போற்றுதலுக்குரிய பயணம்!


சுதந்திர இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவர், ஒரு நீண்ட வரலாற்றின் மாபெரும் அங்கம் என்பதைத் தாண்டி அரசியல் சாதனையாளர் என்றும் கருணாநிதியைச் சொல்லலாம். இந்திய அரசியலில் அவர் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் எவராலும் எட்ட முடியாதவை.

கருணாநிதியின் சட்டமன்ற வாழ்க்கை அறுபதாண்டுகளைக் கடந்தது, அவற்றில் உச்சம் தொட்ட ஒன்று. திமுக எனும் பேரியக்கத்தின் தலைவர் பொறுப்பில் ஐம்பதாண்டுகளைத் தொட்டது அடுத்த தொடர்ச்சி. எல்லாவற்றிலும் சாதி ஆதிக்கம் செலுத்தும் ஒரு நாட்டில் எண்ணிக்கை பலமோ, சமூக ஆதிக்கமோ இல்லாத கீழ்மட்ட சமூகம் ஒன்றிலிருந்து வந்து, பொதுவாழ்வில் சாதிக்கு அப்பாற்பட்டவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு, எல்லாச் சமூகங்களையும் அரவணைத்து தன் அரசியல் வாழ்வில் இதை அவர் சாதித்தவர் என்பதுதான் இங்கே முதன்மை பெறுகிறது.

திமுக தலைவராக கருணாநிதி பொறுப்பேற்ற தருணம் அத்தனை இலகுவானது அல்ல. அண்ணாவின் மறைவோடு கட்சியே சிதைந்துவிடும் என்று அஞ்சியவர்கள் உண்டு. பெரியாருக்கும்கூட அப்படியொரு கலக்கம் இருந்தது என்பது கருணாநிதி மேற்கொண்ட பயணம் எவ்வளவு சவாலானது என்பதைச் சொல்லும்.

திமுகவை மாநிலத்தைத் தாண்டி மத்திய ஆட்சியிலும் பங்கெடுக்கும் கட்சியாக வளர்த்தெடுத்தார் கருணாநிதி. மாநிலக் கட்சிகளாலும் இந்தியாவை ஆள்பவரைத் தீர்மானிக்க முடியும் – மத்திய ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க முடியும் என்ற நிலையை உருவாக்கினார். நெருக்கடிநிலைக் காலகட்டம்போல நாட்டில் கருப்பு நாட்கள் சூழ்ந்த தருணங்களில் எல்லாம் நம்பிக்கைக்குரிய ஜனநாயகத் தலைவராக அவர் பார்க்கப்பட்டார்.

x