அரசியலில் மட்டுமல்ல... சினிமா, எழுத்து எனத் தொட்டது அனைத்திலுமே கலைஞர் கருணாநிதி சாதனை நாயகர்தான்! பொதுவாழ்வில் 80 ஆண்டுகள், பத்திரிகையாளராக 75 ஆண்டுகள், கலைத் துறையில் 70 ஆண்டுகள், சளைக்காத சட்டமன்றப் பணிகளில் 60 ஆண்டுகள் என சாதனைகளைக் குவித்த இந்தத் தலைவன், 13 முறை எம்எல்ஏ, நீண்டநாள் முதல்வர் என்று தகர்க்க முடியாத பதிவுகளையும் படைத்தவர். இதோ இப்போது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார்!
‘கட்டிவா என்றால், வெட்டி வரும்’ தொண்டனாக இருந்த கருணாநிதியின் ஒவ்வொரு முன்னேற்றமும் தேடி வந்ததல்ல... போராடிப் பெற்றது. தகுதியும், திறமையும் இருந்தால் தலைவர் பொறுப்பு தானே தேடிவரும் என்று காத்திருந்து ஏமாந்துபோன ஆயிரம் தலைவர்கள் வரலாற்றில் உண்டு. அந்தப் பட்டியலில் இடம்பெற்று விடாமல், சரியான தருணத்தில் மிகச்சரியாய் காய் நகர்த்திய தலைவர் கருணாநிதி.
அறிஞர் அண்ணா மறைந்தவுடன், `ஒழிந்தது திமுக’ என்றுதான் எதிரிகள் நினைத்தார்கள். பெரும் செல்வந்தர்கள், சாதிப்படி நிலையில் உச்சத்தில் இருந்தவர்கள் மத்தியில், தகுதியும் திறமையும் கொண்ட கருணாநிதி அமைதியாக இருந்திருந்தால், 1969-லேயே அவரது பெயர் வரலாற்றில் இருந்து அழிக்கப்பட்டிருக்கும். அவர் முதல்வர் நாற்காலியைத் திரும்பிப் பார்த்தார். பொறுப்பு முதல்வராக இருந்த நெடுஞ்செழியன் எழுந்து இடம்தர வேண்டியதிருந்தது. பொதுச்செயலாளர் பதவியையாவது பெற்றுவிட வேண்டும் என்று நெடுஞ்செழியன் முண்டா தட்டியபோது, அதே பாணியில் ஊதித்தள்ளிவிட்டுஅந்த சிம்மாசனத்தில் கருணாநிதி உட்கார்ந்திருக்கலாம். திமுக எதிரிகளும் அந்த உள்கட்சி சண்டையைப் பார்த்துகைகொட்டிச் சிரித்திருப்பார்கள். ஆனால், அண்ணா இருந்தபோது, சம்பத்துடன் சண்டையிட்டது வேறு, தானே குடும்பத் தலைவனாக இருந்துகொண்டு சண்டையிடுவது வேறு என்று நிதானம் காத்தார் கருணாநிதி.
கட்சியில் பெரும்பாலானவர்கள் “கலைஞரே பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்று விரும்புகிறோம். ஆட்சியும் கட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும். இல்லை யென்றால் காங்கிரஸ் கட்சியின் நிலைதான் கழகத்துக்கும்” என்றார்கள். இந்தக் கருத்தை எம்ஜிஆர் போன்றோரே உரக்கப் பேசியபோதும் கருணாநிதி உணர்ச்சி வசப்படவில்லை. அப்போது நெடுஞ்செழியனைச் சமரசப்படுத்தவும், திமுகவின் எதிர்காலம் கருதியும் தொலைநோக்கோடு ஒரு தீர்வை முன்வைத்தார். “பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு நாவலரே வரட்டும். முக்கிய முடிவுகளை மட்டும் தலைவரையும் கலந்தாலோசித்து எடுக்கும்படி, கட்சியின் சட்டதிட்டங்களை மாற்றி விடலாம்” என்ற யோசனையைச் சொன்னார். கட்சி உடைந்துவிடாதா என்று காத்திருந்தவர்களின் முகத்தில் கரிபூசிவிட்டு, 27.7.1969-ல் திமுக-வுக்குத் தலைவரானார் கருணாநிதி.