பதறும் பதினாறு 1: பெற்றோருக்கான அவசர, அவசியத் தொடர்!


நம் குழந்தைகளை நோக்கி கோரப்பல் நீட்டி கைவிரிக்கும் அபாயகரமான ஒரு உலகத்துக்குள் புகுந்து பார்ப்பதற்கு முன் ஒரு சிறு குறிப்பு...

தொடரில் இடம்பெறும் சம்பவங்கள் அத்தனையும் உண்மை. பெயர்கள்/இடங்கள் மட்டும் மாற்றப்படுகின்றன - சம்பந்தப்பட்டவர்களின் எதிர்கால நலன் கருதி.
முதலில் பிரசன்னா கதை... 

அதாவது நிஜம்!

அந்த ‘பெரியவங்க’ வீடியோ!

வீட்டுக்கு மூத்த பிள்ளை பிரசன்னா. அடுத்த ஆண்டு ஒன்பதாம் கிளாஸ் போகப்போகிறான். பெற்றோர் இருவருமே வேலைக்குப் போகிறவர்கள். அதே நேரம், ‘செல்லம்’ என்ற பெயரில், மகன் கேட்பதையெல்லாம் மறுக்காமல் வாங்கிக்கொடுப்பவர்கள் அல்ல.

கண்டிப்பும் பாசமும் நிறைந்த சூழலில் வளர்ந்த பிரசன்னாவுக்குப் பள்ளியிலும் நல்ல பெயர். பாடம் தொடர்பாகப் பலவற்றையும் இன்டர்நெட்டில் தேட வேண்டியிருந்ததால் தன் அம்மாவின் செல்போனை வாங்கி அடிக்கடி பயன்படுத்துவான் பிரசன்னா. சில நாட்களில் அவனுக்கே அவனுக்கென்று ஒரு ஸ்மார்ட் போனை வாங்கிக் கொடுத்தார்கள். மறக்காமல் அதை ‘சைல்ட் லாக்’ செய்து கொடுத்தார்கள். காரணம் சொல்லாமல் தடுப்பவற்றை, தாமாகச் செய்துபார்ப்பதுதானே குழந்தைகளின் இயல்பு! அதிலும் செல்போனில் தடைகளை உடைப்பதற்கு சொல்லித்தரவா வேண்டும்!

பாடங்களைத் தாண்டி பரந்த ஒரு உலகம் இழுக்கவும், பிரசன்னா தன் போனில் சைல்ட் லாக்கை வெற்றிகரமாக நீக்கிவிட்டான்.

பாடம் தொடர்பான தேடலின் நடுவே ‘பெரியவர்’களுக்கான ஒரு வீடியோ வர, ஆர்வத்தில் அதைப் பார்த்துவிட்டான். 

அந்த வீடியோ அவனுக்குள் குழப்பத்தையும் பயத்தையும் முதலில் ஏற்படுத்தியது. பிறகு ஏராளமான கேள்விகளை எழுப்பியது.

அடுத்து பிரசன்னா என்ன செய்திருப்பான்?

எதுவும் நடக்கலாம்!

13 வயதுப் பையன் எப்படி அடல்ட் வீடியோவைப் பார்க்கலாம் என்று பதறினால் நமக்கு இன்னும் அனுபவம் போதவில்லை என்றுதான் அர்த்தம். ஸ்மார்ட் போன்களும் இன்டர்நெட் வசதியும் மலிவாகக் கிடைக்கும் இந்த நாளில் குழந்தைகள் எதை வேண்டுமானாலும் பார்ப்பதற்கான வாய்ப்பு பரந்து கிடக்கிறது. அதைத் தவிர்ப்பது பெரும்பாலான நேரம் பெற்றோர் கைகளில் இருப்பதில்லை.

