தாவோ: பாதை புதிது - 21


இந்தத் தொடரின் நிறைவுப் பகுதி இது என்பதால் தாவோயிஸத்தின் முக்கியமான கோட்பாடுகள் பற்றிச் சுருக்கமாக இங்கே பார்க்கலாம். பாதியிலிருந்து தொடரைப் படிக்க நேரிட்டவர்களுக்கும் இடையில் ஓரிரு அத்தியாயங்களைத் தவறவிட்டவர்களுக்கும் உதவியாக இருக்கும். ஆரம்பத்திலிருந்து படித்துவருபவர்களுக்கு நினைவுபடுத்திக்கொள்ளவும் இது உதவக்கூடும்.

தாவோ:

‘தாவோ’ என்ற சொல்லுக்குச் சீன மொழியில் ஏராளமான பாதை, சாலை, வழி, வழிமுறை, இயல்பு, சரியான பாதை, கோட்பாடு என்பவை அவற்றுள் சில. தாவோயிஸத்தில் ‘பாதை’ என்ற பொருளில் ‘தாவோ’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அதாவது எல்லாப் பாதைகளையும் தோற்றுவிக்கிற பாதை தாவோ. இந்தப் பிரபஞ்சத்தின் மூலாதாரம், வாழ்க்கையின் மூலாதாரம் என்று ஒன்று இருக்குமானால் அதுதான் தாவோ என்று தாவோயிஸம் கருதுகிறது. தாவோவைக் காண முடியாது, ஆனால், உள்ளுணர்வால் உணர முடியும் என்று நம்பப்படுகிறது.

தே:

ஒரு உயிரிலோ பொருளிலோ தாவோ வெளிப்படும் விதம்தான் தே. மலர்வது பூவின் தே. பாய்வது நீரின் தே. உதிர்வது இலையின் தே.

இருத்தலின்மை, இருத்தல்:
இந்தப் பிரபஞ்சமே இன்மையிலிருந்து பிறந்தது என்று நவீன அறிவியல் சொல்வதை தாவோயிஸமும் கூறுகிறது. எல்லா இருத்தலுக்கும் மூலாதாரமான அந்த இன்மையை தாவோ என்று லாவோ ட்சு அழைக்கிறார். இருத்தலின்மை என்பது ஏதும் இல்லாத, ஏதும் நிகழாத வெறுமை அல்ல. அது படைப்பூக்கம் கொண்ட வெறுமை. இருத்தலின்மையின் வெளிப்பாடுதான் இருத்தல். படைப்பதோடு, இருத்தலின்மை முடிந்துபோய்விடுவதில்லை. தான் எதிலிருந்து தோன்றியதோ அந்த ‘இருத்தலின்மை’யைத் தனது அம்சமாக இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு உயிரும் கொண்டிருக்கிறது.

செயல்படாமை:

செயல்படாமை என்பது செயலில் ஈடுபடாமல் சோம்பேறியாக இருப்பது என்று பொருளல்ல. நாம் எல்லோரும் செயலின் மையத்தை அணுகாமல் அதைச் சுற்றிவளைத்து அணுகிக்கொண்டிருக்கிறோம். அதனால்தான் எந்தவொரு செயலையும் செய்து முடிப்பதற்குள் அவ்வளவு சக்தி நம்மிடமிருந்து உறிஞ்சப்படுகிறது. செயல்படாமை என்பது செயலின் மையத்தை மிகக் குறைந்த அளவு சக்தியைச் செலவிட்டு, சாத்தியமாகும் இயல்பான, நியாயமான குறுக்குவழியில் அடைவது என்று பொருள். சுழித்தோடும் நதியில் எதிர்நீச்சல் போட்டு நதியின் கரையை அடைவதைவிட நதியின் போக்குக்கு ஒப்புக்கொடுத்துக் கரையேறுவதுதான் செயல்படாமை. அங்கே நதியின் செயல்தான் அதிகம். அதன் செயலை நாம் பயன்படுத்திக்கொள்கிறோம்.

