அரேபிய ரோஜா 21: ராஜேஷ் குமார்


ரத்தச் சகதியில் மல்லாந்து விழுந்து உயிரை விட்டிருந்த நிஷாவைப் பார்த்து சர்புதீன், அப்சல், ஹயாத், கெளசிக் நான்குபேரும் நிலைகுலைந்துபோனவர்களாய், கிலி பரவிய முகங்களோடு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

சர்புதீன் மண்டியிட்டு உட்கார்ந்து நிஷாவின் உடலை மெல்ல அசைத்தான். மார்பில் தேங்கியிருந்த ரத்தம் ஒரு பக்கமாய் வழிந்தது.
ஹயாத் ஆவேசமானான். “சர்புதீன்... அந்த மஹிமா இதே இடத்துலதான் இருக்கா. அவளை விடக் கூடாது. ஏதோ ஒரு இடத்திலிருந்து ஒளிஞ்சு நின்னுகிட்டு ‘ஜீரோ நாய்ஸ்’ பிஸ்டலால நிஷாவை சுட்டிருக்கா. நாம யாருங்கிறத அவளுக்குக் காட்டியாகணும். கனடாவில் இருக்கிற அவளோட வுட்பி சகாதேவை இந்த நிமிஷமே போட்டுத்தள்ளணும். அந்த சகாதேவை ஃபாலோ பண்ணிட்டு இருக்கிற நம்ம ஆள் ஜான் ஸ்மித்துக்கு போன் பண்ணி ‘ எஸ்’னு சொல்லு. அவன் நாயைச் சுடுற மாதிரி சுட்டுத் தள்ளட்டும்.’’

சர்புதீன் உடனே தன் செல்போனை எடுத்து ‘வாட்ஸ் அப்’ புக்குப் போய் ஜான் ஸ்மித்தைத் தொடர்புகொள்ள முயன்றான். அடுத்த விநாடியே டிஸ்ப்ளேயில் சிவப்பு நிற எழுத்துகள் அரபு மொழியிலும் ஆங்கிலத்திலும் ஒரு வாக்கியமாய் மாறி மெதுவாய் ஊர்வலம் போயிற்று.
SOMETHING WENT WRONG
PLEASE TRY AGAIN
சர்புதீன் எரிச்சலாகி மறுபடியும் மறுபடியும் செல்போன் திரையைப் பதற்றமாய்த் தேய்த்தான். அப்சல் பயம் அடைத்துக்கொண்ட குரலில் கேட்டான்.
‘‘என்ன... ஸ்மித் கிடைச்சானா?’’
சர்புதீன் வியர்வை பூத்த முகமாய் நிமிர்ந்தான்.
‘‘நெட்வொர்க் இல்லை. சிசிடிவி காமிராக்களை முடக்கியிருக்கிற அதே ஜாமர்தான் இந்த செல்போன் நெட்வொர்க்கையும் ஊமையாக்கியிருக்கு.’’
ஹயாத், கெளசிக், அப்சல் மூவரும் தங்களுடைய செல்போன்களை எடுத்து ஜான் ஸ்மித்தைத் தொடர்புகொள்ள முயன்றார்கள். முடியாமல் போகவே பதற்றத்தின் விளிம்பில் தத்தளித்தவர்களாய்க் கலவரம் பரவிய பார்வைகளைப் பரிமாறிக்கொண்டார்கள்.
கெளசிக் திகில் கலந்த திக்கலான குரலில் பேசினார். “மஹிமாவைக் குறைச்சு எடைபோடாதீங்க. அவ சாதாரண பொண்ணு கிடையாதுன்னு நான் ஆரம்பத்திலிருந்தே உங்க மூணு பேர்கிட்டையும் அடிக்கடி சொல்லிட்டு வந்திருக்கேன். ஆனா, நீங்க அதை சீரியஸாய் எடுத்துக்கலை. இப்ப அவ இந்த இருட்டு பங்களாவுக்குள்ள ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பிச்சுட்டா. அவ இதே பங்களாவில் ஏதோ ஒரு இடத்தில் இருந்து நம்ம நாலு பேரையும் பார்த்துட்டு இருக்கா. ஆனா, நமக்கோ அவ எந்தத் திசையில் இருக்கான்னுகூடத் தெரியாது.’’
கெளசிக் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, கீழே முதல் மாடியில் ஒரு பொருள் கீழே விழுந்து உடையும் சத்தம்.
சர்புதீன் தன் கையில் இருந்த பிஸ்டலை உயர்த்திப் பிடித்துக்கொண்டு ஓட, மற்றவர்கள் அதே வேகத்தோடு பின்தொடர்ந்தார்கள். ஓடிக்கொண்டே பேசினார்கள்.
