நடிப்பில் கில்லி... நகைச்சுவை  வில்லி..!


ஜெமினியின் ‘சந்திரலேகா’ திரைப்படம் முடியும் தருவாயில் இருந்தது. தனது பிரம்மாண்ட கற்பனைக்குப் பணத்தை தண்ணீராய் செலவழித்துப் படம்பிடித்து விட்டார் எஸ்.எஸ்.வாசன். பெரிய நடிகர்கள் முதல் துணை நடிகர்கள் வரை அத்தனைபேரும் ஈடுபாடு மிக்க நடிப்பைத் தந்திருந்தார்கள்.

படத்தில் நான்காவது முக்கியக் கதாபாத்திரத்தை எம்.எஸ்.சுந்தரிபாய்க்குக் கொடுத்திருந்தார் வாசன். சர்க்கஸ் பெண் வேடம். கிராமத்துப்பெண் சந்திராவாக நடித்த டி.ஆர்.ராஜகுமாரிக்கு உற்றதோழியாக மாறி உதவும் கதாபாத்திரம். அண்ணனுக்கு ராஜ்ஜியம் கிடைத்துவிடக் கூடாது என்று கொள்ளைக்காரனாக மாறி, அரண்மனையை ஆக்கிரமித்துக்கொள்கிறார் ரஞ்சன். அவரை வீழ்த்தும் அணியில் ஒருவராக, அரண்மனைக்குள் தந்திரமாக நுழைவார் சுந்தரிபாய். ‘இச்சைகளைத் தீர்க்கும் பச்சைமலைப் பாவை’ என்று கூறிக்கொண்டு, வெடுக்காவும் துடுக்காவும் அவர் வசனம் பேசி நடித்திருந்த விதத்தைக் கண்டு வியந்தார் வாசன். 


சுந்தரிபாயின் நடிப்பில் இயல்பாகவே கிண்டல் கலந்த நளினம் இழையோடியது. அதற்கு இன்னும் கொஞ்சம் சிறப்பு செய்தால் படத்துக்குக் கூடுதல் கவர்ச்சி கிடைக்கும் என்று நினைத்தார் வாசன்.


அந்தச் சமயத்தில் ‘கோனி ஐலேண்ட்’ என்ற ஆங்கிலப் படத்தை பம்பாய் சென்றிருந்தபோது பார்த்தார் வாசன். அதில், நாயகி பெடி கிரெபிள் ஆடியிருந்த கேலியான நடனமும் இசையும் அவரைப் பெரிதும் கவர்ந்துவிட்டன. அதன் தாக்கத்தில் சுந்தரிபாய்க்கு ஒரு பாடல் மற்றும் நடனத்தை உருவாக்கி படத்தில் சேர்க்க முடிவுசெய்தார். ``ஏற்கெனவே படம் நீளமாக இருக்கிறது, இப்போது இந்தப் பாடல் வேறு இடைச்செருகலாக இருக்குமே” என்று தயாரிப்பு நிர்வாகி சொன்னபோது, வாசன் பிடிவாதமாக அந்தப் பாடலைப் படமாக்குவதில் குறியாக இருந்தார்.

x