் உள்ள மரத்திலிருந்து குயில் குக்கூ எனக் கூவுகிறதே, அதற்கு என்ன பொருள் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் வீட்டின் கண்ணாடியில் படிகிறதே பனித்துளி, அதை எந்தப் பொருளில் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு நாளும் மேகம் புதுப்புது வடிவம் கொள்கிறதே, அதற்கு என்ன அர்த்தம்? வெயிலை, இரவை, மழையை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறீர்கள்? காட்சி நம் மனத்தில் ஏற்படுத்தும் உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பதாக ஓவியம் இருக்க வேண்டுமே தவிர, அப்படியே காட்சியை நகலெடுப்பதாக இருக்கக் கூடாது... காணும் எல்லாவற்றிலும் உங்களைக் கரைத்துக்கொள்ளத் துவங்குங்கள். எல்லாவற்றின் ஊடாகவும் நீங்கள் இருப்பதை உணரத் துவங்குங்கள். உலகின் காட்சியும் அதன் வனப்பும் உங்களுக்குப் புரியத் துவங்கினால் நவீன ஓவியங்கள்தானே புரியத் துவங்கிடும்” என்றார்.

அதுதான் இன்றைக்கும் ஓவியங்களைப் புரிந்து கொள்வதற்கான எளிய வழி.

டொரன்டோவுக்குப் போயிருந்தபோது ஓவியர் பிக்காஸோவின் 200-க்கும் மேற்பட்ட ஒரிஜினல் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட இருப்பதை அறிந்தேன். பாப்லோ பிக்காஸோ ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற ஓவியர், சிற்பி, கவிஞர், ‘கியூபிசம்’ என்னும் கலைப் பாணியை உருவாக்கியவர்.

நண்பர் ஒருவரின் மூலம் அந்தக் கண்காட்சியைக் காண வேண்டி ஆன்லைனில் முன்பதிவு செய்ய முயன்றேன். பத்து நாட்கள் மட்டுமே நடக்கும் கண்காட்சியது. அறிவிக்கப்பட்டவுடனே முதல் ஏழு நாட்கள் பதிவு முடிந்துவிட்டது. எட்டாம் நாள் காலை, கண்காட்சியைப் பார்வையிட முன்பதிவு செய்துதந்தார் நண்பர். கட்டணம் மூவாயிரம் ரூபாய்.

ஒரு ஓவியக் கண்காட்சியைப் பார்வையிட இவ்வளவு கூட்டமா என வியப்பாக இருந்தது. அந்தக் கண்காட்சி பற்றி செய்தித்தாள்களில் தொடர்ந்து சிறப்புச் செய்திகள், கட்டுரைகள் வெளியாகிக்கொண்டேயிருந்தன. ஓவியக் கண்காட்சி நடைபெற்ற அரங்குக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

காலை பத்து மணிக்கு ஓவியக் கண்காட்சி துவங்குகிறது என்பதால் ஒன்பதரை மணிக்கு அந்த வளாகத்துக்குப் போயிருந்தேன். நீண்ட வரிசை. பாதுகாப்புப் பரிசோதனைகளுக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டோம். ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஓவியம் குறித்த தகவல்களை அறிந்துகொள்ள ஹெட்போன் ஒன்று தருகிறார்கள். அதற்குத் தனிக் கட்டணம். அதைத் தலையில் மாட்டிக்கொண்டால் குறிப்பிட்ட ஓவியத்தின் முன்பு போய் நிற்கும்போது அது குறித்த தகவல்கள் ஒலிபரப்பாகும். இதனால் ஒரு ‘கைட்’ வழிகாட்டுவது போலத் துல்லியமாக ஒவியத்தை ரசிக்க இயலும்.

பிக்காஸோவின் ஓவியங்களைப் புத்தகங்களில் பார்த்திருக்கிறேன். அவரைப் பற்றி நிறைய படித்திருக்கிறேன். பிக்காஸோ பற்றிய ஆவணப் படங்களைப் பார்த்திருக்கிறேன். ‘கெர்னிகா’ உள்ளிட்ட சில முக்கிய ஓவியங்களை அமெரிக்காவில் கண்டிருக்கிறேன். ஆனாலும், ஒருசேர அவரது முக்கிய ஓவியங்களைக் காண்பது என்பது அபூர்வமான தருணமே.

நான்கு தளங்களில் அந்த ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. ஒவ்வொரு ஓவியத்தின் முன்பாகவும் பார்வையாளர்கள் விதவிதமான கோணங்களில் நின்று, பார்த்து, ரசித்து, குறிப்பேட்டில் வரைந்து கொண்டிருந்தார்கள். அந்த ஓவியக் கண்காட்சியை நிதானமாகப் பார்த்து முடிக்க இரண்டு நாட்கள் தேவைப்படும் என்றார்கள்.

