முடிவற்ற சாலை 13: எழுத்தைப் போற்றுகிறார்கள்


கர்நாடகப் பயணத்தின்போது இரண்டு நினைவு இல்லங்களுக்குப் போயிருந்தேன். ஒன்று ராஷ்ட்ரகவி என அழைக்கப்படும் குவெம்புவின் நினைவில்லம். அது குப்பள்ளி என்ற சிறிய கிராமத்திலுள்ளது. மற்றொன்று புகழ்பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் நினைவாக மைசூரில் உருவாக்கப்பட்டுள்ள நினைவகம்.

இரண்டும் அரசால் உருவாக்கப்பட்டு சிறப்பாகப் பராமரிக்கப்பட்டுவரும் நினைவகங்கள்.

குவெம்பு, தாய்மொழியான கன்னட மொழியில்தான் அனைவரும் கல்வி பெற வேண்டும் என முழக்கமிட்ட கவிஞர். மைசூர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர்.

ஆர்.கே.நாராயண் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து தந்தையின் வேலை காரணமாகக் கர்நாடகத்துக்கு இடம்பெயர்ந்தவர். ஆங்கிலத்தில் மட்டுமே எழுதியவர். இந்திய ஆங்கில எழுத்தாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகிறவர்.

இருவருமே இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மபூஷண் பெற்றவர்கள்.

கர்நாடகத்தில் வரலாற்றுப் பெருமைமிக்க இடங்கள், கலைக்கூடங்கள், கோயில்கள் யாவும் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இலக்கியத்தையும் எழுத்தாளர்களையும் போற்றுவதில் கர்நாடகம் சிறப்பான மாநிலமாகவே இருக்கிறது. கேரளத்தை விடவும் சிறப்பு என்றே சொல்வேன்.

சமீபத்தில் திருச்சூர் சென்றிருந்தபோது புகழ்பெற்ற கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா வீட்டுக்குப் போய் அவரைச் சந்திக்க விரும்பினேன். என்னிடம் அவரது தொடர்பு எண், முகவரி இல்லை. அங்குள்ள புத்தகக் கடைகள். ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் என ஒருவருக்கும் அவரது பெயரோ விவரமோ தெரியவில்லை. நான் தங்கியிருந்த விடுதியின் மேலாளர் அப்படி ஒரு பெயரைக்கூடக் கேள்விப்படாதவர்.

ஆற்றூர் ரவிவர்மா சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர். சிறந்த கவிஞர். கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர். ஆனாலும், ஒருவருக்கும் அவரைப் பற்றி ஒரு தகவலும் தெரியவில்லை.

ஒரு மலையாளப் பத்திரிகையாளர் மூலம் அவரது வீட்டுத் தொலைபேசி எண்ணும் முகவரியும் பெற்றேன். ஆட்டோவில் போனபோது சந்து சந்தாகப் போய்க்கொண்டேயிருந்தது. எது அவரது வீடு என அடையாளம் காண முடியவில்லை. அண்டை அயலார் ஒருவருக்கும் அப்படி ஒரு கவிஞர் இருப்பது தெரியவில்லை. வீடு கண்டுபிடித்துப் போக ஒருமணி நேரமாகிவிட்டது.

பொதுவாகக் கேரளத்தில் இலக்கியவாதிகள் கொண்டாடப்படுகிறார்கள். சகலருக்கும் எழுத்தாளர்கள் பெயர்களைச் சொன்னாலே தெரியும் என்ற பொய் தொடர்ந்து தமிழ்நாட்டில் சொல்லப்பட்டுவருகிறது. அது உண்மையில்லை.

புத்தக வாசிப்பு விகிதம் அதிகம். அரசு எழுத்தாளர்களை ஆதரிக்கிறது. கொண்டாடுகிறது. புத்தகங்கள் நிறைய விற்கின்றன இந்த வகையில் கேரளத்தை நாம் உதாரணமாகச் சொல்லலாம்.

ஆனால், பொதுரசனை என்பது தமிழகம் போலவே கேளிக்கை சார்ந்த விஷயங்களிலும் அரசியல் ஈடுபாட்டிலும்தான் இருக்கிறது. இலக்கியம் வாசிப்பவர்கள் எல்லா மாநிலத்திலும் சிறு பகுதியே.

கர்நாடகத்தில் எழுத்தாளரின் குரலுக்கு எப்போதும் தனியிடம் இருக்கிறது. சிவராம காரந்த் போன்ற மகத்தான படைப்பாளி தீவிர சமூகப் போராளியாக வாழ்ந்திருக்கிறார். கர்நாடகத்தின் கல்விப் புலங்களில் எழுத்தாளர்களுக்கான மரியாதையும் அங்கீகாரமும் உரிய முறையில் கிடைக்கின்றன.

கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் மறைவுக்கு அரசு பொது விடுமுறை அறிவித்தது. இப்போதும் பல்கலைக்கழகத் துணைவேந்தராக எழுத்தாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். முக்கியமான கன்னட எழுத்தாளர்கள் பற்றி ஆங்கிலத்தில் ஒரு இணையதளத்தை அரசே உருவாக்கியுள்ளது. மொழி
பெயர்ப்புக்கு எனத் தனித் துறையை உருவாக்கி முக்கியமான கன்னட நூல்கள், ஆங்கிலத்திலும் பிற இந்திய மொழிகளிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுவருகின்றன.

கர்நாடகத்தில் ஷிமோகா அருகிலுள்ள தீர்த்தஹள்ளிக்கு அருகே அமைந்துள்ள சிறிய கிராமம் குப்பள்ளி. பெங்களூரிலிருந்து 350 கிலோ மீட்டர் தூரம். பசுமையான மலைநாட்டின் காடுகளின் நடுவில் அமைந்துள்ள ஊரது. எங்கு நோக்கினும் பசுமை. சுற்றிலும் மலைகள்.

குவெம்பு என்ற புனைப்பெயரால் அறியப்பட்டவர் கே.வி.புட்டப்பா. அவரது முழுப் பெயர் குப்பள்ளி வெங்கடப்பகௌடா புட்டப்பா. இதுவரை கன்னட மொழியில் எட்டுப் பேர் ஞானபீட விருது பெற்றிருக்கிறார்கள். (தமிழில் இரண்டே இரண்டு பேர். அதிலும் நாம் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறோம்.) இந்த எட்டுப் பேர்களில் முதலாவதாக ஞானபீடம் பெற்றவர் குவெம்பு. இவர் ராமாயணத்தை நவீன கன்னடத்தில் ‘ஸ்ரீ ராமாயணத் தர்சனம்’ என்று எழுதியுள்ளார்.

குவெம்புவின் மகனான பூர்ணசந்திர தேஜஸ்வியும் புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர். சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர்.

குவெம்புவின் வீடு எங்கே இருக்கிறது எனச் சுற்றுபுறத்தில் எங்கே கேட்டாலும் வழிகாட்டுகிறார்கள். பயண வழியில் காரை நிறுத்தித் தேநீர் குடித்தோம். அந்த டீக்கடைக்காரர் குவெம்புவின் வீட்டுக்கு வழி சொன்னதோடு அவரது கவிதை ஒன்றையும் மனப்பாடமாகப் பாடினார். விடுமுறை நாட்களில் நிறைய பேர் அந்த நினைவில்லத்தை வந்து பார்வையிடுகிறார்கள் என்றார் டீக்கடைக்காரர்.

குவெம்பு நினைவில்லத்தின் பெயரே ‘கவிமனே’. அதாவது ‘கவிஞர்களின் வீடு’. மூன்று அடுக்குகள் கொண்ட வீடு. நிறைய தூண்கள் கொண்ட பராம்பரிய வீடு. ஒன்றில் பழைய கால மாட்டுவண்டி ஒன்று காணப்பட்டது. உழவுக் கருவிகளும் அந்த அறையில் இருந்தன.

குவெம்பு தனது ஆரம்பப் பள்ளியை தீர்த்தஹள்ளி என்ற ஊரில் படித்தார். பின்பு கல்லூரிப் படிப்புக்காக மைசூர் சென்று மஹாராஜா கல்லூரியில் எம்.ஏ. படித்தார்.
குவெம்புவின் வீட்டில் அவரது சிறுவயது புகைப்படங்கள் தொடங்கி, பல்வேறு புகைப்படங்களும், கையெழுத்துப் பிரதிகளும், புத்தகங்களும், கடிதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன இந்த வீட்டில்தான் குவெம்பு திருமணம் செய்துகொண்டிருக்கிறார். 

குவெம்புவின் மனைவி பெயர் ஹேமவதி. அந்தப் பெயரை அவருக்கு வைத்தவர் குவெம்பு. இளைஞரான குவெம்புவிடம் உறவினர் ஒருவர் நல்ல பெயர் ஒன்று பெண் குழந்தைக்குச் சூட்ட வேண்டும் என ஆலோசனை கேட்டபோது ஹேமவதி என குவெம்பு சொன்னார். அப்போது பதினாறு ஆண்டுகள் கழித்து அந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறோம் என அவருக்குத் தெரியாது.