எதிரெதிர் நிலைகள்:

எதிரெதிர் நிலைகள் என்று தோன்றுபவற்றை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையாக, நேரெதிரானவையாக தாவோயிஸம் கருதுவதில்லை. எல்லாவற்றையும் ‘வானவில் தொடர்ச்சி’யாகத்தான் தாவோ பார்க்கிறது. அதாவது, வானவில்லில் ஒவ்வொரு நிறமும் தொடங்கும் இடத்தையும் முடியும் இடத்தையும் நம்மால் தெளிவாகப் பிரித்தறிய முடியாது. ஆனால், முதல் நிறத்தையும் ஏழாவது நிறத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இரண்டும் தொடர்பற்றவைபோல் தோன்றும். எனினும், எந்த இடத்தில் அடுத்த நிறம் பிறக்கிறது, மாறுபடுகிறது என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. நன்மை - தீமை, அழகு - விகாரம், உயர்வு - தாழ்வு என்று நேரெதிராக வைத்திருக்கும் எல்லாமே ‘வானவில் தொடர்ச்சி’தான். இதனால் தாவோயிஸம் எல்லாவற்றுக்கும் ஒற்றைத்தன்மையைக் கொடுப்பது போலவும், பன்மைத்தன்மைக்கு எதிரானது போலவும் சிலருக்குத் தோன்றலாம். தாவோயிஸம் எல்லாமே ஒன்றுதான் என்று கருதவில்லை; எல்லாவற்றிலும் ஒன்றின் தொடர்ச்சியைக் காண்கிறது. 

எதையும் வரையறைக்குள்ளே அடைத்து மற்றவற்றோடு தொடர்பற்றதாகக் கருதுவதைத்தான் தாவோயிஸம் எதிர்க்கிறது.

வளர்ச்சிக்கு எதிரானதா தாவோயிஸம்?

இல்லை. எல்லாவற்றிலும் இயல்பான, நியாயமான ஒரு வளர்ச்சியை மட்டுமே தாவோயிஸம் ஆதரிக்கிறது. இன்றைய வளர்ச்சி பெரும்பாலும் நுனிமரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவதாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட வளர்ச்சியையே தாவோயிஸம் எதிர்க்கிறது. இதனால்தான் பிரம்மாண்டம், கடமை, சாதனை போன்றவற்றுக்கு மாற்றாக மிதம், இயல்பு,அன்பு போன்றவற்றை தாவோயிஸம் முன்வைக்கிறது.

‘தாவோ தே ஜிங்’ உலகப் பொதுமறையா?

அப்படி எந்த ஒரு நூலையும் சொல்லவே முடியாது. அப்படி எந்த ஒரு நூலையும் யாரும் எழுதவும் முடியாது. எல்லா நூல்களும் மனித இயல்பின், மனித அறிவின் உன்னதங்களையும் பலவீனங்களையும் ஒருங்கே கொண்டிருக்கக்கூடியவை. எல்லா நூல்களும் எழுதப்பட்ட காலம், இடம் போன்ற சூழல்களோடு பின்னிப்பிணைந்தவை. மிகச் சில நூல்களே காலத்தையும் இடத்தையும் வென்று நிற்பவை. அப்போதும்கூட அவை நூற்றுக்கு நூறு சதவீதம் பொருத்தமாக இருக்காது. நூல்கள் எல்லாமே வழிகாட்டிகள்தான். நடக்க வேண்டியது நாம்தான்!

‘தாவோ-பாதை புதிது’ தொடரை எழுத ஆரம்பிக்கும்போது மிகவும் தயக்கத்துடனே இருந்தேன். உலகின் மிகவும் தொன்மையான தத்துவங்களில் ஒன்று தாவோயிஸம். 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் லாவோ ட்சு என்ற முதிய ஞானி எழுதிய ‘தாவோ தே ஜிங்’ என்ற சிறிய நூலிலிருந்துதான் தாவோயிஸம் கிளைவிட்டுப் பரவி இன்று ஏராளமான பிரிவுகள், கோடிக்கணக்கான மக்களை உள்ளடக்கி பிரம்மாண்டமான வளர்ச்சி பெற்றிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பல்லாயிரக்கணக்கான நூல்களை தாவோயிஸம் கொடுத்திருக்கிறது. உலகில் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் ‘தாவோ தே ஜிங்’ மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. உலகின் மிக அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட சீனாவில் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தாவோயிஸம் வேரூன்றியிருக்கிறது. தாவோயிஸத்தின் தொன்மையையும் விரிவையும் இந்து மதம், பவுத்தம்,ஜொராஸ்டிரிய மதம், யூத மதம் ஆகியவற்றுடன் மட்டுமே ஒப்பிட முடியும். அப்படிப்பட்ட தாவோயிஸத்தைப் பற்றி எழுத வயது, அனுபவம், புரிதல் எதுவுமே எனக்கு போதாது என்பதுதான் என் தயக்கத்தின் காரணம்.