பிக்காஸோவின் பெரும்பாலான ஆக்கங்கள் நியோகிளாசிக்கல் பாணியைச் சார்ந்தவை. 1920-களின் நடுப்பகுதியில் வரைந்த ஓவியங்கள் சர்ரியலிசத்தின் சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளவை. பிக்காஸோவின் ஓவியங்களில் அதன் காலவரிசைப்படி நீலக் காலம், ரோஜா நிறக் காலம், ஆப்பிரிக்கத் தாக்க காலம், கியூபிச காலம் எனப் பிரிக்கிறார்கள் நீலக் காலத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் பெரும் பாலும் நீலநிறச் சாயை கொண்டவையாகக் காணப்பட்டன. இக்காலத்தில் வரைந்த ஓவியங்களில் கழைக்கூத்தாடிகள், பாலியல் தொழிலாளிகள், பிச்சைக்காரர்கள், சர்க்கஸ் கலைஞர்கள் அதிகம் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். நீல நிறம் அவரது வேதனை படிந்த மனதின் வெளிப்பாடு. தனிமையும் துயரமும் கொண்ட காலத்தில் இந்த ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

கணினியிலும் புத்தகங்களிலும் இந்த ஓவியங்களைக் கண்டிருந்தாலும் நேரில் அவற்றைக் காணும்போது ஏற்படும் பரவசம் அளவில்லாதது. குறிப்பாக, ஓவியம் எவ்வளவு பெரியது என்பதை நேரில் காணும்போதுதான் உணர முடிகிறது. ஓவியக் கண்காட்சியில் கலந்துகொண்ட பார்வையாளர்களில் அதிகம் பெண்கள். அதிலும் இளம்பெண்கள். அவர்கள் ஒவ்வொரு ஓவியமாக நின்று பார்த்து ரசித்துவிட்டுப் போனார்கள். ஒரு பெண் பிக்காஸோவின் ஓவியம் முன்பு கண்ணீர் வழிய நின்று பார்த்துக்கொண்டிருந்தார்.

‘நீல அறை’ என்ற பிக்காஸோவின் ஓவியத்தின் முன்பு நெடுநேரம் நின்றிருந்தேன். இந்த ஓவியத்தில் நீல நிறம் உணர்ச்சிகளின் அடையாளமாக விளங்கியது. இயற்கை ஒளியின் அழகில் குளித்துக்கொண்டிருக்கும் இளம் பெண் நிற்பது வசீகரமாகயிருந்தது. பிக்காஸோவின் முக்கியமான ஓவியங்களில் இதுவும் ஒன்று.

காலை முதல் மாலை வரை அந்தக் கண்காட்சி வளாகத்துக்குள்ளாகவே சுற்றியலைந்தேன். உள்ளே இருந்த காபி ஷாப்பில் காபி குடித்தபடியே ஓவியங்களைப் பார்வையிட்டேன். பிக்காஸோவின் ஓவியங்கள் குறித்த புத்தகங்களும், அவரது உருவம் பதிந்த டீசர்ட்டுகள், கலைப்பொருட்கள் போன்றவையும் விற்பனைக்கு வைக்கபட்டிருந்தன. அவற்றில் சிலவற்றை விலைக்கு வாங்கிக்கொண்டேன்.

ஒருசேர பிக்காஸோவின் முக்கியமான ஓவியங்களைக் காணும்போது அவரது மேதைமையின் வீச்சை முழுமையாக உணர முடிந்தது. இந்தக் கண்காட்சி வளாகத்தினுள் புகைப்படம் எடுத்துக்கொள்வது அனுமதிக்கப்படவில்லை. செல்போன் எடுத்துச்செல்லத் தடை. கையில் சிறிய குறிப்பேடு மட்டுமே கொண்டுபோகலாம். அரட்டை அடிப்பதோ சத்தமாகப் பேசுவதோ கூடாது. நீண்ட நேரம் நின்று ஓவியங்களைக் காண்பதால் கால் வலிக்கும் என்பதால் ஓய்வு எடுத்துக்கொள்ள வசதியான இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

கண்காட்சி நடந்த அரங்கின் தரைத்தளத்தில் காலை முதல் மாலை வரை பிக்காஸோவின் பல்வேறு ஓவியங்கள் குறித்த சிறப்புரைகள் நடந்தேறின. அதிலும் நிறைய கூட்டம். இரவு அறைக்குத் திரும்பி, படுக்கையில் கண்களை மூடியபோது பிக்காஸோவின் நீல நிறம் மனதில் கொப்பளித்தது. என் அறையே ஒரு நீல அறையாக உருமாறியது போலிருந்தது. மனதில் ஓவியக் கோடுகள் அலைபாய்ந்தன.

புகைப்படக் கலை அறிமுகமாவதற்கு முன்பு ஓவியங்களைக் காண வேண்டும் என்றால், ஒரிஜினல் ஓவியம் எங்கேயிருக்கிறதோ அங்கே தேடிப் போக வேண்டும். காத்திருந்து கட்டணம் கொடுத்துப் பார்க்க வேண்டும். புகைப்படக் கலை எல்லா ஓவியங்களையும் எளிதாக நகலெடுத்துவிட்டது. இந்த நகல்களை ரசித்துப் பழகிய நமக்கு ஒரிஜினல் ஓவியங்களைத் தேடிப்போய்ப் பார்க்க வேண்டிய அவசியமற்றுப் போய்விட்டது. அதை விடவும் ஒரிஜினலைக் காணும்போது நகல் அளவுக்குத் துல்லியமாக இல்லையே என ஏளனமாகவும் இருக்கிறது.

நகல் ஒருபோதும் அசல் ஆகவிடாது. புகழ்பெற்ற ஓவியர்களின் ஒரிஜினல் ஓவியங்களைக் காண்பது நிகரற்ற அனுபவம்.

பிக்காஸோவின் இருநூறு ஓவியங்களைக் கண்டது மிகப் பெரிய விருந்தில் கலந்துகொண்ட சந்தோஷத்தை விடவும் பெரியது. அதைச் சொல்லிப் புரிய வைத்துவிட முடியாது.

(பயணிக்கலாம்...)

-எஸ்.ராமகிருஷ்ணன்

x