ஒளி வேகத்தில் பயணிக்க வேண்டுமா?


மனித இனத்துக்கு வேகத்தின் மீது தீராத காதல்! சக்கரத்தைக் கண்டுபிடித்ததில் தொடங்கிய வேகம் மாட்டு வண்டி, குதிரை வண்டி என்று கூடிய வேகம், ரயில், மோட்டார் கார், விமானம், விண்கலங்கள் என்று கூடிக்கொண்டே போகிறது. அதிக வேகத்தை எட்டிய விண்கலம் என்ற சாதனையை 1976-ல் ஹீலியோஸ்-2 விண்கலம் நிகழ்த்தியது.

மணிக்கு 2,52,792 கி.மீ. வேகத்தில் சூரியனை நெருங்கிச் சென்றபோது நிகழ்த்திய சாதனை இது. மனித குலம் வேகத்தில் அடைந்திருக்கும் சாதனை மலைக்க வைத்தாலும் மனிதர்கள்  மிகவும் பொறாமைப்படும் விஷயம் ஒன்றுண்டு.  அதுதான் ‘ஒளி’!
வெற்றிடத்தில் ஒரு நொடிக்குக் கிட்டத்தட்ட 3 லட்சம் கி.மீ. தூரத்துக்கு ஒளி பயணிக்கிறது. சூரியனிலிருந்து நமக்கு ஒளி வந்து சேர 8 நிமிடங்கள் 20 நொடிகள் (500 நொடிகள்) ஆகின்றன. ஆக, நாம் பார்ப்பது 8 நிமிடம் 20 நொடிக்கு முந்தைய சூரியனைத்தான். இரவில் விண்மீன்கள் என்று நினைத்துக்கொண்டு நாம் பார்த்துக் கொண்டிருப்பவையெல்லாம் லட்சம் ஆண்டுகளுக்கு முன்போ கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்போ புறப்பட்டு வந்த விண்மீன்களின் ஒளியைத்தான். இந்தக் கணத்தில் அந்த விண்மீன்கள் அணைந்துகூட போயிருக்கலாம். அப்போது புறப்பட்ட ஒளி இப்போதுதான் நம்மை வந்தடைவதால் அந்த விண்மீன்கள் உயிரோடு இருப்பதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். பிரபஞ்சத்திலேயே அதிக வேகத்தில் செல்வது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் ஒளியே தனது பயணத்துக்கு இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டால் நாம் என்ன செய்வது?

இந்தக் கணக்கைப் பாருங்கள்! சூரிய குடும்பத்துக்கு அருகில் உள்ள விண்மீனான ஆல்பா சென்டோரி பூமியிலிருந்து 4.3 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது (அதாவது அந்த விண்மீனின் ஒளியே நம்மை வந்துசேர 4.3 ஆண்டுகள் ஆகும்). நமது அதிவேக விண்கலத்தில் சென்றால்கூட அந்த விண்மீனை அடைய 70 ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.

அருகில் உள்ள விண்மீனுக்கே இவ்வளவு காலம் ஆகுமென்றால், ஆயிரம் ஒளியாண்டுகள், கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன்கள், விண்மீன் திரள் போன்றவற்றையெல்லாம் கனவில்தான் அடைய முடியும் போல. பேசாமல் அந்த ஒளியின் வேகத்திலேயே பயணித்தால்தான் என்ன?
இங்குதான் ஒரு சிக்கல்! ஐன்ஸ்டைனின் சிறப்பு சார்பியல் கோட்பாட்டின்படி இந்தப் பிரபஞ்சத்தின் உச்சபட்ச வேக எல்லை ஒளியினுடையது. ஒளி வேகத்திலோ அதைத் தாண்டியோ மற்ற பொருட்கள் செல்ல முடியாது. ஏன்? ஏனென்றால், உயிரினங்கள், பொருட்கள் என்று அனைத்துமே நிறை கொண்டவை. அந்த நிறைதான் ஒளியின் வேகத்தில் செல்வதற்குத் தடை போடுகிறது.

x