போராளிகளுக்கும் இலவசம்- பட்டையைக் கிளப்பும் கேரளத்து சே குவேரா!


ஆலப்புழா நகரின் சுங்கம் ஆட்டோ ஸ்டாண்ட் அது. 74 வயதான ஜேம்ஸ் இங்கிருந்து தான் ஆட்டோ ஓட்டுகிறார். அவரது இந்த இயற்பெயரை ஜேம்ஸ் மட்டுமல்ல, அந்தப் பகுதிவாசிகளே மறந்து பல ஆண்டுகள் ஆகின்றன. ”சே குவேரான்னு கேளுங்க தம்பி... அப்படின்னாத்தான் தெரியும்” என்கிறார்கள் சக ஓட்டுநர்கள். காரணம் ஜேம்ஸின் தோற்றம் அப்படி!

மிக நீளமாக முடி வளர்த்து, சே குவேராவைத் போன்றே தொப்பியும் வைத்திருக்கிறார் ஜேம்ஸ். ஒரு சவாரிக்குச் சென்று விட்டு வந்தவரை ஸ்டாண்டிலேயே ஓரம் கட்டிப் பேசினேன். ``கடந்த பத்து வருசமா இதுதான் நம்ம கெட்டப். எங்க அப்பா குஞ்சச்சல், அதிதீவிர இடதுசாரி சிந்தனையாளர். அதனால் தான் வயலாறு, புன்னப்புரா போராட்டக்களங்களில் கடுமையா தாக்கப்பட்டாங்க. அவர் வழியில நானும் கம்யூனிஸ்ட்தான். சின்னவயசுல இருந்தே புரட்சியாளர் சே குவேராவை ரொம்பப் பிடிக்கும்.
பள்ளிக்கூடத்துக்கு போய் பெருசா படிக்கலை. ஆனா, வெளியில் புத்தக வாசிப்பு கூடுதல். நல்லா பாடுவேன். கீபோர்டுகூட வாசிப்பேன். ஆட்டோ நம்ம வயித்துப் பிழைப்புக்காக.

ஒரு சமயம், கியூபா நாட்டுல இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் சிலபேரு என்னைப் பார்த்தா சே குவேரா சாயல்ல இருக்கறதா சொன்னாங்க. அது எனக்கு ரொம்பப் பெருமையா இருந்துச்சு. அதுலருந்து நானும் அவரை மாதிரியே முடி வளர்த்து, தொப்பி வைக்க ஆரம்பிச்சேன். இப்போ, அதுவே நம்மளோட அடையாளமாகிடுச்சு. கியூபாவுல இருந்து வந்தவங்க ஊருக்குப் போய் என்னைப் பத்தி நண்பர்களிடமும் சொல்லிருக்காங்க. இப்பவும் கியூபாவுல இருந்து வர்ற சுற்றுலாப் பயணிகளில் சிலபேரு ஆட்டோ ஸ்டாண்டுக்கு என்னைய தேடி வந்து செல்ஃபி எடுத்துட்டுப் போறாங்க. எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாததால இந்த வயசுலயும் சே குவேரா கெட்டப்ப தக்க வச்சுக்கமுடியுது.

என்னோட ஆட்டோவுல வர்றவங்க விருப்பப்பட்டாங்கன்னா அவங்களுக்கு சே குவேரா வாழ்க்கையைச் சொல்லுவேன். ஸ்கூல் சவாரிக்குப் போறப்ப சின்னக் குழந்தைங்க வாய் நிறைய ‘சே குவேரா மாமா’ன்னு கூப்பிடுவாங்க. எங்க போயி நின்னாலும் என்னோட இந்த கெட்டப்புக்கு தனி மரியாதை கிடைக்குது. தோற்றத்தையும் தாண்டி, உள்ளத்துலயும் அவரைப் போல் இருக்க முயற்சி செஞ்சுட்டு இருக்கேன். நம்ம ஆட்டோவில் பிரசவத்துக்கு மட்டும் இல்ல…போராட்டக்களத்துக்கு செல்லும் போராளிகளுக்கும் இலவசம்தான்” என்றபடியே ஆட்டோவை முடுக்கினார் கேரளத்து சே குவேரா!

x