முடிவற்ற சாலை 11: வீதியெங்கும் மகிழ்ச்சி 


நாடகம் பார்க்க சைக்கிளில் சென்ற பயணமே இரவில் சுற்ற ஆரம்பித்ததின் முதல் நினைவு. நாடகத்தோடு எனக்குள்ள உறவு முப்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்டது.

திருவிழாவில் நாடகம் நடைபெறப்போகிறது என்பது விஷேசமானது. அதைப் பற்றி மக்கள் வாரக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார்கள். உடையப்பா அரிச்சந்திரனாக நடிக்கிறார் என்றால், கூடும் கூட்டம் அளவில்லாதது. அற்புதமாக நடிப்பார். இரவு பத்துமணிக்குதான் நாடகம் துவங்கும். விடிய விடிய நடக்கும்.

கிராமத் திருவிழாவில் பெரும்பாலும் வள்ளி திருமணமோ, அரிச்சந்திரன் மயான காண்டமோ, பவளக்கொடியோதான் நடத்துவது வழக்கம். கோயில் திடலில் பின்னிரவின் வெளிச்சத்துடன் நாடகம் பார்ப்பது தனித்த அனுபவம்.

சித்திரைப் பொருட்காட்சியில் சிறப்பு நாடகங்கள் நடத்தப்படுவதுண்டு. அதில் ஆர்.எஸ். மனோகர் மிகவும் பிரபலம். பெரும்பாலும் புராண நாடகங்கள். நவீன நாடகத்தை மதுரை நிஜ நாடக இயக்கம் மூலமே அறிந்துகொண்டேன். பின்பு சென்னையில் கூத்துப்பட்டறை நாடகங்களையும் பிரளயன் இயக்கிய நிஜ நாடகங்களையும் ஞாநியின் நாடகங்களையும் பேரா.ராமானுஜம், பிரஸன்னா ராமஸ்வாமி, மங்கை, ஆடுகளம் ராமானுஜம், மணல்மகுடி முருகபூபதி, திருப்பத்தூர் பார்த்திபராஜா இயக்கிய நாடகங்களையும் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். தேசிய நாடக விழா பற்றிக் கேள்விப்பட்டு ஒரு முறை டெல்லி சென்று அந்த நாடகங்களைக் கண்டிருக்கிறேன். எவ்வளவுதான் சினிமா பார்த்தாலும் நாடகம் தரும் அனுபவத்துக்கு நிகரேயில்லை.

‘உருளும் பாறைகள்’ என்ற எனது நாடகம் சங்கீத நாடக அகாதமியால் தேர்வு செய்யப்பட்டது. அதை, மதுரையில் பேராசிரியராகப் பணியாற்றும் சுந்தர் காளி இயக்கினார். அந்த நாடகம் பல்வேறு இடங்களில் நிகழ்த்தப்பட்டுப் பாராட்டு பெற்றது. இதைத் தொடர்ந்து இயக்குநர் கருணா பிரசாத் ‘அரவான்’ என்ற எனது நாடகத்தைச் சிறப்பாக நிகழ்த்தினார். தீப்பந்த வெளிச்சத்தை மட்டுமே பயன்படுத்தி நிகழ்த்தப்பட்ட, மகாபாரதக் கதையை மையமாகக் கொண்ட நாடகமது. அது போலவே இயக்குநர் ஜெயராவ் எனது ஐந்து நாடகங்களை இயக்கியிருக்கிறார். அதில் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கையை நாடகமாக நிகழ்த்தியது அபாரம்.

நாடகம் பார்ப்பதற்காகவே திருவனந்தபுரம், ஹைதராபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா, போபால், திருச்சூர், பெங்களூரு என எங்கெங்கோ சென்று வந்திருக்கிறேன். சில நாடக விழாக்களில் எனது நாடகமும் கலந்துகொண்டிருக்கிறது.

நீண்ட காலமாகவே அமெரிக்காவின் புகழ்பெற்ற பிராட்வே நாடகங்களைக் காண வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதிலும் குறிப்பாக நியூயார்க் நகரின் பிராட்வே நாடகங்களைப் பற்றிப் படித்திருந்த காரணத்தால் அங்கே சென்று நாடகம் காண வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்தேன்.

பிராட்வே நாடகங்கள் திரைப்படங்களை விடவும் புகழ்பெற்றவை. ஒருசில நாடகங்கள் ஆண்டுக் கணக்கில் நடைபெற்றுவருகின்றன. எந்த நாடகத்துக்கும் எளிதில் டிக்கெட் கிடைக்காது. குறைந்த கட்டணம் இந்திய மதிப்பில் மூவாயிரம் ரூபாய். ஐம்பது ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் இருக்கிறது. பெரும்பான்மை நாடகங்கள் இசையும் நடனமும் கொண்டவை.

