முடிவற்ற சாலை 12: சல்லிவன் நினைவகம்


ஊட்டிக்குச் செல்லக்கூடியவர்கள், ‘பொட்டானிக்கல் கார்டன்’, மலை ரயில், தொட்டபெட்டா சிகரம், ஊட்டி ஏரி எனச் சுற்றுலாப் பயணிகளுக்கான ஐந்தாறு இடங்களுடன் தங்கள் பயணத்தை முடித்துக்கொள்கிறார்கள். ஆண்டுக்குப் பல்லாயிரம் பேர் வந்து போகும் ஊட்டியில் அதை உருவாக்கிய ஜான் சல்லிவன் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும். அவருக்கு கோத்தகிரியில் ஒரு நினைவகம் இருக்கிறது.

ஆண்டுக்கு ஆண்டு உதகமண்டலம் அதிக அளவில் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு உள்ளாகிவருகிறது. தனியார் ஆக்கிரமிப்புகளும், சுற்றுலாப் பயணிகளால் உருவாகும் குப்பைகளும், வாகனப் புகை காரணமாக உருவாகும் மாசுபாடும்தான் இந்தச் சீர்கேட்டுக்குக் காரணம்.

மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாப்பதற்காகச் சுற்றுச்சூழல் இயக்கங்கள் பலவும் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றன. ஆனால், சுற்றுச்சூழல் குறித்த கவனம் சுற்றுலாப் பயணிகளிடம் உருவாகவில்லை. கோடைக் காலத்தில் ஊட்டி சூறையாடப்படுகிறது என்பதே நிஜம்.

எத்தனையோ திரைப்படங்களின் பாடல் காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஊட்டியிலே பிறந்து வளர்ந்த மக்களின் பிரச்சினைகளையும் அந்த நகரின் வாழ்க்கை முறையையும் பற்றிப் பேசும் தமிழ்த் திரைப்படம் இதுவரை உருவாக்கப்படவில்லை.

ஊட்டியை பாலுமகேந்திரா மிக அற்புதமாகப் படமாக்கியிருப்பார். இயற்கை ஒளியில் அவர் காட்டிய காட்சிகள் நேரில் சென்றாலும் நம்மால் காண முடியாதவை. திரைப்படங்களில் ஊட்டி காட்டப்பட்ட அளவுக்கு இலக்கியத்தில் பதிவுகள் இல்லை. ஊட்டியின் முழுமையான வரலாறு இன்று வரை எழுதப்படவில்லை.
ஊட்டியின் பாரம்பரியப் பெயரான ‘ஒத்தக்கல்மந்து’ என்பது தொதுவ மக்களின் சொற்றொடர். அதை உதகமண்டலம் என ஆட்சியாளர்கள் பெயர் மாற்றம் செய்தார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் 18 வகையான மலைவாழ் மக்கள் வாழ்கிறார்கள். தோடர்கள் தாம் வாழும் இடத்தை மந்து என்று கூறுகிறார்கள், எருமை மாடுகளை வளர்ப்பதே இவர்களின் முக்கிய வேலை. தோடப் பெண்கள் துணிமணிகளில் பூ வேலைப்பாடு செய்வதில் கைதேர்ந்தவர்கள். ஆண்கள் மர வேலையில் விற்பன்னர்கள்.

இவர்களைப் போலவே படுகர்கள் எனப்படும் மலைவாழ் மக்கள் படுகு மொழி பேசுகிறார்கள். இந்த மொழிக்கு எழுத்து இல்லை. படுகர் இனம், தனித்துவமான பல கலாச்சாரக் கூறுகளைக் கொண்டுள்ளது. அதில் ஒன்று அவர்களின் பாரம்பரிய நடனம். திருமணம், திருவிழா என எந்த விஷேச நிகழ்வாக இருந்தாலும், பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்வது இவர்களின் வழக்கம்.

