நானொரு மேடைக் காதலன் - 1


எளியவன் எனது இலக்கிய ஈடுபாட்டுக்கும் மேடைக் காதலுக்கும் நான் கலை தேடிய கல்லூரியே முதல் களம் தந்தது. விரும்புகிற நூல்களை வாங்குகிற நிலையில் அப்போது நான் இல்லை. எழுதவும் படிக்கவும் தெரியாத என் தாத்தாவுக்கு நடராஜப் பத்தும் விநாயகர் அகவலும் எப்படிக் கைகூடி வந்தது என்று யோசித்தால் மலைப்பாகவே இருக்கும். தந்தியைத் தவிர எந்த நாளிதழும் படித்தறியாத நான் கல்லூரிக்குச் சென்ற பின் கல்லூரி நூலகத்தை முழுமையாகப் கடன்வாங்கிக் கொண்டேன். கல்கி, கலைமகள், கண்ணதாசன், மஞ்சரி, ஆனந்த விகடன், குமுதம் போன்ற வாராந்தரிகளை நூலகத்தில் கண்ணுற்றபோது, புதையல் கிடைத்தவனைப் போல புளகாங்கிதமுற்றேன்.

கல்லூரி மாணவர் பேரவையின் சிறப்புக் கூட்டம் வருகிறது. அதற்குச் சிறப்பு விருந்தினராக யாரை அழைக்கலாம் என்று கல்லூரி முதல்வரைப் பணிவுடன் அணுகி நின்றேன் ‘திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தொடர் சொற்பொழிவுக்காக நாகர்கோவிலில் முகாமிட்டு இருக்கிறார்கள். அவரையே அழைக்கலாம். 

நாகர்கோவிலில் புகழ்பெற்ற பயோனியர் குடும்பத்து வாரிசு டாக்டர் பத்மனாபன் வீட்டில்தான் சுவாமிகள் வாசம் செய்கிறார்கள். கடிதம் தருகிறேன்; அழைத்து வா’ என்று என்னை ஆற்றுப்படுத்தினார் முதல்வர். வாரியார் சுவாமிகளின் அருமையையும் பெருமையையும் அறியாத நான், கல்லூரி முதல்வரோடு முரண்பட்டுவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் கடிதத்தை முதல்வரிடம் பெற்றுக்கொண்டு வாரியார் சுவாமிகள் தங்கியிருந்த டாக்டர் பத்மனாபன் இல்லம் நகர்கிறேன்.

`வாங்க வாங்க...’ என்று இந்தச் சின்னவனை அழைத்து வாஞ்சையுடன் அருகில் உட்கார வைத்து ‘பெயர் சம்பத்தானே..! நீங்கள் வருகிற தகவலை உங்கள் கல்லூரி முதல்வர் தொலைபேசியில் என்னிடம் பகிர்ந்துகொண்டார்’ என்று வாரியார் சொன்ன மாத்திரத்தில் முதல்வர் தந்திருந்த கடிதத்தை அவர் கையில் கொடுத்தேன். வாங்கிப் படித்து புன்னகை சிந்த ‘வியாழக்கிழமை வருகிறேன்’ என்றார்கள். ‘குறிப்பிட்ட நேரம் பிற்பகல் மூன்று மணிக்கு விழா நடைபெறும் குமரகுருபரர் வழிபாட்டு மன்றத்துக்கு நானே வந்து விடுவேன். என்னை அழைக்க யாரும் வர வேண்டாம். முதல்வரிடம் சொல்லி விடுங்கள்’ என்றார் வாரியார் சுவாமிகள். சந்திப்பதற்கு அரிதான மனிதரைச் சந்தித்துவிட்ட மகிழ்ச்சியில் என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன்.