‘‘ஹயாத்.’’
‘‘சொல்லு சர்புதீன்.’’
‘‘மஹிமாவைப் பார்த்ததுமே சுட்டுடு. ஒரு செகண்ட்கூட லேட் பண்ணிடாதே’’
‘‘இந்த பிஸ்டலில் இருக்கிற ஆறு தோட்டாக்களும் அவளுக்குத்தான். மொத்த உடம்பும் ரத்தப் பொத்தல்களாய் மாறணும்’’
‘‘அப்சல், கெளசிக் ...நீங்க ரெண்டு பேரும் எங்களுக்குப் பின்னாடியே வாங்க...எந்தப் பக்கமும் டைவர்ட் ஆக வேண்டாம். நாம நாலு பேரும் ஒரே இடத்துல இருந்தால்தான் மஹிமாவைச் சமாளிக்க முடியும்.’’
செல்போன் டார்ச் வெளிச்சத்தோடு நான்கு பேரும் மாடிப்படிகளில் இறங்கி, முதல் மாடியின் வராந்தாவுக்கு வந்தார்கள். பூட்டப்பட்டு இருந்த சில அறைகளைக் கடந்ததும் ஒரே ஒரு அறையின் கதவு மட்டும் லேசாய் திறந்திருந்தது.
சர்புதீன் சற்றே நிதானித்தான்.
‘‘ஹயாத்.’’
‘‘சொல்லு.’’
‘‘மஹிமா இந்த அறைக்குள்ளே இருக்க வாய்ப்பு அதிகம். உயிருக்குத் துணிந்துதான் உள்ளே போகணும்.’’
அப்சல் குரல் கொடுத்தான்.
‘‘வேண்டாம்...யாரும் உள்ளே போக வேண்டாம்.அவ கையில் ஜீரோ நாய்ஸ் பிஸ்டல் இருக்கு.’’
‘‘அதுக்குப் பயந்தா அவளை எப்படி மடக்க முடியும்?’’
‘‘இந்த அறையை வெளிப்பக்கமாய் லாக் பண்ணிடுவோம்.’’
‘‘மஹிமா ஒருவேளை இந்த அறைக்குள்ளே இல்லாம இதே வராந்தாவில் வேற ஏதாவது ஒரு இடத்தில்...’’ சொல்லிக்கொண்டே போன சர்புதீன் சட்டென்று பேச்சை நிறுத்தினான்.
ஹயாத் கேட்டான்.
‘‘என்ன... பேச்சை நிறுத்திட்டே.’’
‘‘கெளசிக் எங்கே?’’
அப்சலும் ஹயாத்தும் திரும்பிப் பார்த்தார்கள். கெளசிக்கைக் காணவில்லை.
‘‘எனக்குப் பின்னாடிதானே வந்துட்டிருந்தார்” அப்சல் அதிர்ச்சியோடு சொல்ல, சர்புதீன் அந்த அறையின் கதவை வெளிப்பக்கமாய்த் தாழிட்டுவிட்டு ஒரு கையில் உயர்த்திப் பிடித்த பிஸ்டலோடும் இன்னொரு கையில் செல்போனிலிருந்து பீறிட்ட டார்ச் வெளிச்சத்தோடும் வந்த வழியில் திரும்பி நடந்தான்.
இருபதடி தூரம் நடந்ததுமே அந்த விபரீதம் பார்வைக்குக் கிடைத்தது.
மாடிப்படிகள் முடியும் இடத்தில் கெளசிக் குப்புற விழுந்து கிடந்தார். ஹயாத் வேகமாய் போய் அவரைப் புரட்டினான்.
கெளசிக்கின் தலை, கழுத்து, மார்பு என்று எல்லாப் பக்கங்களில் இருந்தும் ரத்தம் கிடைத்த வழிகளில் இறங்கி அவருடைய உடம்பை நனைத்துக்கொண்டிருந்தது. உயிர் உடலில் இல்லை என்பதற்கு அடை
யாளமாய் அவருடைய விழிகள் நிலை
குத்திப்போயிருந்தன.
மூவரும் மிரண்டார்கள். அப்சலின் உடம்பு ஒரு மெல்லிய உதறலுக்கு உட்பட்டிருக்க, சர்புதீன் அவனுடைய கையைப் பற்றிக்
கொண்டான்.
‘‘அப்சல்... இனியும் இருட்டில் இந்த விளையாட்டு வேண்டாம். இந்த விளையாட்டைத் தொடர்ந்தா, நிச்சயமா நாம மூணு பேரும் உயிரோடு இருக்க மாட்டோம். மஹிமாவை நாம ஜெயிக்கணும்னா, ஒரே ஒரு வழிதான் இருக்கு.’’
