அரியநாச்சி 1: ஜென்ம கைதி


வெயில்… தெருவெல்லாம் அனலாய் இழையுது.

ஜெயிலுக்கு வெளியேதான் வெயிலு. வாசல் தாண்டியதும் புளிய மரம், புங்கை மரம், கல்வாகை, வேப்பந்தோப்பு. பொட்டு வெயில் இறங்காத நிழல், சனங்களை ‘குளு குளு’ன்னு சிலுக்காட்டுது.

ஜெயில் வாசலில், தெற்கத்திச் சனம் திருவிழாக் கூட்டம் போல் கூடிக் கெடக்குது.

வெட்டு, குத்து, கொலைக் கேஸுலெ சிக்கி, ஜெயிலுக்குள்ளே இருக்கிற அப்பனை, மகனை, புருசனை, அண்ணன் தம்பியை, மாமன் மச்சானை மனு போட்டு பார்க்க வந்த கூட்டம். பொம்பளைக கூட்டம், சரிக்குச் சமமா கலந்து நிக்குது. வாக்கப்பட்ட கொடுமைக்கு… புருசன்மாரை வந்து பார்க்கணுமில்லெ..?

அறுத்துப் போட்ட ஆட்டு ரத்தம், தரை யிலே உறைஞ்சு கெடக்குற மாதிரி, எல்லா மூஞ்சியிலும் இறுக்கம்… கவலை..! எந்த மூஞ்சியிலும் சந்தோசத்தைக் காணோம்.

மரத்தடியிலே மொச்சைப் பயறு விக்கிற கிழவிக்கு, அவிச்ச பயறை அளந்து கொடுத்து முடியலெ. ஐஸ் வண்டிக்காரன் வியாபாரம் அனல் பறக்குது.

வேப்ப மரத்தடியிலே பண்டல் பண்டலா… பீடிக்கட்டு, சிகரெட் பாக்கெட்டு. ஜெயிலுக்குள்ளே பீடி, சிகரெட்டுக்குத்தான் பெரும் பஞ்சம். குடிச்சுட்டுத் தூக்கிப் போடுற துண்டு பீடிக்கு… குத்து வெட்டே நடக்கும்.

மனு போட்டுப் பார்க்க வந்த யாரு கையிலேயும் தின்பண்டத்தைக் காணோம். பீடி பண்டல்தான். அதை உள்ளே தள்ளிவிட போலீஸுக்கு அழுகணும். காசைக் கொடுத் தால் கஞ்சாவையே உள்ளே கடத்தலாம்.

கீகாட்டுக் கிழவிகளின் சத்தம்தான் பெருசா கேக்குது.

“ஏப்பா… திருமலை… மனுவை சீக்கிரம் எழுதிக் குடு.”

“கதவு தெறக்குற நேரமாச்சு. உள்ளே இருந்து பிள்ளைக வந்துரும்லே…? ”

மரத்தடி எல்லாம் மனு எழுதுறவன்ங்க உட்கார்ந்திருந் தாலும் திருமலையைச் சுத்திதான் பெருங்கூட்டம். திருமலை கொஞ்சம் நீக்கு போக்கான ஆளு. புருசன் பிள்ளைகளை மனு போட்டு பார்க்க வருகிற சனங்க கிட்டே ஆறுதலா நாலு வார்த்தை பேசுவான். கொடுக்கிற காசை வாங்கிக்கிருவான். கடன் சொல்ற ஆத்தாமாரும் உண்டு.

“அடுத்தவாட்டி ஜெயிலுக்கு வர்றபோது குடுக்கிறேன் திருமலை…”

“ஏன் தாயீ…! இதென்ன கோயிலா… குளமா… நேத்திக்கடன் வச்சு… திரும்பத் திரும்ப வர்றதுக்கு…? ஜெயிலு தாயீ..! இங்கே ஏன் திரும்ப வர்றே…? என் காசே வேணாம். போ… வராதே…” என்பான்.