நாம் மொபைல் போன் வாங்கித் தரவில்லை யென்றாலும் நண்பர்களின் மூலம் அவற்றைப் பார்க்க முடியும். அரைகுறையாகத் தெரிந்தவர்கள் மூலம் அந்த வயதுக்கு வேண்டாத விவரங்களை உள்வாங்கிக் கொள்ள முடியும். எனவே, ‘நம்ம குழந்தையா? 

சேச்சே..!’ என்று தலையை உதறிக்கொள்வது, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதில்தான் முடியும்.

அப்புறம்?

தெரிவோம்... தெளிவோம்!

பருவ வயதின் அத்தனை குழப்பங்களையும் ஒரு சாகசம் போல இன்றைய பெற்றோரும் கடந்து வந்திருப்பார்கள்தான். என்றாலும் பத்து ஆண்டுகளுக்கு முன்புகூட இல்லாத வகையில் இன்று புதிது புதிதாகச் சவால்கள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன  நம் பிள்ளைகளுக்கு.

பிள்ளைகளின் ஆளுமையில் இனி கிராமம், நகரம் என்றெல்லாம் வேறுபாடு இல்லை. காரணம், உலகின் எந்த மூலையில் நடப்பதையும் இவர்கள் எங்கிருந்தாலும் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

பத்து அல்லது பதினோரு வயதில்தான் பெரும்பாலான குழந்தைகள் தங்களைத் தனித்த ஆளுமையாக உணரத் தொடங்குகிறார்கள். பருவ வயதின் தொடக்கத்தில் அவர்களைப் பாதிக்கிற விஷயங்களுக்கும் அவர்களின் ஒட்டுமொத்த ஆளுமைக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. பருவ வயதில் அவர்களின் உடலிலும் மனதிலும் ஏற்படும் மாறுதல்கள் அவர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும். அதுவரை அப்பா, அம்மா சொல்லித்தந்த அனைத்தையும் அவர்கள் கேள்வி கேட்கத் தொடங்குவார்கள். எதை ஏற்றுக்கொள்வது எதை மறுப்பது என்பதை அவர்களே முடிவுசெய்யவும் தொடங்குவார்கள். அதனாலேயே இன்று பருவ வயதுக் குழந்தைகளைக் கையாள்வது ஒவ்வொரு குடும்பத்திலும் சக்கர வியூகத்தில் புகுந்து புறப்படுவது போலவே இருக்கிறது.

அப்படி ஒரு போர் வியூகத்தில்தான் 13 வயது பிரசன்னா, தன்னையும் அறியாமல் அடி எடுத்து வைத்துவிட்டான்.

அறிவாளி பிள்ளை... அன்பான அம்மா!

பெரியவர்களுக்கான வீடியோவையோ பாலியல் காட்சிகள் நிறைந்த படங்களையோ பதின் பருவக் குழந்தைகள் பார்க்க நேர்ந்தால், அவர்கள் வளர்க்கப்பட்ட சூழலுக்கு ஏற்ப பலவிதமாக நடந்து கொள்ளலாம். பதறி வெலவெலத்துப் பிறகு அந்தப் பக்கமே போகாமல் ஒதுங்கக்கூடும். அல்லது மெள்ள மெள்ள புதிரானதொரு ஆர்வம் தூண்டப்பட்டு, அதுபோன்ற காட்சிகளை யாருக்கும் தெரியாமல் மறைத்து மறைத்துப் பார்க்கவும்கூடும்.

அல்லது, “நான் இப்படி ஒன்று பார்த்தேன். என்ன அது?” எனத் தங்கள் பெற்றோரிடமே பகிர்ந்துகொள்ளவும் கூடும்.

பிரசன்னா இந்த மூன்றாவது ரகம். பெற்றோர் அவனுக்குக் கொடுத்திருந்த உரிமையும் புரிதலும் அப்படி.

முதலில் அம்மாவிடம்தான் சொன்னான். மகன் சொல்வதைப் பொறுமையுடன் கேட்டார் அம்மா.

உள்ளூர கவலை எழுந்தாலும் பதறித் துடிக்கவில்லை.