‘‘எ...ன்...ன?’’
‘‘நாம மூணு பேரும் என்னோட ரூமுக்குப் போயிடலாம். ரூமை உட்பக்கமாய்த் தாழ் போட்டுகிட்டு விடிகிறவரை அங்கேயே இருப்போம். பொழுது விடிஞ்சுட்டா மஹிமாவை ஃபேஸ் பண்றது சுலபமாய் இருக்கும்.’’
‘‘ஹயாத்... நீ என்ன சொல்றே?’’
‘‘சர்புதீன் சொல்றதுதான் சரி.’’
மூன்று பேரும் இருட்டில் நடந்தார்கள்.
சர்புதீனின் அறை.
அறை உட்பக்கமாய் தாழிடப்பட்டிருக்க, அகன்ற அந்தக் கட்டிலின் மேல் அப்சலும் ஹயாத்தும் மரணபீதி தடவிய முகங்களோடு உட்கார்ந்திருந்தார்கள். சர்புதீன் எதிரில் இருந்த சோபாவில் சாய்ந்தபடி எச்சரிக்கை உணர்வுடன் பிஸ்டலை வைத்துக்கொண்டிருந்தான்.
பங்களாவின் ஒட்டுமொத்தப் பகுதியும் கனத்த நிசப்தத்தில் உறைந்துபோயிருந்தது.
‘‘வெளியே எது மாதிரியான சத்தம் கேட்டாலும் சரி... பொழுது விடிகிற வரைக்கும் நாம் அதைப் பொருட்படுத்தக் கூடாது’’ என்று சொன்ன சர்புதீனை சிறிது கோபமாய்ப் பார்த்தான் அப்சல்.
‘‘சர்புதீன்... ஒரு பெண்ணுக்குப் பயந்துபோய் அவளை எதிர்கொள்ள முடியாமல் இப்படி ஒரு ரூமுக்குள்ள வந்து ஒளிஞ்சிட்டு இருக்கிறது எனக்கு அவமானமாயிருக்கு.’’
‘‘எனக்கும்தான்’’ என்றான் ஹயாத். ‘‘இப்படி ஒளிஞ்சிட்டு இருக்கிறதை விட நிஷா, கெளசிக் மாதிரி செத்துடலாம் போலிருக்கு.’’
‘‘ஹயாத். இது மாதிரியான நேரங்களில்தான் புத்தியை உபயோகிக்கணும்.’’
“இதுதான் புத்தியை உபயோகிக்கிற லட்சணமா? அந்த மஹிமா விடியறதுக்குள்ள தப்பிச்சுப் போயிட்டான்னா?’’
‘‘அவ தப்பிச்சுப் போக மாட்டா. அப்படித் தப்பிக்கிற எண்ணம் இருந்தா எனக்குத் தெரியாம அது நடக்காது!’’
அப்சலும் ஹயாத்தும் முகம் மாறினார்கள்.
‘‘நீ என்ன சொல்றே சர்புதீன்?’’
சர்புதீன் தன்னுடைய இதழ்களில் புன்முறுவல் ஒன்றை படர விட்டான். “ மஹிமா எனக்குத் தெரியாம இந்த வீட்டை விட்டு வெளியேற முடியாதுன்னு சொல்றேன்.’’
அப்சலின் முகம் சிவப்பேறியது.
‘‘புரியும்படியா பேசு.’’
சர்புதீனின் புன்னகை இப்போது ஒரு சின்னச் சிரிப்பாய் மாறியிருந்தது. குரலைத் தாழ்த்தி ஏதோ ரகசியம் பேசுகிற தினுசில் ‘‘மஹிமா இப்போ இந்த பங்களாவில் எந்த இடத்துல இருக்கான்னு எனக்குத் தெரியும்’’ என்றான்.
‘‘எ...எ...எங்கே... எங்கே?’’ அப்சலும் ஹயாத்தும் பதற்றம் அடைந்தார்கள்.
‘‘சொல்றேன். அதுக்கு முன்னாடி ஒரு விஷயம். நீங்க ரெண்டு பேரும் இப்ப உட்கார்ந்துட்டிருக்கிற இடத்தை விட்டு அசையக் கூடாது. அசைஞ்சா என்னோட கையில் இருக்கிற இந்த இன்விசிபிள் லேசர் பிஸ்டலுக்கு வேலை கொடுக்க வேண்டியிருக்கும்’’ சர்புதீன் சொல்லிக்கொண்டே தன் இடதுபக்க பேன்ட் பாக்கெட்டிலிருந்து பென் டார்ச் போன்ற டிவைஸ் ஒன்றை வெளியே எடுத்தான்.
(அடுத்த இதழில் நிறையும்)

x