அமெரிக்கத் திரைப்படங்களில் பாடல்கள் கிடையாது. ஆனால், மேடை நாடகங்களில் இசையும் பாடலுமே சிறப்பு. சில நாடகங்கள் முழுவதும் பாடல்களாலேயே உருவாக்கப்படுகின்றன. இசையும் நடனமும் இணைந்த இந்த நாடகங்கள் மாயாஜாலக் காட்சிகள் போல விசித்திரமான அரங்க அமைப்பில், விஷேச ஒலியுடன் உருவாக்கப்படுகின்றன. நாடக நடிகர்கள் பெறும் ஊதியம் மிகவும் அதிகம். நாடக அரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வார இறுதி நாட்களில் டிக்கெட் கிடைப்பது வெகு அரிது.

அமெரிக்கப் பயணத்தின்போது எப்படியாவது பிராட்வே நாடகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டிருந்தேன். நியூயார்க் நகரின் புகழ்பெற்ற வீதி டைம்ஸ் சதுக்கம் (Times Square). இரவு கொண்டாட்டங்களுக்குப் புகழ்பெற்ற வீதி. புத்தாண்டு கொண்டாட்டம் அங்கேதான் நடைபெறுவது வழக்கம்.

நியூயார்க் நகரின் பிராட்வே சாலையும் ஏழாவது அவென்யூவும் சந்திக்கும் மையமாக டைம்ஸ் சதுக்கம் உள்ளது . புகழ்பெற்ற ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் 1904-ல், புதிதாகக் கட்டப்பட்ட டைம்ஸ் கட்டிடத்துக்குத் தனது அலுவலகத்தை மாற்றியது. அது முதல் இந்த இடம் ‘டைம்ஸ் சதுக்கம்’ என்று அழைக்கப்படுகிறது.

மாயலோகம் ஒன்றுக்குள் நுழைந்துவிட்டதுபோல ஒளிரும் அலங்கார விளக்குகள். வண்ண மின்னொளிகளால் பிரகாசிக்கும் டிஜிட்டல் திரைகள். திருவிழா கூட்டம் போல அலைமோதும் ஆட்கள். விதவிதமான உணவகங்கள். பிரபல நிறுவனங்களின் அங்காடிகள். இசைக் கலைஞர்களின் வீதி இசை. ஐம்பதுக்கும் மேற்பட்ட பிராட்வே அரங்குகள் வரிசையாக உள்ளன. இதில் சில, நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரக்கூடியவை.

வணிகரீதியாக இந்த மேடை நாடகங்கள் மிகப் பெரிய வசூலைப் பெறுகின்றன. வணிகத்தை முதன்மையாகக் கருதாமல் கலை நோக்கத்துக்காக நடத்தப்படும் நாடகங்கள் ‘ஆஃப் பிராட்வே’ என்று அழைக்கப்படுகின்றன. இவை நூறு முதல் ஐந்நூறு இருக்கைகள் வரை கொண்ட சிறிய அரங்கில் நடைபெறுகின்றன.
பொதுவாக, ஒரு நாடகத்தை வாரம் எட்டு நிகழ்வுகளாகக் குறைந்தபட்சம் 14 வாரங்கள் நடத்து கிறார்கள். புகழ்பெற்ற நாடகங்கள் ஆண்டுக்கணக்கில் நடைபெறுகின்றன. ‘பேண்டம் ஆஃப் தி ஒபரா’ நாடகம் சுமார் 10 ஆயிரம் முறை மேடையேற்றப்பட்டது என்கிறார்கள்.
நான் ‘மேரி பாப்பின்ஸ்’ என்ற புகழ்பெற்ற நாடகத்தைக் காண்பதற்காகச் சென்றேன். அமெரிக்க நண்பரும் திண்ணை இணைய இதழின் ஆசிரியருமான ராஜாராம் இதற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்துகொடுத்தார்.

மேரி பாப்பின்ஸ் நாடகத்தில் மேஜிக் காட்சிகளை விடவும் வேகமாக நாடகத்தின் அரங்க அமைப்பு மாறிக்கொண்டேயிருந்தது. மேடையில் இருந்து நடிகர்கள் பார்வையாளர்களை நோக்கிப் பறந்து வருகிறார்கள். அரங்கில் பனிமழை பெய்கிறது. மின்னல் வெட்டுகிறது. சேர்ந்திசையும் நடனமும் மக்களின் ஆரவாரத்துடன் நடக்கிறது. சினிமாவில் எவையெல்லாம் சாத்தியமோ அதை விட இரண்டு மடங்கு அதிகமாகவே மேடையில் சாத்தியப்படுத்துகிறார்கள். நடிப்பு, இசை, நடனம், அரங்க அமைப்பு என அத்தனையும் அபாரம்.