தோள் உரசத் தொங்கும் தண்டட்டிக் காதுக்கார வருச நாட்டு கிழவிக்கு ஜெயில் பழக்கம் ஜாஸ்தி. அவள் வயசுக்கு அஞ்சாறு கொலைக்கைதிகளைப் பெத்துக் கொடுத்தவள். திருமலையின் அப்பனுக்கே, கிழவி, ஜெயில் வாடிக்கை. வாரத்திலே நாலு நாளு ஜெயில் வாசலை மிதிக்கலேன்னா… கிழவிக்கு அன்னம், தண்ணி சேராது.

புங்கை மரத்தூரில் முதுகு சாய்த்து, சாவகாசமாய் கால் நீட்டி அமர்ந்திருந்தாள் கிழவி. வெத்தலை மெல்லுகிற வாய், பேச்சுத்துணை தேடி, ‘ணம ணம’ங்குது. இடது கைவாக்கில் குத்த வைத்திருக்கும் சின்னூர்க்காரியிடம், ``நீ யாரைப் பாக்க வந்தே..? ” என வலிய பேச்சுக் கொடுத்தாள்.

“என் மகனை…”

“என்ன கேஸு, கொலைக்கேஸா…? ”

சின்னூர்க்காரி முகம் சுழித்தாள். “அட நீ என்ன தாயீ…! என் மகன் கல்யாணம் காச்சி காங்காத பச்சைப்பய. நீயே கூண்டிலே ஏறி சாக்கி சொல்லி… அவனை கொலைக்கேஸுலெ உள்ளே தள்ளிருவே போலருக்கே…! ” கால் சேலையை சுருட்டி, ஒடுங்கி உட்கார்ந்தாள்.
“வேறென்ன கேஸு..?” வெத்தலை வாய் நிறைய கேட்டாள் வருசநாட்டுக்காரி.

“கவுல்ப்பட்டி ஆட்டுக் கிடையிலே ஒரு குட்டியைத் தூக்கியாந்து, உரிச்சு உப்பைத் தடவி தின்னுபிட்டான். குட்டியும்… அப்பிடி ஒன்னும் பெரிய குட்டி இல்லை. ஏழு, எட்டுக் கிலோகூடப் பெறாத பொடிக் குட்டி. இது ஒரு குத்தமாத்தா..? இளந்தாரிப் பயலை பிடிச்சுக் கொண்டு வந்து, மூனு மாசம் உள்ளே தள்ளி, ஜெயிலுக் களி திங்க வச்சுட்டான்ங்க..! காலக் கொடுமை..!” என்றவள், “அது சரி… நீ யாரைப் பாக்க வந்திருக்கே?”

வருசநாட்டுக் காரியை நெருக்கி அமர்ந்தாள் சின்னூர்க்காரி.

கிழவி நிதானமாக ஆரம்பித்தாள்.

“என் பேரன். கொலைக் கேஸு..! ரெட்டைக் கொலை..! நமக்கு எதிரா எவனும் சாக்கி சொல்ல மாட்டான்ங்கிற குருட்டு தைரியத்திலே… பட்டப்
பகல்லே… விளாத்திகுளம் கடைத் தெருவிலே வச்சுப் பண்ணிப்பிட்டான்.”

அவிழ்ந்த மயிரை அள்ளி முடிந்துகொண்டே, “கடைத் தெருவிலே செருப்புத் தச்சுக்கிட்டு இருந்த ஒருத்தன், தைரியமா கூண்டுலே ஏறி சாக்கி சொல்ல… இவனுக்கு ஜென்மம் சொல்லிட்டான்ங்க..! நல்ல காலத்துக்கு… தூக்கு சொல்லலே” வலது கைவாக்கில் வெத்தலை எச்சிலை ‘புளிச்’ எனத் துப்பினாள்.

