ஹாட் லீக்ஸ்: பொன்.மாணிக்கவேலா கொக்கா!


சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல், அத்துமீறிய அறநிலையத்துறை அதிகாரிகளை மட்டுமல்ல; இதில் சம்பந்தப்பட்டஅரசியல்வாதிகளையும் ஒருவழி பண்ணாமல் விடமாட்டார் போலிருக்கிறது. பழநி கோயில் சிலை விவகாரத்தில் அறநிலையத் துறையின் முன்னாள் ஆணையரான தனபால் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கும் அவர், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குப் புதிதாக சிலை செய்ததில் தங்கம் மோசடியில் ஈடுபட்டதாக அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் கவிதாவையும் கடந்த வாரம் கைது செய்தார்.

இந்த மோசடிகளில் அறநிலையத் துறையைக் கவனித்த அமைச்சர்களுக்கும், இப்போது அதிகாரத்தில் இருக்கும் சிலருக்கும் பங்கிருக்கிறது எனத் தகவல் கசிவதால், அரசியல் வாதிகளும் இப்போது ஆட்டம் கண்டு கிடக்கிறார்கள். இதனிடையே, சிலைக் கடத்தல் வழக்குகளின் விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என்று சொல்லி அந்த வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்கப் போவதாக நீதிமன்றத்திலேயே தமிழக அரசு தெரிவித்திருப்பது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்புகிறது!

பாயும் பாஸ்வான்!

எஸ்சி - எஸ்டி வன்கொடுமை சட்டத்தில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி பலதரப்பிலும் அழுத்தம் தரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தல் நெருங்குவதால் இப்போது பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கின்றன. “இந்த சட்டத் திருத்தத்தை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும்” எனக் கொடி தூக்கியிருக்கும் லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான், “இந்த சட்டத் திருத்தத்தை மேற்கொண்ட நீதிபதி தனது பணி ஓய்வுக்குப் பிறகு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். இந்த இண்டு நடவடிக் கைகளையும் ஆகஸ்ட் 9-ம் தேதிக்குள் எடுக்க வேண்டும்” எனக் கெடு விதித்திருக்கிறார். இது, கூட்டணியில் அதிக இடங்களைக் கேட்டுப் பெறுவதற்கான தந்திரமா அல்லது தேர்தல் ஸ்டன்டா என்பது சீக்கிரமே தெரிந்துவிடும்!

x