மேடை நாடகம் என்றாலே நின்று மணிக்கணக்கில் பேசிக்கொண்டேயிருப்பார்கள். பின்புலத்தில் இரண்டோ மூன்றோ திரைச்சீலை இருக்கும் என்ற பொது அனுபவத்தை முற்றிலும் மாற்றிவிட்டார்கள். இரண்டாயிரம் பேருக்கும் மேலான பார்வையாளர்களைக் கொண்டிருந்த அரங்கம் அது. அரங்க அமைப்பே அத்தனை கலைரசனையோடு உருவாக்கப்பட்டிருந்தது. டிக்கெட்டோடு நாடகம் பற்றிய தகவல்கள் அடங்கிய பை ஒன்றும் தருகிறார்கள். நாடகத்தின் முக்கியப் பொருட்களின் மாதிரிகள் விற்பனையும் செய்யப்படுகிறது.
ஒரு பக்கம் செலவேயில்லாமல் வீதியில் நடத்தப்படும் வீதி நாடகங்கள். மற்றொரு புறம் கோடிக்கணக்கில் செலவு செய்து நடத்தப்படும் வணிக நாடகங்கள், இரண்டும் அமெரிக்காவில் சாத்தியமாகியிருக்கின்றன.

மேரி பாப்பின்ஸ் கதையை சினிமாவாக முன்பே பார்த்திருக்கிறேன். லண்டனில் நடைபெறும் கதை அது. மேடையில் நிஜ லண்டனையும் பனிக்காலத்தையும் தத்ரூபமாக உருவாக்கிக் காட்டுகிறார்கள். மேரி பாப்பின்ஸ் வானில் பறப்பது கண்முன்னே நடக்கிறது.
பிராட்வே பார்த்துவிட்டு டைம்ஸ் சதுக்கத்தில் நடந்தேன். மக்கள் இரவைக் கொண்டாடுகிறார்கள். இசையும் ஆட்டமும் பாட்டுமாக சந்தோஷம் அலைபாய்கிறது. தொலைக்காட்சி முன்பாக மட்டுமே இரவைக் கழிக்கும் நம் ஊரை நினைத்துக்கொண்டபோது வருத்தமாகவே இருந்தது.

இளமையின் துடிப்பை, கொண்டாட்டத்தை மகிழ்ச்சியைக் காண ஒருமுறையாவது டைம்ஸ் சதுக்கத்துக்குப் போய்வர வேண்டும். அந்த வீதி மகிழ்ச்சியால் நிரம்பியிருக்கிறது. வண்ண விளக்கின் ஒளி நம் மீது படரும்போது கனவில் மிதப்பது போலவே இருக்கிறது.
தமிழ் நாடக உலகம் ஒருகாலத்தில் பெரும் புகழ் பெற்றிருந்தது. நாடகம் பார்க்க டிக்கெட் கிடைக்காமல் மக்கள் காத்திருந்தார்கள். அந்த நாட்களின் இனிய நினைவுகளை நாடக மேதை ‘அவ்வை’ சண்முகம் ‘எனது நாடக வாழ்க்கை’ என்ற நூலில் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார். நாடகக் குழுவினர் ஊர் ஊராகப் போய் எப்படி நாடகம் போட்டார்கள். பொதுமக்கள் நாடகத்தை எவ்வளவு ரசித்துக் கொண்டாடினார்கள் என்பதன் அரிய ஆவணம் இந்த நூல்.

பள்ளி கல்லூரி விழாக்களில் முன்பு மாணவர்களே நாடகம் எழுதி நடிப்பார்கள். இன்று பெரும்பான்மை பள்ளி விழாக்களில் சினிமா பாடல்களுக்கு மாணவ மாணவிகள் ஆடுகிறார்கள். நாடகம் என்பது அழிந்துவரும் கலையாகிவிட்டது. கல்விப் புலத்தில் நாடகம் அறிமுகமானால்தான் பின்னாளில் அது காக்கப்படும். இல்லையென்றால் அரிய நாட்டார் கலைகள் போல அவை கண்முன்னே மறைந்து போய்விடக் கூடும்.

(பயணிக்கலாம்...)

x