என்றென்றும் ஏழுமலையான்! - 1:


‘வாழ்க்கையில் ஒரு நல்லதிருப்பம் வராதா?’ என்பதுதான் நம் எல்லோரின் ஏக்கமும் வேண்டுதலும்! அந்த வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, நல்ல நல்ல திருப்பங்களைத் தரும் திருத்தலம்... ஏழுமலையான் குடிகொண்டிருக்கும் திருமலை திருப்பதி!

சில விஷயங்களைச் சொல்லும் போது, ‘எந்த ஜென்மத்தில், யார் செஞ்ச புண்ணியமோ...’ என்போம். கோயிலில் குடியிருக்கும் இறைவனுக்குச் செய்யும் கைங்கர்யம் என்பதுகூட, அப்படித்தான்! 

பூஜை, அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரங்கள், உற்சவங்கள், பல்லக்குகள், திருவீதியுலாக்கள் என இந்தக் கைங்கர்யங்களில், குறிப்பிட்ட சிலர் காலங்காலமாக, பரம்பரை பரம் பரையாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படித் தங்களைப் பெரிதாக வெளிச்சம்போட்டுக் காட்டிக் கொள்ளாத பலரும் தலைமுறை, தலைமுறையாக ஏழுமலையானுக்கு சேவை செய்து வருகிறார்கள்.

ஏழுமலையான் திருவாசல் திறப்பது தொடங்கி, பூஜை, அலங்காரம், உற்சவம், பல்லக்கு எனக் கைங்கர்யங்களில் பல வகைகள்! இந்தச் சேவையில் இருக்கும் முகம் காட்டாத முகங்கள் பல! அந்த முகங்களையும் அவர்களின் நெகிழ்ச்சியான அனுபவங் களையும் பகிரும் மினி தொடர் இது!

மோகினி அவதாரம்...

பெருமாளைச் சுமக்கும் பெருமாள் பள்ளி!

திருமலை திருப்பதி ஆலயத்தில் உள்ளே ஏழுமலையான். வீதியுலா வரும் உற்சவ நாயகன்... மலையப்ப சுவாமி. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உள்ள மலையப்ப சுவாமி, பிரம்மோற்சவம், பவித்ரோற்சவம் முதலான பல வைபவங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வாகனங்களில் வந்து பக்தர்களுக்குத் தரிசனம் தருவார். அப்போது, பெருமாள்பள்ளி கிராமத்தினர்தான் பல்லக்கில் சுவாமியை ஏந்திக்கொண்டும் தூக்கிக்கொண்டும் வலம் வரும் பாக்கியத்தைப் பெற்றவர்கள். பெருமாள்பள்ளி என்பது, திருப்பதிக்கு அருகில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம்!

வருடம் முழுவதும் பக்தர்கள் திரளும் திருமலையில், வருடம் முழுக்கவே விழாக்கள்தான்; விஷேசங்கள்தான். வருடாந்திர பிரம்மோற்சவம், ரதசப்தமி உட்பட பல்வேறு விஷேச நாட்களிலும் உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி, திருமலையில் உள்ள 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். பிரம்மோற்சவ நாட்களில் 9 நாளும் பல்வேறு வாகனங்களில் உற்சவ மூர்த்தி காலையும் இரவும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்.

இந்த வீதியுலாக்களின்போது, சுவாமியை பல்லக்கில் சுமந்து வரும் அன்பர்கள், பச்சைநிற சட்டையும் வெள்ளை வேஷ்டியும் அணிந்திருப்பதைப் பார்த்திருக்கலாம். இவர்கள் 1843-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை பெருமாளை விஷேச காலங்களில், பல்லக்கில் சுமந்து வரும் பாக்கியம் பெற்ற கைங்கர்யக்காரர்கள். திருப்பதி ஏழுமலையானை மட்டுமின்றி, திருச்சானூர் பத்மாவதி தாயார், கோவிந்தராஜ பெருமாள், கல்யாண ஸ்ரீநிவாசர் என அனைத்து தேவஸ்தான கோயில்களிலும் இவர்களே உற்சவர்களைச் சுமக்கிறார்கள்!
எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்!

