தாவியோடுகிறது  தாமிரபரணி... கரைபுரள்கிறது காவிரி... வறண்டு கிடக்கிறதே வைகை!- ஆக்கிரமிப்புகளால் அழிந்துவரும் ஒரு நதியின் மூலம்...


கரைபுரள்கிறது காவிரி... தாவியோடுகிறது தாமிரபரணி... தெறித்தோடுகிறது தென்பெண்ணை ஆறு இப்படித் தமிழகம் முழுக்க நம் நதிகள் எல்லாம் பொங்கும் தருணத்தில், வைகை ஆறு மட்டும் வறண்டு கிடக்கிறது. தமிழகத்தின் பிரதான மேட்டூர் முதல் குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி வரையில் அத்தனை அணைகளும் நிரம்பி வழிகிறபோது, வைகை அணை தன் கொள்ளளவில் பாதியைக்கூட எட்டவில்லை. வருகிற 15ம் தேதி மேலூர் பகுதிக்கு ஒரு போகப் பாசனத்துக்காகத் தண்ணீர் திறக்க முடியுமா... அப்படியே திறந்தாலும் அது அறுவடை வரைக்கும் தாங்குமா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

வைகை அணைக்கு முல்லை பெரியாற்றில் இருந்து தண்ணீர் வருகிறதே ஒழிய, வைகை ஆற்றில் இருந்து சொட்டுத்தண்ணீர்கூட வராததே இதற்குக் காரணம். தமிழகத்திலேயே உற்பத்தியாகி இங்கேயே கடல் சேர்கிற மிக நீளமான (258 கி.மீ) நதி, தமிழகத்தின் 4-வது பெரிய நதி என்றெல்லாம் போற்றப்படும் இந்த நதியில் என்னதான் பிரச்சினை என்று அறிய அது உற்பத்தியாகும் மூலத்துக்கே சென்றோம்.

கையில் தண்ணீர், வைகையில்?

பெரும்பாலான தென்னிந்திய நதிகளைப் போலவே வைகை உற்பத்தியாகிற இடமும் மேற்குத் தொடர்ச்சி மலைதான். வருஷநாடு, மேகமலை பகுதிதான் வைகைப் பெண்ணின் பிறந்த வீடு. கடல் மட்டத்தில் இருந்து 5,333 அடி உயரத்தில் இருக்கிற மேகமலையில் உள்ள ஒரு சிகரமான வெள்ளிமலையில்தான் அது உற்பத்தியாகிறது. வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே பெய்யும் மழைத்தண்ணீரை உள்வாங்கிக்கொண்டு வருடம் முழுவதும் தரும் சோலைக்காடுகள் அடர்ந்திருப்பதால், வெள்ளிமலையில் எந்நேரமும் தண்ணீர் வழிந்தபடியிருக்கும். வெயில் பிரதிபலிப்பால் வெள்ளிபோல அது ஜொலிப்பதே, வெள்ளிமலைக்குப் பெயர்க்காரணம்.

x