குரங்கணி சித்தன் கதை - 18:  ஆதிக்கும் அந்தம் இருக்கு!


“உங்க வேதாந்தம், சித்தாந்தம் எல்லாம் எங்களுக்கு வேண்டாம் சித்தா. இப்போ அதிகாரம் எங்க கைல இருக்கு. மொத்த நாட்டையும் நாங்களே பரிபாலனம் செய்யப்போறோம். நாங்க எழுதுறதுதான் சட்டதிட்டம். அதனால எங்க குருமார்கள் மந்திரம் சொல்லி, உங்க ஓலைச்சுவடிய எல்லாம் தண்ணியில நமத்துவாங்க, நெருப்புல ஆகுதி செய்வாங்க! முடிவே இல்லாத ராயர் ராச்சியம் புலர்ந்திருச்சு சித்தா”னு போடப்ப நாயக்கர் புருவத்தை தூக்கிச் சிரிச்சாரு.

“ஆதிக்கும் அந்தம் இருக்கு மகாராசா! வெளிச்சமும் அனலும் குறையக் குறைய பூமி குளிர்ச்சியாகுதுனு இதுல எழுதியிருக்கு. மனுசனோட வாழ்க்கையும் ஊழிக் காலத்துக்குப் போகப்போக, அந்தக் குளிர்ச்சியில புதுசுபுதுசா நோய் நொடிகள் உற்பத்தியாகும். அதை யெல்லாம் மூலிகை மருந்தால எப்படி சொஸ்தம் பண்றதுனு இந்த ஓலச்சுவடியில எழுதியிருக்கு. எங்க முன்னோர்கள் காடுமலை சுத்தி, அனுபவப்பட்டு, எதிர்கால சமுதாயம் ஆரோக்கியமா வாழணும்னுதான் எழுதி வச்சிருக்காங்க. இதப்போயி ஆத்துத் தண்ணியில போட்டா, அது மனுச இனத்துக்கு துரோகம் இல்லையா?”னு சித்தன், போடப்பரோட கண்ணப் பார்த்துக் கேட்டான்.

கொஞ்சம் யோசிச்ச போடப்பர், “சரி... நீ சொல்றதால ஓலைச்சுவடிய காபந்து பண்ணி வெச்சுக்கறேன் சித்தா!”னு பெருமைகாட்டி, பத்திரமா வச்சிருக்கச் சொல்லி சேவுகமார்கள்கிட்ட கொடுத்தாரு.

“ரொம்ப நன்றி மகாராசா. நாங்க குரங்கணி மலைக்குப் போக உத்தரவு வாங்கிக்கிறோம் மகாராசா”னு சொன்ன சித்தன், கால் பெருவிரலை அந்த மழைத்தண்ணியில நம்பிக்கையோட ஊன்றி நடக்க ஆரம்பிச்சான்.

மறுநாள், சித்தனும் ஆதிகுடி சேவகர்களும் வில்லு, அம்பு, ஈட்டியோட ஒண்ணா திரண்டு கொட்டக்குடி ஆத்து வடக்குக் கரையில வந்து நின்னாங்க.

பொம்மியும் கலிங்காவும் சித்தன் பக்கத்துல வந்து,“என்ன செய்யப்போற சித்தா? நாம இழந்தது போதும்.

இனி போடப்ப நாயக்கருக்கும் பெரும்பிறவி பாண்டியருக்கும்தான் பாடு. நமக்குச் சம்பந்தமில்லை!”னு சொன்னதும், சித்தன் பொம்மியோட வயித்தைப் பார்த்தான்.

“போடப்ப நாயக்கருக்கும் நமக்கும் சம்பந்தம் இருக்கு பொம்மி. காரணத்தோடுதான் இதுல நான் இறங்கி இருக்கிறேன். நடக்கப் போறதை வேடிக்கை மட்டும் பாரு”னு சொன்ன சித்தன், தம்மா பக்கம் திரும்பிப் பார்த்தான்.

“தம்மா… நீ தெற்குப் பக்கம் கொழுக்குமலைக்குப் போய், நான் சொன்னதை மட்டும் செய். போய்ட்டு வா!”னு சொன்ன சித்தன், திரும்ப தம்மாவைக் கூப்பிட்டு, “தம்மா, என் பக்கத்துல வா… என் கண்ணை ஒரு தடவ பதமா பாரு. பார்த்துட்டயா? போ… நான் உன்னைப் பார்த்துக்கிட்டே இருப்பேன்!”னு சொல்லி, அனுப்பிவச்சான்.

சரியான நேரத்துக்கு போடப்பரும் நந்திச்சாமியும் வந்து சேர்ந்தாங்க. காவலுக்குக் கொஞ்சம் சேவுகமார்களும்கூட வந்திருந்தாங்க.