1843 முதல் 1933-ம் ஆண்டு வரை, திருப்பதி ஏழுமலையான் கோயிலை, வட இந்தியாவைச் சேர்ந்த ஹத்திராம் மடத்தைச் சேர்ந்த மஹந்தி என்பவர்களே நிர்வகித்து வந்தனர். அப்போது, சுவாமிக்கு நித்ய பூஜைகள், வருவாய் கணக்குகள், உற்சவங்கள் முதலானவற்றை நடத்தினார்கள். விஷேச காலங்களில், உற்சவரை திருவீதி உலாவுக்கு, பல்லக்கில் சுமந்து செல்ல, தினக்கூலி பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பும் இவர்களிடம் இருந்தது.

உற்சவர்களைச் சுமந்து செல்லும் ஊழியர்கள்

அப்போது திருப்பதி, திகு ஊரு போன்ற இடங்களிலிருந்து கூலிக்கு ஆட்கள் வரவழைக்கப்பட்டார்கள். இவர்கள் தினமும் நடந்தே திருமலைக்குச் சென்று ஏழுமலையானுக்கு பல்லக்கு சுமந்து வந்தார்கள். இவர்களில் திகு ஊரு கிராமத்தினர் அதிக சிரத்தையுடன் சுவாமி உற்சவங்களில் பங்கேற்றனர். இதனால் மஹந்திகளுக்கும் இந்தக் கிராமத்தினருக்கும் நல்லதொரு புரிதலும் பிணைப்பும் ஏற்பட்டது. இதனால் இந்தக் கிராமத்தினரையே எல்லா விஷேச காலங்களிலும் பல்லக்கு தூக்க ஏற்பாடுகள் செய்தனர். இதனால் இவர்களின் ஊரான திகு ஊரு என்பது பெருமாள் பள்ளியாக மாறியது. இதோ... இன்றளவும் அவர்களின் பரம்பரையினர், சிரத்தையுடன் பல்லக்கு கைங்கர்யம் செய்து வருகின்றனர்.

பெருமாள் பள்ளிக்கு அருகே உள்ள தொண்டவாடா பகுதியைச் சேர்ந்த எம்.சந்திரமவுலி ரெட்டி எனும் ஐஏஎஸ் அதிகாரி, 1969-ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார். அப்போது இவர்கள் அனைவரையும் தினக்கூலி பணியாளர்கள் என்பதில் இருந்து தேவஸ்தான ஊழியர்களாக பணியில் சேர்த்தார். அப்போது முதல் இன்றுவரை, இவர்கள் தேவஸ்தான ஊழியர்களாக, பெருமாளைச் சுமக்கும் ‘பேரர்’களாக பணியாற்றி வருகின்றனர். உற்சவங்களோ விழாக்களோ இல்லாதபோது இவர்கள் கோயிலின் பிற பணிகளில் ஈடுபடுவார்கள். தினக்கூலிகளாக இருந்தபோது அணா கணக்கில் குறைவான ஊதியமே பெற்று வந்த இவர்கள், தற்போது மாதம் சுமார் அறுபதாயிரத்துக்கும் அதிகமாக ஊதியம் பெறுகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பெருமாள் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சாம்பசிவா, “எங்கள் மூதாதையர் காலத்திலிருந்து பரம்பரை பரம்பரையாக திருப்பதி ஏழுமலையானுக்கு பல்லக்குத் தூக்கி சேவை செய்கிறோம். இது சேவை என்பதைவிட எங்கள் பரம்பரைக்கே கிடைத்த பாக்கியம். பெருமாளை தரிசித்தாலே புண்ணியம் என்று உலகெங்கும் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் தினமும் திருமலைக்கு வருகின்றனர். அப்படியிருக்க, அந்தப் பெருமாளையே விதவிதமான வாகனங்களில் எங்களது தோள் மீது சுமந்து செல்ல நாங்கள் எவ்வளவு புண்ணியம் செய்திருக்கவேண்டும்” என்று சொல்லி நெகிழ்கிறார்.