குவெம்பு வீட்டின் சமையலறை பழமையானதாக இருக்கிறது. விசித்திரமான புகைப்போக்கி காணப்படுகிறது. குவெம்பு வீட்டின் அருகிலுள்ள சிறிய குன்று ஒன்றின் மீது கவிசாலா எனப்படும் நினைவுத்தூண்கள் கொண்ட இடம் உருவாக்கபட்டுள்ளது. இங்கேதான் குவெம்பு அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பெரிய பெரிய கற்தூண்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த இடம் இங்கிலாந்திலுள்ள ஸ்டோன்ஹென்ஜைப்  போல வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. இங்கே ஒரு பாறையில் குவெம்புவின் கவிதை பொறிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கவிசாலையில் ஆண்டுதோறும் கவிஞர்கள் ஒன்றுகூடி குவெம்புவின் கவிதைகள் குறித்துப் பேசவும் விவாதிக்கவும் செய்கிறார்கள்.
குப்பள்ளி போலின்றி மைசூர் நகரத்தில் சாமுண்டி மலையை நோக்கியதாக உள்ளது யாதவ்கிரி. அங்கே ஆர்.கே.நாராயணுக்கு நினைவில்லம் உருவாக்கப்
பட்டிருக்கிறது.

ஆர்.கே.நாராயணின் இயற்பெயர் ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணசாமி என்பதாகும்.

ஆர்.கே.நாராயணின் தந்தை ஒரு பள்ளி ஆசிரியர். பாட்டிதான் நாராயணை வளர்த்தார். நாராயண் தம்பி புகழ்பெற்ற கார்டூனிஸ்ட் ஆர்.கே.லக்‌ஷ்மண். மைசூர் மகாராஜா கல்லூரியில் தந்தைக்கு வேலை கிடைக்கவே அவர்கள் குடும்பம் மைசூருக்கு இடம் மாறியது. ஆங்கிலக் கல்வி பயின்ற நாராயண் இளவயதிலே கதைகள் எழுத ஆரம்பித்தார். பத்திரிகையாளராகவும் பணியாற்றினார். ராஜம் என்ற இளம் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். 

ஆறு ஆண்டுகள் இனிமையான மணவாழ்க்கை தொடர்ந்து. 1939-ல் ராஜம் இறந்துபோனார். அதன் பிறகு எழுதுவதை மட்டுமே தனது வாழ்க்கையாக மாற்றிக்கொண்டார் ஆர்.கே.நாராயண். ‘சுவாமியும் நண்பர்களும்’ என்ற இவரது முதல் நாவலை வெளியிட மிகவும் சிரமப்பட்டார். பிரபல எழுத்தாளர் கிரஹாம் கிரீன் உதவியால் இந்நாவல் வெளியானது. அதற்குக் கிடைத்த வரவேற்பு அவரைப் புகழ்பெற்ற எழுத்தாளராக உருமாற்றியது. ராஜ்யசபா உறுப்பினராகவும் ஆர்.கே. நாராயண் பணியாற்றியுள்ளார். தனது 94-வது வயதில் சென்னையில் காலமானார்.

ஆர்.கே.நாராயண் இல்லம் இடிந்த நிலையில் இருப்பதை அறிந்த கர்நாடக அரசு முப்பது லட்சம் ரூபாய் செலவு செய்து அதை முறையாகப் பராமரித்துத் தற்போது நினைவில்லமாக உருமாற்றியிருக்கிறது. இங்கே அவரது உடைகள், புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. குவெம்பு இல்லத்தைப் போல நாராயண் இல்லத்துக்குப் பொதுமக்கள் அதிகம் வருவதில்லை. வெளிநாட்டுப் பயணிகளே அதிகம் வருகைதருகிறார்கள். இலக்கிய நிகழ்வுகள் எதுவும் நாராயண் நினைவில்லத்தில் நடப்பதில்லை.

ஆர்.கே.நாராயண் கன்னடர் இல்லை; அவர் ஒரு தமிழர்; ஆகவே நினைவில்லம் அமைக்கக்கூடாது என்ற எதிர்ப்புக் குரல் கிளம்பியது. இல்லை, அவர் மைசூரில் பல ஆண்டுகள் வாழ்ந்தவர். மால்குடி என மைசூரை கற்பனை ஊராகத் தன் எழுத்தில் உருமாற்றியவர். புகழ்பெற்ற எழுத்தாளர். அவரால் கர்நாடகத்துக்குப் பெருமை என உறுதியாக அறிவித்த அரசு அவரது நினைவகத்தை உருவாக்கியுள்ளது.

இந்த அணுகுமுறை நாமும் பின்பற்ற வேண்டிய ஒன்றே. திருநெல்வேலியில் புதுமைப்பித்தனுக்கு இப்படி ஒரு நினைவில்லம் உருவாக்கப்பட வேண்டும். அங்கே ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள், நினைவு நாள் போன்றவற்றை சிறந்த இலக்கிய நிகழ்வாகக் கொண்டாடலாம். இதைச் செய்ய வேண்டியது அரசின் கடமை. நினைவூட்ட வேண்டியது எழுத்தாளனின் வேலை. அதையே நானும் செய்கிறேன்.

(பயணிக்கலாம்...)

x