சித்தன் நந்திச்சாமியைப் பார்த்து, “நந்திச்சாமி, இப்போதான் நீங்க ஒரு புண்ணிய காரியத்துல இறங்கப் போறீங்க. ஆத்தைக் கடந்து பெரும்பிறவி பாண்டியன்கிட்ட போங்க. சமாதானம் பேச போடப்ப நாயக்கர் வந்திருக்கிறார்னு சொல்லுங்க. உங்களை பாண்டியர் நம்புவார். அவரோட படையோடு கூப்பிட்டுக்கிட்டு வாங்க. உங்க அரிகேசரி நல்லூருக்கு மட்டுமில்ல… இந்தப் பூமிக்கே உங்களால நன்மை நடக்கும். போய்க் கூப்பிட்டுக்கிட்டு வாங்க!”னு சொல்லி அனுப்பிவச்சான்.

நந்திச்சாமி கொஞ்சம் தயக்கத்தோட, மறுகரை ஏறி போதைப் புல்லுக்குள்ளே போய் மறஞ்சான்.

பல வருஷகாலமா, பெரும்பிறவி பாண்டியன் மரங்கள எல்லாம் வெட்டி, தரைக்காட்டுக்குக் கொண்டு போனதால, மலக்காட்டுல போதப்புல்லு பெருகி வளர ஆரம்பிச்சிருச்சு. காட்டெருமைகள் மேய்ச்சலுக்குத் தோதா கூட்டம் கூட்டமா வந்து அங்க நின்னுக்கிட்டு இருந்துச்சு.

ரெண்டு மூணு நாழிகை கடந்ததும், எதிர்ல செம்போத்துப் பறவைங்க பறந்து வர்றதைப் பார்த்தான் சித்தன். முதல்ல கொஞ்சம் சேவுகமார்களோட தலையும், அப்புறம் பெரும்பிறவி பாண்டியனோட தலையும் தெரிய ஆரம்பிச்சது. வடக்குக் கரையில வரிசையில நின்னாங்க. நந்திச்சாமி குழப்பத்தோடு பார்த்துக்கிட்டு இருந்தான்.

சித்தன், ஒத்தக்கால்ல நின்னு, சூரியனைப் பார்த்தான். “ஆதிபகவானே! உன் அருமை பெருமை தெரியாத மனுசனை பஞ்சபூதங்கள் உதவியோட, எப்படி ஆகுதி செய்வியோ… அப்படியே செய்!”னு உரக்கக் கத்தினான்.

தூரத்துல இந்தச் சத்தத்தைக் கேட்ட தம்மா, கையில வஞ்சிருந்த தீப்பந்தத்தை போதைப்புல்லு மேல வீசினான். இதுக்காகவே காத்திருந்த போதைப்புல்லு குப்புனு பத்திக்கிட்டு எரிய ஆரம்பிச்சது. அந்தத் தீ வலது பக்கமும் இடது பக்கமும் மடமடனு பரவ ஆரம்பிச்சது. தீச்சுவாலை கொட்டக்குடி ஆத்துக்கரையைப் பார்த்துப் போய்க்கிட்டே இருந்துச்சு. போதைப்புல்லு ஈரமா இருந்தாலும் எரியும்!

போதைப்புல்லு பக்கமா மேஞ்சுக்கிட்டிருந்த காட்டெருமைகள் புகை பரவின திசையில தலையைத் தூக்கித் திரும்பிப் பார்த்துச்சு. அடடே நமக்கு ஆபத்து வந்துருச்சேனு எல்லா எருமைகளும் கத்திக்கிட்டே, கொட்டக்குடி ஆத்துப்பக்கம் ஓட ஆரம்பிச்சது.

“கூண்டுக்குள்ள மாட்டிக்கிட்டீங்க பாண்டியரே! நம்மைப் பெத்தெடுத்ததுக்காக இந்த இயற்கையே பெருமைப்பட நாம வாழணும்! இயற்கையை அழிச்ச மனுசனோட பெருமை யாருக்குத் தெரியும்? நம்மை ஈ, எறும்புகூட மதிக்காது. இயற்கையை அழிக்கிற பரம்பரை இந்த பூமிக்குப் பாரம்தான். இப்போ சொல்லுங்க… கொட்டக்குடி ஆத்துல எருமைத் தலைகளை வெட்டிப் போட்டு, எங்க ஆதிகுடிகளுக்குக் குடிக்கத் தண்ணி இல்லாம செஞ்சது யாரு? ம்… சொல்லுங்க பாண்டியரே!”

பெரும்பிறவி பாண்டியன் தலையைக் கவுத்துக்கிட்டு,”எங்க தாத்தா பெரிய பாண்டியர்தான்!”னு சொன்னதும், திடுக்கிட்ட பொம்மி, கலிங்காவையும் சித்தனையும் மாறிமாறிப் பார்த்தாள்.

