வருமானம் வந்த வழியையும் சொல்லுங்கள்!


வருமான வரித்துறையின் தொடர் சோதனைகள் மீண்டும் தமிழகத்தை மையம் கொண்டிருக்கின்றன. போகும் இடமெல்லாம் கிலோ கணக்கில் தங்கம், கோடிக் கணக்கில் பணம் என அள்ளிக்கொண்டிருக்கும் வருமான வரித்துறையினர், “அத்தனையும் கணக்கில் காட்டப்படாத வருமானம்” என்கிறார்கள்.

இதற்கு முன்பும் பலமுறை இப்படிப் பல இடங்களில் சோதனைகள் நடத்தி பணம், நகைகளையும் ஆவணங்களையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றி யிருக்கிறார்கள். அவர்களது கணிப்புப்படி அவையும் கணக்கில் வராத சொத்துகள் தான். என்றாலும் இந்த நடவடிக்கைகள் எல்லாமே ஒன்றிரண்டு நாள் தலைப்புச் செய்திகளோடு ஓசையின்றி அடங்கி விடுகின்றன!

சோதனைகளில் கைப்பற்றப்படும் சொத்து விவரங்களைக்கூட வெளிப்படையாக சொல்ல மறுக்கும் வருமான வரித்துறையினர், கைப்பற்றப்பட்ட சொத்துகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் கணக்குக் காட்டினார்களா... அந்த வழக்குகள் எப்படி பைசல் பண்ணப்பட்டன என்பது குறித்தும் இதுவரை வாய் திறந்ததில்லை. எதற்காக இந்த மூடு மந்திரம்?

இது ஒருபுறமிருக்க, வருமான வரித்துறை கைப்பற்றும் சொத்துகள் கணக்கில் காட்டாத வருமானம் என்றால், அவை வந்த வழி எது என இதுவரை யாரும் கேள்வி கேட்டதில்லை. வருமான வரித்துறையினரைப் பொறுத்தவரை, கணக்கில் காட்டாமல் மறைத்த வருமானத்துக்கு அபராதம் செலுத்திவிட்டால் வழக்கை முடித்து விடுவார்கள். இது எப்படி சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்..? அப்படியானால், திருடிய பொருளைத் திருப்பித் தந்துவிட்டால் திருடனைத் தண்டிக்காமல் விட்டுவிடலாமா?

x