வயது, அனுபவம், புரிதல் போன்ற காரணங்களால் தாவோயிஸத்தைப் பற்றிய இந்தத் தொடரை எழுதுவதற்குத் தயங்கினாலும் வேறு வகையில் ஒரு தைரியத்தை லாவோ ட்சுவே எனக்குத் தந்தார். ‘தாவோ தே ஜிங்’ நூலைப் படிக்கும் யாருமே ஒரு விஷயத்தை உணர முடியும். ஒரு வேதநூல் போல் அல்ல, நமக்காக நாம் உருவாக்கிக்கொள்ளும் தனிப்பட்ட நூலாகவே ‘தாவோ தே ஜிங்’கைப் படிக்க முடியும். அவரவருக்கான தாவோயிஸத்தை அவரவர் உருவாக்கிக்கொள்ள வேண்டும். 2,500 ஆண்டுகளுக்கு முன்பு லாவோ ட்சு சொன்ன வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன என்று தேடுவதை விட்டுவிட்டு, இன்றைய வாழ்க்கையோடு தாவோயிஸத்தை எந்தெந்த வகைகளில் தொடர்புபடுத்த முடியுமோ அந்தந்த வகைகளில் தொடர்புபடுத்திப் பார்க்கலாம் என்று திட்டமிட்டுக்கொண்டேன். இன்றைய வாழ்க்கைக்குப் பொருத்தமில்லாத, அல்லது இன்றைய வாழ்க்கைக்கு ஏற்றபடி தன் அர்த்தத்தை விரிவுபடுத்திக்கொள்ளாத தத்துவங்களை தத்துவ அருங்காட்சியகத்தில் மட்டுமே வைத்து அழகுபார்க்க முடியுமே தவிர, வாழ்க்கையில் வாழ்ந்துபார்க்க முடியாது.

இன்றைய வாழ்க்கையோடு தாவோ எந்தெந்த இடங்களில் பொருந்துகிறது என்று நான் பொருத்திப்பார்க்க முயன்றதன் விளைவுதான் இந்தத் தொடரின் ஒவ்வொரு அத்தியாயமும். தாவோயிஸத்தைப் பிரதானமாக ஆன்மிகக் கண்ணோட்டத்தில் அணுக முடியும் என்றாலும் அது கத்தி மேல் நடக்கும் வித்தை. ஆகவே, சொந்தத் தத்துவத்தை வாரி இறைப்பதையோ, ஆன்மிக ஞானத்தை அள்ளித்தெளிப்பதையோ முற்றிலும் தவிர்த்துவிட்டு, நடைமுறை வாழ்க்கை, கலை, இலக்கியம், அறிவியல் ஆகியவற்றின் துணையோடு ‘தாவோ தே ஜிங்’ நூலிலிருந்து தேர்ந்தெடுத்த சில பாடல்களை மட்டும் அணுக முயன்றேன். இதில் எந்த அளவுக்கு நான் வெற்றி பெற்றிருக்கிறேன் என்பதை வாசகர்களாகிய நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.

‘தாவோ தே ஜிங்’ என்ற அரிய நூலைத் தமிழில் மொழிபெயர்த்த கவிஞர் சி.மணிக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். தாவோவைப் புரிந்து கொள்ளும் இந்த சிறு பயணத்தில் தொடர்ந்து என்னோடு கைகோத்து வந்த ‘காமதேனு’ வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

(நிறைவடைகிறது)

-ஆசை

x