திருநெல்வேலி அல்வா, திருப்பதி லட்டு, கோவில்பட்டி கடலைமிட்டாய் என்று சாப்பிடும் உணவு வகைகளில் ஆரம்பித்து மதுரை மல்லி, காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமக்காளம் என நாம் பயன்படுத்தும் சில பொருட்களுக்கு தனித்துவமான ஒரு அடையாளம் இருக்கிறதல்லவா, அந்த அடையாளத்தை அதிகாரபூர்வமாக அளிப்பதுதான் புவியியல் சார் குறியீடு (Geographical indication).
இந்தியாவில் புவியியல் சார் குறியீடுகள் சட்டம், (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம்) ஆண்டு 1999-ல் நிறைவேற்றப்பட்டது. இதற்கான விதிமுறைகள் 2002-ல் வகுக்கப்பட்டு, 2003 செப்டம்பரில் இருந்துதான் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. மத்திய அரசின் வணிகவியல் துறையின் கீழ் இயங்கும் அறிவுசார் சொத்துரிமைக் கழகம்தான் புவியியல் சார் குறியீட்டை வழங்கிவருகிறது. அதற்கான இந்திய அளவிலான அலுவலகம் சென்னை கிண்டியில்தான் அமைந்துள்ளது.
இதுவரை அதிகமான பொருள்களுக்குப் புவியியல் சார் குறியீடுகளை வாங்கிய மாநிலங்கள் வரிசையில் கர்நாடகம், மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. இவற்றில் கர்நாடகம், இதுவரை 35 பொருள்களுக்குப் புவியியல் சார் குறியீடு பெற்றுள்ளது. இவற்றில் உற்பத்திப் பொருள்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளன. மகாராஷ்டிரா, விவசாயப் பொருள்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் புவியியல் சார் குறியீடுகளைப் பெற்றுள்ளது.
வெளிநாடுகளில் இத்தாலி, மெக்சிகோ, பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, பெரு உள்ளிட்ட நாடுகள் சில புவியியல் சார் குறியீடுகளை நம்மிடமிருந்து பெற்றுள்ளன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை மதுபான வகைகள்தான். தமிழகம் உணவுப் பொருள்கள், உற்பத்திப் பொருள்கள் மற்றும் கலைப் பொருள்கள் எனக் கலவையாக மொத்தம் 24 பொருள்களுக்கு இதுவரை புவியியல் சார் குறியீடுகளைப் பெற்றுள்ளது.