முதல்வரிடம் போய் தகவலைச் சொன்னேன். முழு வீச்சில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யச் சொன்னார்கள். நாகர்கோவில் உடுப்பி கிருஷ்ணா பவன் விடுதியில் அறை எடுத்துத் தங்கிக்கொண்டு, நிகழ்ச்சியை வெற்றிகரமாக்க நண்பர்களுடன் இணைந்து விழி மூடாமல் வினையாற்றினேன். வண்ணப் பதாகைகள், வரவேற்பு வளைவுகள், ஓலைத் தோரணங்கள், தொங்கல்கள் அனைத்தும் எனது கிராமத்திலேயே பந்தல் நிர்மாணிப்பவரிடம் முன்பணம் கொடுத்துத் தயாரித்தேன். முதல்வர் அனுமதியுடன் சுற்றறிக்கையைக் கைப்பட எழுதி வகுப்புகளுக்கு இடையூறு ஏற்படாமல், வாரியார் சுவாமிகள் வருகையை, அனைத்து மாணவர்களின் கவனத்துக்கும் கொண்டு சென்றேன். விழா நடைபெறும் நாளுக்கு முன்னால் கல்லூரி வளாகத்துக்குள் வெளிப்படையாக எந்த விளம்பரமும் செய்யக் கூடாது என்பது விதி. அதை மீறாமல் வாரியார் வருவதை பேராசிரியர்கள் மட்டுமல்லாமல், மாணவர்களும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போது இதுவே பேச்சாக இருந்தது. கண்டிப்பு மிகுந்த கல்லூரி முதல்வர் புன்னகைக்கும்படியாக, படிப்படியாக முயற்சிகளை மேற்கொண்டேன்.

அந்த நாள் வந்தது. சொன்னபடி குறித்த நேரத்தில் குமரகுருபரர் வழிபாட்டு மன்றத்தின் வாசலுக்கு வாரியாரின் கார் வந்து நின்றது. கல்லூரி முதல்வர் சந்தன மாலையையும் தமிழ்த்துறைத் தலைவர் பட்டாடையும் அணிவித்து வாரியாரை வரவேற்கிறார்கள். பின், மலர்ந்தும் மலராத சிவந்த ரோஜா மாலையை அடியேனும் அணிவித்து, குமரகுருபரரின் ‘மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்’ என்ற நூலையும் வாரியார் திருக்கரத்தில் கொடுத்து வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றோம். உட்கார்ந்து உரையாற்ற ஏதுவாக அமைக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட தட்டையான மேசையின் மீது யாருடைய துணையும் இல்லாமல் வாரியார் சுவாமிகள் ஏறி உட்கார்ந்துகொண்டார்கள். தமிழின் மீதும் பேச்சின் மீதும் ஈடுபாடு இல்லாத மாணவர்களும் கையில் புத்தகங்களை வைத்தபடி வைத்தகண் வாங்காமல் நின்றுகொண்டே இருந்தார்கள்.தேனடையில் தேனீக்கள் உட்கார்ந்திருப்பது போல் நான் முந்தி நீ முந்தி என நெருக்கமாக மாணவர்களும் மாணவிகளும் உட்கார்ந்து இருந்தார்கள். ஒரு பக்கம் மாணவர்கள். இன்னொரு பக்கம் மாணவிகள். பக்கவாட்டில், நின்றபடியே மாணவர்கள். மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் இடைப்பட்ட இடத்தில் பேராசிரியர்கள் நிற்க, நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கினேன்.

நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய கல்லூரி முதல்வர் மூன்றே நிமிடத்தில் தனதுரையை முடித்துக்கொண்டார். வரவேற்புரை நிகழ்த்திய வித்தகப் பேராசிரியர் தெ.ந.மகாலிங்கம் மாணவர்களின் உள்ளங்களை அள்ளிக்கொண்டார்கள். சிவத்துக்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய சமயக் குரவர்களின் வரிசையில் வாரியார் சுவாமிகளைக் கொண்டு வந்து நிறுத்திய அவரது உரை வீச்சால் அரங்கம் அதிர்ந்தது. ‘வானம் தவறினாலும், வாய்த்த குலமகளிர் மானம் தவறினாலும், வள்ளல் குலத்தோர் தானம் தவறினாலும், நல்லாசிரியர் ஞானம் தவறினாலும், பைந்தமிழையும் பக்தியையும் தவறாத வண்ணத் தமிழ்க் கடல், எண்ணக் கருவூலம், நித்தமும் கொட்டும் தேனருவி இதோ கொட்டப் போகிறது’ என்றேன். கல்லூரியின் சார்பாக வேல் வழங்கி பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார் முதல்வர்.