“செல்போன்ல ஏதோ வந்திருக்கு. நீயும் என்னன்னுதெரியாம பார்த்திருக்கே. அதுக்கு நீ என்ன பண்ண முடியும்? நல்லா கவனிச்சிருந்தியானா அதுல ‘18 ப்ளஸ்’னு நோட்டிபிகேஷன் வந்திருக்கும். ஒவ்வொண்ணுக்கும் பார்த்துத் தெரிஞ்சிக்க ஒரு வயசு இருக்கு. இனிமே அப்படி எது வந்தாலும் நீ பார்க்க வேணாம் சரியா?” என்றார் அம்மா. அதோடு நண்பர்கள் யாராவது இப்படியான வீடியோக்களைக் காட்டினாலும் அல்லது அதைப் பற்றிப் பேசினாலும் அதில் கலந்துகொள்ள வேண்டாம் என்று பக்குவமாக மகனிடம் சொல்லிவைத்தார். பள்ளிக் குழந்தைகள் இதெல்லாம் பார்ப்பது தப்பு என அந்த மாதிரி நண்பர்களிடமும் சொல்லச் சொன்னார்.

மகன் குறித்த தகவலைத் தன் கணவரிடம் பிரசன்னாவின் அம்மா சொல்ல, அவரும் மகனை அழைத்துப் பேசினார். அப்பாவும் அம்மாவும் மனம்விட்டுப் பேசியதால் பிரசன்னாவுக்குள் இருந்த படபடப்பு போய்விட்டது. கொஞ்சமே கொஞ்சம் இருந்த குற்றவுணர்வும் அகன்றது. பார்த்ததை மறந்துவிட்டு, அவனால் எப்போதும்போல் இயல்பாக இருக்க முடிந்தது.

ஆனால், எல்லா வீடுகளிலும் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான உரையாடலும், நம்பிக்கையும் இப்படித்தான் இருக்கிறதா?

மனம்விட்டுப் பேசுவோம்!

“குறிப்பிட்ட வயதில் உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும். அதற்கேற்ப எதிர்பாலின ஈர்ப்பு ஏற்படும். இது மிக இயல்பானது. அது நம் இயல்பைப் பாதிக்காமல் பார்த்துக்கணும்” எனத் தங்கள் குழந்தைகளின் தோள்தட்டிப் பரிவுடன் பேசுகிற பெற்றோர் இன்று எத்தனை பேர்? ஒரு சுனாமியின் பேரலை போல குழந்தைகளின் வாழ்க்கைக்குள் நவீனத் தொழில்நுட்பத்தைப் பாய அனுமதித்துவிட்டு, அவர்களின் சிந்தனைப் போக்கு மட்டும் - ‘பொம்பளைப் பசங்களோட விளையாடினா ஆம்பளைப் பசங்களுக்குக் காது அறுந்து போயிடும்’ என்று பயமுறுத்தி வைக்கப்பட்ட - முப்பது வருடங்களுக்கு முந்தைய குழந்தை களுக்கு உரியதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்? பெற்றவர்கள், ஒரு தடவை அழுத்தமாக முறைத்தாலே அடங்கி ஒடுங்கிப்போகிற அந்தக் காலக் குழந்தையான நாம், இன்றைய குழந்தைக்குள்ளும் அப்படி ஒரு ‘பணிவை’ எதிர்பார்ப்பது எத்தனை பெரிய முட்டாள்தனம்!

அங்கேதான் அணுகுமுறை தவறிப் போகிறது. பிள்ளைகளின் பாதையும் மாறிப்போகிறது.

அன்பாலே அழகாகும் வீடு!

“பருவ வயதுக் குழந்தைகளின் நடவடிக்கை சரியில்லை என்றால், குழந்தைகளை மட்டும் தனியாகப் பிரித்தெடுத்து தீர்ப்பு வழங்க முடியாது. குடும்பம், சமூகம் இரண்டுக்கும் அதில் பங்கு இருப்பதால் அவற்றுடன் சேர்த்தே அனைத்தையும் பார்க்க வேண்டும்” என்கிறார் கோவையைச் சேர்ந்த மனநல மருத்துவர் குருமூர்த்தி.