“அப்படியே சொன்னாலும் கழுதை போய்ச் சேர வேண்டியது தான். போறதும் வர்றதும் நம்ம கையிலேயா இருக்கு? இவனுக்கும் கல்யாணம் ஆகலே. அங்கே… என் பேத்தி, இவனுக்காகக் காத்துக் கெடக்கா. இன்னும் எட்டு வருசம் கழிச்சு ஜெயிலை விட்டு வெளியே வரவும்…” பேசி முடிக்கும் முன், எதிரே கடந்து போனவனைப் பார்த்து, “ஏலேய்… பரமா… நீ என்ன இங்கே வந்தவன்..?” என்றாள்.

கையில் பீடி பண்டலோடு போன பரமன் திரும்பி, “என் பொண்டாட்டி கூடப் பெறந்த மச்சினன் உள்ளே இருக்கான்” என்றான்.
“என்ன பண்ணிட்டு வந்தான்?”

“அது ஒரு கஞ்சா குடிக்கி நாயி..! பஸ்ஸுலெ டிக்கட்டு காசு கேட்ட கண்டக்டரை கத்திட்டே குத்தி இருக்கான்..!”

“பெருங்குடிக்காரன்களும் கத்தியைத் தூக்க ஆரம்பிச்சிட்டீகளாக்கும்..!”

“ஏன்…? எங்க கத்தி எறங்காதாக்கும்? வருசநாட்டுக் கத்திதான் எறங்குமோ..?”

“ஏலேய்… கஞ்சாவைக் குடிச்சுட்டு கண்டக்டரையும் டிரைவரையும் குத்துறது ஒரு காரியமாக்கும்டா? பட்டப் பகல்லே… பஜார்லே வச்சு போட்டான்லே… என் பேரன்... அப்பிடி நாலு பேரை போடு… நீ சரியான ஆம்பளை. அதை விட்டுட்டுப் பேச வந்துட்டான் பேச… பீத்தப் பய..!” வாய்க்குள் இருந்த மிச்ச எச்சிலை உதடு கூட்டி துப்பினாள்.

பரமனுக்கு ‘சுரீர்’ என்றது. “ஏய் கெழவி..! இப்போ எழுதி வச்சுக்கோ… ஊருக்குப் போனதும்… நானே நாலு பேரை போடுறேன். இந்தாரு… பெருங்குடிக்காரன் ஒன் னும் தொத்தப்பய இல்லை. சோத்திலே சுண்ணாம்பை போட்டுத் திங்கிறவன்ங்க” கொடிவால் தூக்கினான்.
பரமனைப் பார்த்து மனு எழுதும் திருமலை கத்தினான். “ஏய்… பரமா… கொஞ்சம் வெலகிக்கோ. பிள்ளத்தாச்சி புள்ள வருது.”
புங்கை மரத்துச் சனமெல்லாம் திரும்பியது.

நிறைசூழி அரியநாச்சியைக் கைத்தாங்கலாய் நகர்த்திக் கொண்டு வந்தாள் பூவாயி கிழவி அரியநாச்சியின் உடம்பு நனைய வியர்வை. அரைக் கண் செருக, தரை தேய்த்து நடந்து வந்தவள், அடி வயிறை வலது கையால் அணைத்திருந்தாள்.

“யாரு… இந்தப் பிள்ளை..!” எல்லாச் சனமும் அகல கண் விரித்தது.

“வா தாயீ… வா. இந்த மரத்திலெ சாஞ்சுக்கோ…” கால் மடக்கி நகர்ந்து, மரத்தூரை கை காட்டினாள் வருசநாட்டுக்காரி.

சின்னூர்க்காரி, பூவாயி கிழவியுடன் சேர்ந்து அரியநாச்சியை தாங்கிப் பிடித்து உட்கார வைத்தாள்.

அரியநாச்சிக்கு நா வறண்டு, மதி கிறங்கியது.