100 கிலோ சர்க்கரை மூட்டையைச் சுமக்கணும்!

இது குறித்து இன்னும் சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்ட மூத்த ஊழியர் வெங்கடேஷ், ``உற்சவ மூர்த்திகளைச் சுமக்கும் காலங்களில் நாங்கள் மட்டுமல்ல; எங்களது குடும்பத்தினரும் சுத்தபத்தமாக விரதமிருப்போம். நம்மைக் காக்கும் பெருமாளை நாம் தோளில் சுமக்கிறோம் என்பதை நினைக்கும்போதே எங்களுக்குள் ஒரு சக்தி பிறக்கும். ‘ஏ’ ‘பி’ என இரண்டு குழுக்களாகப் பிரிந்து இந்தச் சேவையில் நாங்கள் ஈடுபடுவோம். பிரம்மோற்சவம், ரதசப்தமி போன்ற விஷேச நாட்களில் ஒவ்வொரு வாகன சேவையின்போதும், பெருமாளின் அருகில் அர்ச்சகர்களும் வாகனத்தின் அருகே அமர்ந்தும், நின்றுகொண்டும் வருவார்கள். எனவே, சுவாமியுடன் சேர்த்து வாகனத்தின் எடை 3 முதல் 4 டன்கள் வரை இருக்கும். ஆனாலும் எவ்வித சிரமும், தடங்கலும் இல்லாமல் 4 மாட வீதிகளைச் சுற்றி வருவோம்.

தினம் ஒரு வாகனத்தில் வீதியுலா வருவார் மலையப்ப சுவாமி. ஒவ்வொரு வாகனத்தையும் 24 பேர் சேர்ந்து சுமப்போம். எங்களுக்கு தேவஸ்தானம் ஓய்வு அறை, உண்ண உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. இதில் தற்காலிக ஊழியர்களும் உள்ளனர். வாகன சேவை இல்லாத நாட்களில் அன்னதானம், மருத்துவ சேவை பணிகளைக் கவனிப்போம்’’ என்கிறார்.

32 ஆண்டுகளாகப் பெருமாளைத் தோளில் சுமந்து, கடந்த 2012-ல் ஓய்வுபெற்ற பாவாஜி என்ற பெத்த செங்காரெட்டிக்கு இப்போது வயது 73. அவர் பெருமாள் சேவை குறித்துப் பேசுகையில், “மஹந்திக்கள் காலத்திலிருந்தே எங்கள் மூதாதையர்கள் பெருமாளை விழாக்காலங்களில் தினக்கூலிக்கு சுமந்து புண்ணியம் தேடிக்கொண்டனர். எனக்குப் பிறகு இப்போது எனது மகன் பெருமாளைச் சுமக்கிறான்” என்றார். 73 வயதான இவர் ஓய்வில் இருப்பார் என்று நினைத்துத்தான் நாம் இவரது வீட்டுக்குப் போனோம். ஆனால், தனது நிலத்தில் மனைவியுடன் சேர்ந்து விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தார் பாவாஜி.

மலையப்ப சுவாமி எங்களோடு வந்துவிட்டதைப் போல்...

பெருமாளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் முகம் பிரகாசமாகிறார் பாவாஜி. “மலையப்பனை இந்த ஜன்மம் முழுவதும் பார்த்துக்கிட்டே இருக்கலாம். அவ்வளவு அழகு. மலையப்பன் மாட வீதியில் உலா வரும்போது பக்தர்கள் அவனை `கோவிந்தா கோவிந்தா’ என மனதார வழிபடும்போதெல்லாம் என் மனம் உற்சாகமடையும்; புது சக்தி பிறக்கும்.தோள் மீது உள்ள பாரத்தை நாம் சுமக்கவில்லை, அவன்தான் சுமக்க வைக்கிறான் என்கிற உண்மை விளங்கும். நான் சிறு வயதில், 1970 முதல் 1978 வரை திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் தினக்கூலியாக பணியாற்றினேன். தினமும் வேலை இருக்காது. பிள்ளை, குட்டிகளைப் காப்பாற்ற வேண்டுமே... அதனால், எங்கள் ஊரிலிருந்து, காய்கறிகள், தயிர், நெய், பழங்கள், பூக்களைத் தூக்கிக்கொண்டு, வாரி மெட்டு வழியாக 5 மைல் தூரம் நடந்தே படி ஏறி திருமலைக்குக் கொண்டு சென்று சேர்ப்போம். அப்படிச் சேர்த்தால், தேவஸ்தானத்தினர் எங்களுக்கு ஒரு நாளைக்கு 5 அல்லது 6 ரூபாய் கூலியாகக் கொடுப்பார்கள்.

மாட வீதியில் சுவாமியைத் தூக்கி வரும் பணியில் எங்களை நியமிப்பதற்கு முன்பு, 100 கிலோ சர்க்கரை மூட்டையைத் தோளில் சுமந்தபடி மாட வீதியை சுற்றி வரச் சொல்வார்கள். மூட்டை கீழே விழக்கூடாது. விழுந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால், நாங்கள் கடவுளை வேண்டிக்கொண்டுதான் அந்தப் பயிற்சிகளை முடித்துப் பணியில் சேர்ந்தோம். வாகன மண்டபத்திலிருந்து புறப்படுவதிலிருந்து 4 மாட வீதிகளை சுற்றிமுடிக்கும் வரை எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என பயபக்தியுடன் வேலை செய்வோம். நாங்கள் நடக்கும்போது ஒருவரின் கால்கள் மற்றவருக்கு இடறினால்கூட பெருமாள் கீழே விழுந்து விடுவாரோ என்ற பயம் மனதில் இருக்கும். ஆனால், இதுவரை அப்படியான அசம்பாவிதங்கள் ஏதும் திருப்பதி வரலாற்றில் நடந்தது இல்லை. மழை வந்தாலும், நாங்கள் நனைவோமே தவிர, சுவாமியை நனைய விடமாட்டோம். சிலசமயம் வாகனத்தின் கீழே வைக்கப்பட்டிருக்கும் கட்டைகள் உடைந்தது உண்டு. அப்போதும் அதை எங்கள் தோளில் தாங்கி சுவாமியைப் பத்திரமாகக் கோயிலில் கொண்டுபோய் சேர்த்துள்ளோம்.

பெருமாள் பள்ளி கிராமம்

அப்போதெல்லாம் கேன்டீன் சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு திருமலையிலேயே தங்கி விடுவோம். மாதத்தில் 2 அல்லது 3 முறை மட்டுமே வீட்டுக்கு வருவோம். அப்படி வந்தாலும்கூட, எங்கள் தோளில் மலையப்ப சுவாமி உட்கார்ந்து கொண்டு, எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டதாக ஓர் உணர்வு வரும்’’ என்று தோள்பட்டையைத் தடவிக்கொண்டே சொன்ன பாவாஜி, “சுவாமியை நாங்கள் எப்போதுமே கஷ்டப்பட்டு சுமந்ததில்லை; இஷ்டப்பட்டே சுமந்தோம். அதனால்தான் இத்தனை வயதிலும் நானும், எனது குடும்பத்தாரும் நல்ல நிலைமையில் இருக்கிறோம்” என்றபடியே ஏழுமலையானை நோக்கி கைகூப்பி நெகிழ்ந்தார்.

(முகங்கள் வரும்...)

-என்.மகேஷ்குமார்

x