வாழ்க்கையில் ஒருவர் எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளார் என்பதை கணிக்கும் அளவீட்டுக் கருவி பணம். பணம் இல்லாவிட்டால் எதுவும் இல்லை என்ற நிலையில், நம் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே கல்வியுடன் பணத்தைப் பற்றிய புரிதலையும், அதை எப்படி கவனமாகக் கையாள வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்.
4 வயது குழந்தையிடம் போய் பணம் எப்படி வருகிறது என்று கேட்டால், “ரோட்ல இருக்கிற ஏசி ரூமுக்குள்ள ஒரு மெஷின் இருக்கு. அதுக்குள்ள அப்பா ஒரு கார்டை போடுவாரு. அப்புறம் பணம் தட்டினதும் அந்த மெஷின்ல இருந்து பணமா கொட்டும்” என்பதுதான் பதிலாய் வரும். அவர்களைப் பொறுத்தவரை பணம் ஈட்டுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஏடிஎம்மில் ஒரு கார்டைச் சொருகினால் அடுத்த நிமிடமே பணம் கொட்டிவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி எளிதில் கொட்டும் பணத்தை வைத்து, நாம் கேட்டதையெல்லாம் அப்பா வாங்கிக் கொடுப்பது எளிதான விஷயம் என்பதும் அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அவர்களின் மொழியிலேயே...
எனவேதான், இந்த அறியாப் பருவத்திலிருந்தே நாம் குழந்தைகளுக்குப் பணத்தைப் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியம். அவர்கள் 1, 2, 3 என்று துல்லியமாக எண்ண ஆரம்பிக்கும் காலத்தில் இருந்தே அவர்களிடம் ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் கொடுத்து எண்ணுவதற்குப் பழக்க வேண்டும். குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுக்குப் பணம், மதிப்பு வாய்ந்த பொருளாக இருக்காது. சாக்லேட்களும் பொம்மையும்தான் அவர்களுக்கு மதிப்பு வாய்ந்த விஷயங்கள். அதனால், அவர்களின் பாதையிலேயே சென்று பணத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
உதாரணமாக 100 ரூபாயின் மதிப்பைப் பற்றி அவர்களுக்கு விளக்க, “உனக்கு ரொம்ப பிடிச்ச சாக்லேட்டோட விலை 5 ரூபாய். 100 ரூபாய் இருந்தா அதேபோல 20 சாக்லேட்களை வாங்கலாம்” என்று விளக்கலாம். அப்படியே ஏடிஎம் மிஷினில் இருந்து சும்மா பணம் கொட்டாது என்பதையும், வேலைக்குப் போய் வங்கியில் பணத்தைப் போட்டால்தான் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும் என்பதையும் அவர்களிடம் விளக்க வேண்டும். -இது முதல் கட்டம்.