தலையில்லாமல் கிடக்கும் அஞ்சா நெஞ்சன் சிலை!- திரும்பிப் பார்க்காத திராவிடக் கட்சிகள்!


மைக் இல்லா காலம் அது. கடைசி வரிசையில் நிற்பவருக்கும் கேட்க வேண்டுமே என்று அந்தத் தலைவன் சத்தமாக, உணர்ச்சிப் பிழம்பாகப் பேசிக்கொண்டிருக்கிறார். கூட்டத்தின் நாலாதிசையில் இருந்தும், கற்கள் அவரை நோக்கிப் பாய்ந்து வருகின்றன. அதில் ஒன்று அவரை வலுவாகத் தாக்குகிறது. “எல்லாரும் என்னைய மன்னிச்சிக்கோங்க. இந்த ஊர் நடைமுறை தெரியாமப் பேசிட்டேன்” என்று சொல்லி பேச்சை நிறுத்துகிறார் அந்தத் தலைவர். கூட்டத்தில் சலசலப்பும், ஏளனச் சிரிப்புகளும் எழுகின்றன.

விறுவிறுவெனக் கீழிறங்கியவர், கொஞ்ச நேரத்தில் துண்டு நிறைய கற்களைப் பொறுக்கிக்கொண்டு மீண்டும் மேடையேறுகிறார். “இந்த ஊர் நடைமுறைப் படி, கூட்டம் கேட்பவர்கள் கற்களை  எறிந்துகொண்டே கேட்பது வழக்கம் போல. சரி, அவர்கள் எறிந்துகொண்டே  கேட்கட்டும், நானும் எறிந்துகொண்டே பேசுகிறேன்” என்று சொன்னதோடு, செய்யவும் செய்கிறார். கல்லெறிந்தவர்கள் பின்னங்கால் பிடறியடிக்க ஓடி மறைகிறார்கள்.

திராவிட நாடு அமைந்தால், அதன் முதல் ராணுவ அமைச்சர் இவர்தான் என்று போற்றப்பட்ட, அஞ்சாநெஞ்சன் தளபதி பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமிதான் அந்தத் தலைவர். மதுரையை அடுத்த வாவிடைமருதூரில், அவர் வாழ்ந்த வீடு சிதிலமடைந்து கிடக்கிறது. அவரது சிலை உடைக்கப்பட்டு, மண்ணில் புதைந்து கிடக்கிறது.

விஷயத்தைக் கேள்விப்பட்டு அந்த ஊருக்குப் போனோம். “பட்டுக்கோட்டை அழகிரியா? முன்னாள் யூனியன் சேர்மன் பாண்டி வீட்டுக்குப் போங்க. அவகளுக்குத் தான் அவரைப் பத்தி நல்லாத் தெரியும்” என்றார்கள். 1970-களில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக இருந்த பாண்டி, உள்ளூர் பள்ளிக்கூடத்துக்கு ‘அழகிரி ஆரம்ப பாடசாலை’ என்று பெயர் சூட்டியதுடன், ஊர் மந்தையில் அழகிரிசாமிக்குக் கம்பீரமான சிலையையும் அமைத்தவர்.

x