ஓலைக் குருவியும்... கிலுகிலுப்பைச் சத்தமும்...- இயற்கையை போதிக்கும் ‘குக்கூ பள்ளி!’


புத்தகக்காட்சி என்பது புத்தகங்கள் வாங்க மட்டுமல்ல, நல்ல விஷயங்களைப் படிக்கவும்தான் என்று நிரூபித்தது கோவை புத்தகத்திருவிழாவில் இடம்பெற்றிருந்த ‘தும்பி’ அரங்கம். ‘இயற்கையோடு இணைந்த வாழ்க்கையே அறம் சார்ந்த வாழ்க்கை’ என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் விதமாக இந்த அரங்கமே இயற்கைப் பொருள்களால்தான் உருவாகியிருந்தது.

மரப்பட்டைகள், ஓலைகள், தேங்காய் சிரட்டை போன்ற இயற்கை பொருள்களால் வடிவமைக்கப்பட்ட குருவி, புறா, குயில், மயில் போன்றவைகளின் உருவங்கள். மயில் இறகு, மண்ணாலான சிறு குருவி பொம்மைகள், கைவினைப் பொருள்கள், கன்றுக்குட்டி மண் தின்றுவிடாமல் தடுக்கும் வாய்க்கூடு, பாசிமணி மாலைகள், சரக்கொன்றை, மயில்கொன்றை என சாக்பீஸால் எழுதப்பட்ட மண்சிலேட்டுகள் எனக் காண்போரை, குறிப்பாகக் குழந்தைகளைக் கவர்ந்தது தும்பி அரங்கு. மரத்தின் அடிப்பாகத்தையே மடிக்கணினி மேஜையாகப் பயன்படுத்தியபடி, அதில் கவனமாக இருந்தார் ஓர் இளைஞர். விசாரித்தபின்புதான் தெரிந்தது, இங்கே அவர்கள் வியாபாரம் செய்யவில்லை; குழந்தைகளுக்கும், பள்ளிப் பிள்ளைகளுக்கும் இயற்கை குறித்த விழிப்புணர்வை ஊட்டவே வந்திருக்கிறார்கள் என்று!

அப்படியென்ன விழிப்புணர்வு?

இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் கொள்கையால் உந்தப்பட்ட சிலர், பழங்குடி கிராமங்களுக்குச் சென்று குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் அவர்களின் காடு சார்ந்த விவசாய அறிவை ஊட்டுவதற்கும், காடுகளைப் பாதுகாக்கவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளனர். 15 வருடங்களுக்கு முன்பு தொடங்கிய இந்தப் பயணத்தில் பழங்குடிகள் கிராமத்து ஆரம்பப் பள்ளிகளில் சிறு நூலகங்கள் அமைத்தவர்கள், நாளடைவில் அங்குள்ள பழங்குடியினருடனே காடுகளுக்குள் சென்று விதைகள் சேகரிப்பது, அவற்றை மழைக்காலங்களில் சென்று நடுவது என்று பயணப்பட்டனர். அதன் நீட்சியாக ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஜவ்வாது மலை அடிவாரத்தில் பழங்குடியின குழந்தைகளுக்கென உண்டு - உறைவிடப் பள்ளி ஒன்றையும் தொடங்கினார்கள். ‘குக்கூ காட்டுப்பள்ளி’ என்ற அந்தப் பள்ளி, பழங்குடியினர் குடியிருப்பைப் போலவே புல்கூரை வேயப்பட்டு காட்சி தருகிறது.

x