“ஒண்ணாந்தேதி வரட்டும் அப்பாவுக்கு சம்பளம் வந்ததும் வாங்கித் தரேன்...” குழந்தைகள் எதைக் கேட்டாலும் அறுபதுகளில அநேகம் அம்மாக்கள் சொல்லும் பதில் இதுவாகத்தான் இருக்கும்!
எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே தான் எங்கள் அப்பாவின் ஆபீஸ். அதனால் மாசக் கடைசி நாளின் மதியமே சம்பளம் கவர் எங்கள் வீட்டுக்குள் வந்துவிடும்.
கவரை வாங்கி பெருமாள் மேடையில் வைப்பார் அம்மா. கவர் வருவதற்கு முதல் நாளே வீட்டு பட்ஜெட்டை பென்சிலால் கச்சிதமாய் போட்டு வைத்திருப்பார் அம்மா. மாலையில் நாங்கள் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் மளிகைக்கடை, விறகுக் கடை, எண்ணெய்க் கடை என ஆளுக்கொரு திசையில் பறப்போம். விளக்கு வைக்கும் முன்பாகவே வந்து பாக்கியை வசூலித்துச் சென்று விடுவாள் பால்காரம்மா! இந்த நடவடிக்கைகள் எல்லாமே எங்கள் வீட்டுக்குள் சம்பளக் கவர் வந்துவிட்டதை அக்கம் பக்கத்தினருக்கு அனவுன்ஸ் பண்ணும்!
படிப்பு முடித்து நான் வேலைக்குப் போன அலுவலகத்தில் எழுநூறு பேருக்கு மேல் வேலை செய்தார்கள். மாசக் கடைசி நாளில் எங்கள் அலுவலகத்தில் சம்பளப் பட்டுவாடா வேலை மட்டுமே நடக்கும். ஆறேழு பேர் செக்ஷன் வாரியாகத் தனித்தனியாக அமர்ந்து சம்பளம் போடுவார்கள். ரெவினியூ ஸ்டாம்புக்கு பத்து பைசா எடுத்துச் செல்ல வேண்டும். ராமநாதன் என்ற உஷார் ஆசாமி “சார் போன மாசம் ஸ்டாம்புக்கு இருபது பைசா தந்தேன்... மீதி பத்து பைசா தரவில்லை” என்று இந்த மாச ஸ்டாம்புக்கு அடி போடுவார். சிலர் ``போன மாசத்தைவிட 108 ரூபாய் குறைகிறதே...” என்று கேள்வி கேட்பார்கள். “அதை கணக்கு முடிச்சவர்கிட்டப் போய்க் கேளுங்கண்ணே...” என்பார் பட்டுவாடாவில் இருப்பவர்.