எழுத்து வேலையை அப்படியே போட்டுவிட்டு திருமலை எழுந்து ஓடி வந்தான். “நீ யாரு தாயி..? யாரை பார்க்க மனு போடணும்?” என்றான்.
பூவாயி கிழவி முந்திக்கொண்டு, “எங்கண்ணன்… வெள்ளையத்தேவன். செம்மக் கைதி. இது… அவரு மக… அரியநாச்சி. என் பேரு பூவாயி… எழுதிக்கோ…” என்றாள்.

“அந்த அய்யா மகளா இது..!” அரியநாச்சியை பார்த்து இளகிய திருமலை, “ஜெயிலு மணி அடிக்கிற நேரமாச்சு. இங்ஙனயே இருங்க. நான் மனு எழுதி போட்டுட்டு வர்றேன்” என நகர்ந்தான்.

அரியநாச்சிக்கு அணைவாய் அமர்ந்த வருச நாட்டுக்காரி, “ஏந்தாயீ… நெறை சூழி நீயி..! இந்த வேகாத வெயில்லே இப்பிடி வரலாமா...?” தன் சேலை முந்தானையால் அரியநாச்சியின் முகம் துடைத்து விட்டாள். “கலர் வாங்கியாரச் சொல்றேன். குடிக்கிறியாத்தா..?”

“வேணாம்.”

பூவாயி கிழவியிடம், “எந்தூர் நீங்க?” என்றாள்.

“கெழக்கே… பெருநாழி. எங்கண்ணன் வெள்ளையத்தேவன்… தர்மவான்..! விதி கொண்டு வந்து இப்பிடி விழுத்தாட்டிருச்சு..!”
“அம்புட்டு தூரத்திலே இருந்தா வர்றீக..!” வலதுகை மலர்த்தி வாய் பிளந்தாள்.

“என்ன செய்ய..? இது தாயில்லாப் பிள்ளை. தகப்பன்… ஜென்மக் கைதி. இப்பவோ.. பிறகோன்னு… வயித்துக்குள்ளே பிள்ளை முண்டிக்கிட்டு நிக்குது. பெத்த அப்பன்கிட்டே ஒரு உத்தரவு வாங்கணும். வேகாத வெயிலுலெ காரேறி வந்தோம்.”

பார்வையாளர் பகுதி வாசற் கதவுகளை ஒரு காவலர் அகல திறந்தார். ‘கண கண’ வென, ஜெயில் மணி ஒலித்தது.

சூறாவளி சுழற்றிய சருகுகளாய்… மரத்தடிக் கூட்டங்கள் வாரிச் சுருட்டி வாசலை நோக்கி ஓடின. புங்கை மரத்தடியில், வருசநாட்டுக்காரியைக் காணோம்… சின்னூர்க்காரியைக் காணோம்… பரமனைக் காணோம். திருமலையைத் தவிர யாரையும் காணோம்.

“தாயீ… கேட் தெறந்துட்டாங்க. உங்க மனு உள்ளே போயிருச்சு. அய்யா வந்துருவாரு. மெல்ல எந்திருச்சு போங்கத்தா…”

தூக்கி விட உதவிக்கு நீண்ட திருமலையின் கையை தவிர்த்து, இடது கையூன்றி எழுந்தாள் அரியநாச்சி. பூவாயி கிழவியின் தோள் பற்றி மெல்ல நடந்தாள்.

ஆண், பெண் பேதமில்லாமல் கூட்டம் ஒன்னோடு ஒன்னு இடிச்சுத் தள்ளுது.

பார்வையாளர் பகுதியை நோக்கி நடந்து போகும் அரியநாச்சியையும் பூவாயி கிழவியையும் கண் கலங்க பார்த்துக் கொண்டே நின்றான் திருமலை.

‘இந்தக் கூட்டத்துக்குள்ளே இடிச்சு நெறிச்சுப் போயி, அந்த அய்யாவை, இந்தப் பிள்ளைத்தாச்சியாலே பார்க்க முடியுமா..?’

(சாந்தி... சாந்தி...

x