பசித்தோர்க்கு ஒருவேளை உணவு- வள்ளலார் வழியில் ஒரு சேவை!


வடலூரில் இராமலிங்க அடிகளார் மடத்தின் அடுப்புகள் ஓய்வறியாதவை என்பார்கள். அங்கே, பசி என்று வந்தவர்களுக்கு வள்ளலாரின் பக்தர்கள் எந்நேரமும் அமுது படைக்கக் காத்திருக்கிறார்கள். இதோ இங்கே, இராமலிங்கர் வழி நடக்கும் ராம்பிரசாத் வறியவர்களின் இருப்பிடத்துக்கே சென்று அமுது படைக்கிறார்.

நாகர்கோவிலை அடுத்த பாம்பன்விளையைச் சேர்ந்தவர் ராம்பிரசாத். பளிச்சென்று வெண்மை நிற ஆடையில் தெரியும் இவர் இராமலிங்க அடிகளின் கொள்கைகளைப் பின்பற்றுபவர். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற அடிகளின் வார்த்தைகளையே வாழ்வியல் கூறாக தகவமைத்துக்கொண்டவர். இவரது அப்பா மாணிக்கவாசகமும், அம்மா தமிழரசியும்கூட வள்ளலார் பக்தர்கள்தான். இவர்கள் நெசவுத் தொழிலில் இருக்கிறார்கள். ஐடிஐ முடித்துவிட்டு வெளிநாட்டு வேலையில் இருந்த ராம்பிரசாத், அந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு சொந்த ஊருக்கு வந்து பசித்தோருக்கு அமுது படைத்துக்கொண்டிருக்கிறார்.

தினமும் மெஸ்ஸைப் போல பரபரப்புடன் இயங்குகிறது ராம்பிரசாத்தின் வீடு. ராம்பிரசாத்தின் பெற்றோர் தங்களது நெசவுப் பணிகளுக்கு நடுவே புனிதப் பணியாக சமைத்துக் கொடுக்கிறார்கள். சாம்பார், தக்காளி, எலுமிச்சை, தயிர் சாதங்கள், கூட்டாஞ்சோறு என விதவிதமான பொட்டலங்கள் சராசரியாக நாள் ஒன்றுக்கு 200 எண்ணிக்கையில் தயாராகின்றன. அவற்றைத் தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஆதரவற்றோரைத் தேடி புறப்படுகிறார் ராம்பிரசாத்.

தினத்துக்கான இவரது இந்தச் சேவையை உணர்ந்த சேவை உள்ளங்கள் சிலர், தண்ணீர் பாட்டில்களையும் ஆதரவற்றோருக்கு மருந்து, மாத்திரைகளையும் வாங்கித் தருகிறார்கள். இவற்றை எல்லாம் தேவையானவர்களிடம் பத்திரமாய்க் கொண்டு போய்ச் சேர்க்கிறார் ராம்பிரசாத். அப்படியொரு இடத்தில் உணவுப் பொட்டலம் தந்து கொண்டிருந்தவரை நிறுத்திப் பேசினோம். “தொடக்கத்தில் இரண்டு பைகளில் சாப்பாட்டு பொட்டலங்களை எடுத்துக்கொண்டு நடந்தே போய் குடுத்துட்டு இருந்தேன். அப்புறமா சைக்கிள்லயும் அதுக்கப்புறம் டி.வி.எஸ் 50-லயும் போனேன். என்னோட சேவையைப் பார்த்துட்டு நண்பர்கள்தான் இந்த ஆட்டோ வாங்கிக் கொடுத்தாங்க.

x