ஜான் சல்லிவன் 1815 முதல் 1830 வரை பிரிட்டிஷ் அரசின் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். இவரால் 1819-ம் ஆண்டுவாக்கில் நீலகிரி மலை கண்டறியப்பட்டது.

1804-ம் ஆண்டு சென்னை கிழக்கிந்திய நிறுவனத்தில் எழுத்தராக வேலைக்குச் சேர்ந்தவர் சல்லிவன், தனது கடின உழைப்பால் உயர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியாளராக உயர்ந்தார். பின்பு அவர் கோவை மாவட்டத்தின் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார்.

12-ம் நூற்றாண்டில் ஹொய்சாளர்கள் நீலகிரி மலையை ஆட்சி புரிந்தனர். பின்னர், திப்பு சுல்தானின் ஆளுகைக்கு அந்த மலை உட்பட்டது. மைசூர் யுத்தத்தில் திப்பு தோற்றுப்போனதை அடுத்து நீலகிரி ஆங்கிலேயர் வசமானது. 18-ம் நூற்றாண்டிலிருந்து நீலகிரியை ஆங்கிலேயர்கள் ஆட்சிபுரியத் துவங்கினார்கள்,1819, பிப்ரவரி மாதம் 22-ம் நாள், கோவை மாவட்ட ஆட்சியரான சல்லிவன், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இயற்கை ஆர்வலரான ழான் பத்தீஸ்ட் லூயியுடன் இணைந்து , படகா இன வழிகாட்டியின் உதவியோடு உதகமண்டலத்தை அடைந்தார். அதன் குளிரும், அழகிய நிலப்பரப்பும் அவரை வியப்புக்குள்ளாக்கியது, மூன்று வார காலம் அப்பகுதியைச் சுற்றிப்பார்த்த சல்லிவன் அங்கேயே கல்வீடு ஒன்றையும் கட்டிக்கொண்டார்.

அவரது முயற்சியால்தான் நீலகிரியில் மாற்றங்கள் உருவாகத் தொடங்கின. சுவிட்சர்லாந்தின் சீதோஷ்ண நிலையை ஒத்த இடம் ஊட்டி என்பதாக சல்லிவன் கடிதம் ஒன்றில் குறிப்பிடுகிறார். இதன் காரணமாக பிரிட்டிஷ் ராணுவத்தின் பயிற்சி முகாம் ஒன்று உதகமண்டலத்தில் உருவாக்கப்பட்டது.

மலைவாழ் மக்களின் உதவியால் சல்லிவன் ஊட்டியைச் சிறந்த மலைவாழிடமாக உருமாற்றினார்.

தோடா மக்களிடமிருந்து ஒரு ஏக்கர் ஒரு ரூபாய் விலைக்கு நிலத்தை விலைக்கு வாங்கி ஸ்டோன் ஹவுஸ் எனப்படும் பிரம்மாண்டமான வீடு ஒன்றை சல்லிவன் கட்டினார். அதுதான் ஊட்டியின் முதல் ஐரோப்பியர் வீடு. அவரைத் தொடர்ந்து பிரிட்டிஷ் அலுவலர் பலரும் ஊட்டிக்குக் குடியேறினார்கள் நிறைய வெள்ளைக்காரக் குடியேற்றங்கள் துவங்கின, புதிய தரைவழிப்பாதை உருவாக்கப்பட்டது.

தனது குடியிருப்பை ஒட்டி அவர் அழகிய தோட்டத்தை உருவாக்கினார். நீலகிரியில் உருளைக் கிழங்கு, முட்டைக்கோஸ், முள்ளங்கி, கேரட் போன்றவற்றைப் பயிரிடுவதற்கு ஏற்பாடுகள் செய்தார். நீலகிரியில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கியதில் சல்லிவனுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. பல்வேறு வகையான வண்ண மலர்கள், பழமரங்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டு ஊட்டியில் வளர்க்கப்பட்டன. சல்லிவன் முயற்சியாலேயே ஊட்டி ஏரி உருவாக்கப்பட்டது,
ஜான் சல்லிவன் தனது முதல் பங்களாவை கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் அமைத்தார். 