பாண்டியன் மெல்ல தலையைத் தூக்கி, “உங்களை எல்லாம் தரைக்காட்டுல அடிமைச் சேவகம் செய்யவைக்க மலையிலிருந்து துரத்திரணும்னு நெனச்சுத்தான், கொட்டக்குடி ஆத்துல எருமைத் தலைகள வெட்டிப் போட்டாரு! அந்தப் பழியை பொம்மியோட தாத்தாமேல சுமத்தி, அவரோட தலையையும் வெட்டி ஆத்துல போட்டுட்டு, அவரை எருமைகள் கொன்னுட்டதா நாடகம் போட்டாரு”னு பாண்டியன் சொல்லி முடிச்சதும், சித்தனுக்கு கண்கள் செவந்துபோச்சு!

பெரும்பிறவி பாண்டியன் தலையைத் திருப்பிப் பார்த்தான். தனக்குப் பின்னாடி ஏதோ ஓடி வருதுனு புரிஞ்சிக்கிட்டான். உஷாராகுறதுக்குள்ள தீக்குப் பயந்த காட்டெருமைகள், பெரிய பெரிய கொம்புகளோட நாலுகால் பாய்ச்சல்ல ஓடிவர்றதைப் பார்த்தான். சேவுகமார்கள் சிதறி ஓடினாங்க.
முன்பக்கம் தண்ணி பெருகி ஓடுற ஆறு… உயிர் பிழைக்க ஓடித்தான் ஆகணும். கரை ஓரமா அடுக்கி வச்சிருந்த பெரிய பெரிய பாறைகள், பாண்டியனுக்குப் பல எமன்கள் மாதிரி தெரிஞ்சது. தலையை ஒரு தடவ உலுப்பிவிட்டுக்கிட்டு ஓட ஆரம்பிச்சான்.

பாண்டியனுக்கு உயிர்பயம் ரெண்டு காலு. எருமைகளுக்கு உயிர்பயம் நாலுகாலு. எருமைகள் முந்திக்கிச்சு. பெரிய காட்டெருமை தன்னோட ஒரு கொம்புல முட்டித்தூக்க, பாண்டியனோட கழுத்து அறுபட்டு தலைமட்டும் கொம்புல மாட்டி, வேகம் எடுத்து, கொட்டக்குடி ஆத்துல சிதறி விழுந்துச்சு!

பொம்மியும் கலிங்காவும் இதைப் பார்த்துச் சகிக்க முடியாம கண்ண மூடிக்கிட்டாங்க. கொஞ்ச நேரம் கழிச்சுக் கண்தெறந்து சித்தனைப் பார்த்த பொம்மி அலறினாள்.

சித்தன் தூக்கிக் கும்பிட்ட, கையோட ஒத்தக் கால்ல தவமிருந்த கோலத்துலயே மண்ணுக்குள்ளே புதைஞ்சுக்கிட்டு இருந்தான்.
“ஐயோ சித்தா… என்ன நடக்குது இங்க?”னு பொம்மி கத்தினாள்.

“பயப்படாதே பொம்மி… இது என் வினைதான். போடப்பர் என்னைத் தனியாக் கூப்பிட்டு என் காதுல சொன்னதைத்தான் இப்போ நிறைவேத்தியிருக்கேன். நம்ம இனத்தைக் காக்க போடப்பர் துங்கபத்ரா ஊத்துத்தண்ணிய கொடுத்தாரு இல்லையா? அதுக்குப் பிரதி உபகாரமா கடைசி வரை பகையா இருந்த பெரும்பிறவி பாண்டியனைக் கொல்றது என் பொறுப்புனு போடப்பர் என்னைக் கேட்டுக்கிட்டாரு. வேறு வழியில்லை. ஒப்புக்கிட்டேன். செஞ்சு முடிச்சிட்டேன். செஞ்ச வினைக்கு நான் பூமிக்குள்ள போய் மூச்சை விடுறதுதான் இயற்கை விதி!”னு சொல்லிக்கிட்டே மண்ணுக்குள்ள புதைய, சித்தனின் தலை மண்ணுக்குள்ள மறையும்போது, அண்ணாந்து சூரியனைப் பார்த்தான். பச்சை இலைகளுக்கு நடுவில, மஞ்சள் சூரிய ஒளி கற்றாய்த் தெரிஞ்சு மறஞ்சது!

பொம்மியோட வயித்துல ஒரு பூ மலரும் உணர்வு தெரிஞ்சது. பொம்மி, கலிங்காவோட கைய இறுக்கிப் பிடிச்சு, ரெண்டுபேரும் சித்தன் புதைஞ்ச இடத்துல நெடுஞ்சாண் கிடையா விழுந்தாங்க.

இதுதான் குரங்கணி மண்ணுக்குள்ள உயிரோட புதஞ்ச, ஐநூறு வயசாகும் முதுவாச்சித்தனோட கதை!

இப்போதைக்குச் சொல்லி முடிச்சுட்டேன்!

- சொல்றேன்...

-வடவீர பொன்னையா

x