இன்று பெரும்பாலான வீடு களில் குழந்தைகளுடன் பெற் றோர் மனம்விட்டுப் பேசுவதே இல்லை. பள்ளிக்குச் செல்லும் நேரம் தவிர்த்து மீதியிருக்கும் நேரத்தில்தான் குழந் தைகள் வீட்டில் இருக்கிறார்கள். இருக்கும் அந்தக் குறைந்த அளவு நேரத்திலாவது குழந்தைகளிடம் ஆரோக்கியமான உரையாடலை நடத்துவது அவசியம் என குருமூர்த்தி சொல்கிறார்.

“நாம இன்னைக்கு எவ்வளவு தான் பாதுகாப்பா குழந்தைகளை வளர்க்கறதா நினைச்சாலும் சில வற்றை நம்மால் தவிர்க்கவே முடியாது. ஆனால், அப்படியான சூழலை எப்படிக் கையாளணும்னு நாம குழந்தைகளுக்குச் சொல்லித் தரலாம். எது நடந்தாலும் அப்பா, அம்மாகிட்ட சொல்லலாம் அப்ப டீங்கற நம்பிக்கையை நாம குழந்தைகளுக்கு ஏற்படுத்தணும்” என்கிறார் குருமூர்த்தி.

காலம் கடந்த பாடம்!

குழந்தைகளைவிடவும் பெற்றோருக்குத்தான் இன்று நிறைய பயிற்சி தேவையிருக்கிறது. ஆர்வத்துடன் பேசவருகிற குழந்தைகளை, “வாயை மூடு. எல்லாம் தெரிந்த மாதிரி பேசாதே” என்று அடக்குவதும் வன்முறைதான். இப்படி மிரட்டி, அடக்கி வளர்க்கப்படும் குழந்தைகள் எதையும் பெற்றோருடன் மட்டுமல்ல; நண்பர்களிடம் கூடப் பகிர்ந்து கொள்ள முடியாமல் போகக்கூடும்.

செல்வாவும் அப்படி ஒடுங்கிப் போனவன்தான். அப்பா வேலையில் இருந்து வந்த பிறகும் ஓயாமல் போனில் தன் அலுவலக விஷயங் களைப் பேசிக்கொண்டிருக்க... அம்மா சுடச்சுட சமைப்பதிலும் அப்பா சாப்பிடத் தயாராகிற வரை யில் தொலைக்காட்சித் தொடரிலும் ஆழ்ந்திருக்க... அன்றாடப் பாடங் களைப் படித்து முடித்த பிறகும், தூங்கப் போவதற்கு முன்பு செல்வா வுக்கு நிறையவே நேரம் இருந்தது.

அப்பா - அம்மாவுடன் பகிர்ந்து கொள்ள அன்றாடம் ஏதேனும் ஒரு விஷயமும் இருந்தது.

ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லாததால், இவன் கம்ப்யூட்ட ரிலோ ஸ்மார்ட் போனிலோ கவன மாகிவிடுவான்.

கைக்கெட்டும் தூரத்தில் கம்ப்யூட்டர் திரையைத் தன் பக்கம் திருப்பி வைத்துக்கொண்டு கண்கள் ஒளிர அதில் கவனமாக இருக்கும் மகன், தன் பாடங்களைப் பற்றித்தான் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று அப்பாவும் அம்மாவும் நம்பினார்கள்.

அந்த ‘குருட்டு நம்பிக்கை’யின் விளைவு... வீட்டுக்குள் இருந்த படியே வெகுதூரம் வேறு திசைக்குப் போயிருந்தான் செல்வா. மிக மிக அபாயகரமான அந்தத் திசை...

(நிஜம் அறிவோம்...)

x