இடிந்த நிலையில் இருந்த அந்த வீடு சில ஆண்டுகளுக்கு முன்பு புனரமைக்கப்பட்டு சல்லிவன் நினைவகமாக மாற்றப்பட்டுள்ளது. சிவப்பு வீடு என அழைக்கப்படும் இந்தக் கட்டிடம் முக்கியமான நினைவுச்சின்னமாகும் ஐந்து ஏக்கர் பரப்பிலுள்ள இந்த இடம் ஊட்டியின் வரலாற்றில் முக்கியமானது. இங்கே தங்கியிருந்த சல்லிவன் பிரிட்டிஷ் கவர்னர் தாமஸ் மன்றோவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இந்த மலையின் முக்கியத்துவம் பற்றிச் சிறப்பாக எழுதியிருக்கிறார். அந்தக் கடிதம் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. சல்லிவன், நீலகிரி மலையில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம் பார்லியை அறிமுகம் செய்து அதைப் பயிரிடச் செய்தார். அதனால் பார்லி கஞ்சி இன்றும் அவரது பெயரால் சல்லிவன் கஞ்சி என்றே அழைக்கப்படுகிறது.

சல்லிவன் மனைவி மகள் இருவரும் ஊட்டியில்தான் இறந்தார்கள். அவர்களின் கல்லறை அங்கே இருக்கிறது. சல்லிவன் வைத்த ஓக் மரம் 150 வருஷங்களைக் கடந்து இன்றும் உதகமண்டலத்தில் உறுதியோடு நிலைத்து நிற்கிறது.

சல்லிவன் மியூசியத்தில் அவர் எழுதிய கடிதங்கள், நினைவுப்பொருட்கள், அந்தக் கால ஊட்டியின் புகைப்படங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஊட்டியில் ரயில்பாதை அமைக்கப்பட்ட புகைப்படங்களைக் கண்டபோது மனது சிலிர்ப்படைந்தது.

சல்லிவன் நினைவகத்தைக் காணும்போது எனக்குக் கவிஞர் சுகுமாரன் எழுதிய ‘வெலிங்டன்’ நாவல் நினைவில் வந்தது. அந்த நாவலில் ஜான் சல்லிவன் பற்றி சுகுமாரன் சிறப்பாக எழுதியிருக்கிறார். குறிப்பாக, சல்லிவன் மனநிலையை விவரிப்பதுபோல எழுதப்பட்ட இந்த வரிகள் மறக்க முடியாதவை.

“மனிதர்களை ஜெயிப்பது போல இயற்கையை ஜெயிப்பது அவ்வளவு எளிதில்லையா? அதன் வசீகரம் புதிரானதா? விளங்கிக்கொள்ள நெருங்கும்போதெல்லாம் புதிர் இன்னும் அடர்த்தியாகிறதா? இந்த மலையும் வனங்களும் அப்படியான மர்மங்களை ஒளித்து வைத்திருக்கின்றனவா? அந்த அகங்காரம்தான் மலை மடிப்புகளுக்குள் நுழைந்து பார்க்க முடியாமல் பயமுறுத்துகிறதா?”

சல்லிவன் மியூசியம் அவசியம் காண வேண்டிய ஒன்று. அதிலுள்ள கடிதங்களும், ஊட்டியைப் பார்வையிட்ட முக்கியப் பிரமுகர்கள், கவர்னர் ஜெனரல்களின் புகைப்படங்களும், குறிப்புகளும் எழுதப்படாத கதைகளைச் சொல்கின்றன

அடுத்த முறை ஊட்டிக்குச் செல்லும்போது ஜான் சல்லிவன் நினைவகத்துக்குச் சென்றுவாருங்கள். அவர் நாம் நினைவு கொள்ள வேண்டிய முக்கியமான மனிதர்.

(பயணிக்கலாம்...)

x