நெகிழ்வுடன் பேச ஆரம்பித்த வாரியார், ‘எல்லாம் வல்ல வயலூர் வள்ளல் பெருமான் கருணையினாலே தொடங்குகின்றேன்’ என்றார். மாணவர்களைப் பார்த்து ‘வல்லினங்களே’ என்றவர், மாணவிகளைப் பார்த்து ‘மெல்லினங்களே’ என்றார். ஆசிரியர்களைப் பார்த்து ‘இடையினங்களே’ என்றார். கைத்தட்டல் விண்ணை முட்டியது. ‘காலேஜ் படிப்பு முடிகிறபோது கால் ஏஜ் முடிந்து விடுகிறது’ என்றார். ‘அடுத்து ஏடு இட்டு ஓர் இயல்தான் எடிட்டோரியல் ஆயிற்று’ என்றார். வாரியார் சுவாமிகளின் சிலேடைகள் அனைவரையும் சிந்திக்கவும் வைத்தன; சிலிர்க்கவும் வைத்தன. வில்லில் விளைகிற வெற்றியைவிட சொல்லில் விளைகிற சுகம் மேலானது என்று எண்ணி மகிழ்ந்தேன்.

நன்றியுரை ஆற்றுகிற பெரும் பேறு எனக்கு! ‘அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருகனை முதலாகக் கொண்டு தமிழுக்கும் சமயத்துக்கும் ஆற்றிவரும் தொண்டால் தமிழும் சமயமும் தழைக்கிறது. தங்கள் வருகையால் எங்கள் கல்லூரி பெருமை பெற்றது. தங்கள் பேச்சைக் கேட்ட நாங்கள் பாக்கியம் பெற்றவர்கள் பட்டியலில் இடம் பெற்றோம். தந்தைக்கோர் மந்திரத்தை சாற்றிப் பொருள் விரித்து முந்து தமிழில் முருகு என்று பேர் படைத்து அந்தத்தில் ஆதி, ஆதியிலே அந்தமென வந்த வடிவேலை வணங்குவதே என் வேலை எனக்கொண்டுவிட்ட சோலை இளங்காற்றே! வாரிக் களிக்கும் வண்ணத் தமிழ்க் கடலே, நீங்கள் எங்கள் வணக்கத்துக்குரியவர் மட்டுமல்ல, வழிபாட்டுக்கும் உரியவர். ஏனென்றால் இன்பத் தமிழகத்தில் இருபதாம் நூற்றாண்டின் அந்திப் பொழுதில் கவி காளமேகத்தைப் போல சிலேடைகளை வாரியார் சுவாமிகளைத் தவிர வாரி யார் சொல்லுகிறார்கள்’ என்றேன். விளைந்த நெற்கதிர்போல் தலை குனிந்து உட்கார்ந்து இருந்தார். மாணவர்களின் கரவொலி ஓய வெகு நேரமாயிற்று. நன்றியுரை முடித்தபின் வாரியார் பாத மலர்களைத் தொட்டு வணங்கினேன். எனது நெற்றியில் திருநீறு பூசி ஆட்டோகிராஃபில் ‘இரை தேடுவதோடு இறையும் தேடு’ என்று எழுதித்தந்து ‘மாலை ஆறு மணிக்குப் பேச்சுக் கேட்க வா’ என்றும் அழைத்தார்கள்.

வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளித் திடலில் கந்தர லங்காரம் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். வாரியார் மேடைக்கு அருகில் வரும்போது அவர் பார்க்கும்படியாக நான் நின்றுகொண்டு இருந்தேன். என்னைக் கண்டதும் புன்னகைத்து ‘உன்னைப் பற்றித்தான் வரும்போது டாக்டர் பத்மனாபனுடன் பேசிக்கொண்டு வந்தேன்’ என்றவர், அப்படியே மேடையில் என்னை அறிமுகம் செய்து ‘ஞானச் சிறுவன்’ என்ற விருதைத் தந்து வாழ்த்தினார். கல்லூரியில் நான் தந்த நன்றியுரை என்னைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது. வாரியார் சுவாமிகளைச் சந்தித்ததும் அவர் என்னில் சங்கமித்ததும் மறக்க முடியவில்லை. அதன் பின்னால் மேடை வாழ்வையும் என்னால் துறக்க முடியவில்லை!

(இன்னும் பேசுவேன்...)

x